சின்னத்திரை நகைச்சுவை கலைஞர் கோவை குணா மரணம் குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோவை குணா. சிவாஜி, கவுண்டமணி, ஜனகராஜ் உள்ளிட்டோரின் குரல்களை அவர்களின் பாடி லாங்வேஜோடு பெர்ஃபார்ம் செய்து கைதட்டல்களை குவித்தார். இதற்கிடையே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இந்நிலையில், அவர் பங்கேற்ற அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாப், கோவை குணா மரணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “கோவை குணா அகால மரணமடைந்துவிட்டார். அவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தெரியும். ஆள் சும்மா கும்முன்னு இருப்பார். கோட் சூட் போட்டுக் கொண்டு வந்தா அப்படி பெஃர்பாம் பண்ணுவார். அவருடைய நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் நடுவராக இருந்தேன். அதன் பிறகு நானும் அந்த நிகழ்ச்சியை தயாரித்தேன். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களிலேயே அவர் தான் நம்பர் ஒன் டேலண்ட். இன்றைக்கு பலரும் பண்ணும் கவுண்டமணி டான்ஸ் உள்ளிட்ட பலவற்றை, அவர் தான் முதலில் செய்தார். அவ்வளவு அற்புதமாக கவுண்டமணியை பிரதிபலிப்பார். மிமிக்ரி மட்டுமல்லாது, சொந்தமாக நகைச்சுவைகளை செய்வார். தத்ரூபமாக எளிமையான கதாபாத்திரங்களை அப்படியே பெஃர்பாம் பண்ணி காட்டுவார்.
அதன் பிறகு என்னுடைய நண்பர் எடுத்த திரைப்படத்தில், நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் குணாவை நான் பரிந்துரைத்தேன். இவரை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்தது. இவருடைய நடிப்பை பிடித்து போய் நல்ல சம்பளம் கொடுத்தனர். தினமும் நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனாலும் நான் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் சொல்வது இதுதான். கெட்ட பழக்கங்கள் அளவோடு இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் படகு செல்லும். ஆனால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஒன்றும் பண்ண முடியாது. அப்படித்தான் அளவுக்கு அதிகமாக கெட்ட பழக்கம் இருந்தால், அது மிகவும் மோசமானது.
இந்த நேரத்தில் இதை நான் பேசக்கூடாது, இருப்பினும் இதை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இண்டஸ்ட்ரியில் நிறைய பேர் இப்படி காலமாகிறார்கள். அதில் பலரையும் இப்படியான கெட்ட பழக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. கோவை குணா அவ்வளவு பெரிய திறமை வாய்ந்தவர். இவர் சரியா இருந்து, சரியான வழியில் போயிருந்தா, இன்னொரு சந்திரபாபு அவர். பாடுவார், ஆடுவார், ஒரிஜினலாக பெர்ஃபார்ம் பண்ணுவார், இன்னொருவரை இமிடேட் செய்வார். கடைசி நேரத்தில் அவர் உறவுக்காரர்களுடன் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதனால் பேசாமல் இருந்தேன். சின்னத்திரையிலிருந்து பெரியதிரை வந்தவர்களில் பெரிய இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர் அவர், ஆனால் வரவில்லை. இனி எங்க வரப்போறாரு. அவர் உயர உயர போகணும் என நினத்தேன். ஆனால் இவ்வளவு உயரத்துக்குப் போவார் என நினைத்துப் பார்க்கவில்லை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.