விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் போல இந்த இரண்டாவது பகமும் வெற்றியடையுமா என்பதை பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் பிச்சைக்காரன். அந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைப்படைத்தது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இதில் அவருடன் ராதாரவி, YG.மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே 7வது பெரும் பணக்காரர் விஜய் ஆண்டனி. அவர் தன்னுடைய நண்பர் தேவ் கில், ஆடிட்டர் ஜான் விஜய், குடும்ப மருத்துவர் ஹரிஷ் பெரேடி ஆகியோரை மட்டும் நம்புகிறார். ஆனால் அவர்கள் விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அதற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சை முறையை தேர்வு செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தார்களா? யாருடைய மூளையை பணக்காரர் விஜய் ஆண்டனிக்கு மாற்றினர்? அவர் யார்? சதி திட்டம் நிறைவேறியதா? இறுதியில் என்ன ஆனது என்பதே பிச்சைக்காரன்-2.
முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்மந்தமமில்லாமல் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக புதிய கதையை எழுதியுள்ளார் விஜய் ஆண்டனி. மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பதை தன்னுடைய கதையின் முக்கிய பங்காக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜய் ஆண்டனி. விஜய் குருமூர்த்தி என்ற விஜய் ஆண்டனிக்கு, சத்யா என்ற விஜய் ஆண்டனியின் மூளையை மாற்றுகின்றனர். சத்யாவிற்கு சிறு வயதில் காணாமல் போன தங்கையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் சதித்திட்டதால் அனைத்தும் மாறுகிறது. இருந்தாலும் பாணக்காரரின் உடலில் இருந்துகொண்டு தன்னுடைய நினைவுகளால் தங்கையை எப்படி கண்டுபிடிக்க போகிறார். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை எப்படி பழி வாங்குவார் என்று திரைக்கதை விறு விறுப்பாக கதை நகரும் என ஆரம்பத்தில் தோன்ற வைக்கும். ஆனால் படம் முதல் பாதி ஒரு வகையிலும், இரண்டாம் பாதி வேறு வகையிலும் நகர்கிறது.
முதல் பாதியில் இடம்பெறும் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கும் படியாக உள்ளன. குறிப்பாக, சத்யா யார் என்று தெரியும் இடம் ரசிக்கலாம். ஆனால் அந்த காட்சியை இன்னும் சுவரஸ்யமாக எடுத்திருக்கலாம். மேலும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு இயக்குனர் விஜய் ஆண்டனி அதிகம் நம்பியுள்ளார். அதற்காக ஏராளமான காட்சிகளை சேர்த்துள்ளார். ஆனால் அவை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இருந்தாலும் முதல் பாதி பெரும் ஏமாற்றம் இல்லாமலேயே முடிகிறது.
இரண்டாம் பாதியை பொருத்தவரையில் கதை அதனுடைய பாதையில் இருந்து விலகி சென்றுவிடுகிறது. தேவை இல்லாத பல காட்சிகள் உள்ளன. ரசிகர்களையும், பணக்காரர்களையும் யோசிக்க வைக்கும் தொனியில் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த காட்சிகள் நீண்ட நேரம் வருவது போன்ற உணர்வை கொடுத்துவிடுகின்றன. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர். பாடல்களை பொருத்த வரை, பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. மேலும் படத்தில் இடம்பெறும் VFX காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளன. அதேபோல் மூளை மாற்று அறுவை சிகிச்சை படத்தில், உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு விஜய் ஆண்டனி எதற்கு என்ற கேள்வியை எழுப்புகிறது. அந்த சத்யா கதாபாத்திரத்தில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். அதில் தெளிவு இல்லாமல் உள்ளது. இது போன்ற பல குறைகள் படத்தில் இடம்பெறுகின்றன.
பிச்சைக்காரன்-2 படத்துடையை திரைக்கதை இந்தியாவின் பெரும் பணக்காரன் மற்றும் பிச்சைக்காரன் வாழ்க்கையை சம்மந்தப்படுத்தி, தொலைத்த தங்கச்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கு சென்று, இறுதியில் பணமுள்ளவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்ற இடத்தில் முடிகிறது.
கொடிய விஷம் கொண்ட பாம்புவிற்கு இறையாகும் எலியை, ஒரு எளியவன் வாழ்க்கை பின்னணியில் செண்டிமெண்டுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே ஒர்கவுட் ஆகும். மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 ஒரு பொருத்தமில்லா ஒற்றுமை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Movie review