முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாற்றப்பட்டதா நாவல் கதை? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பொன்னியின் செல்வன் 2.? திரை விமர்சனம் இதோ!

மாற்றப்பட்டதா நாவல் கதை? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பொன்னியின் செல்வன் 2.? திரை விமர்சனம் இதோ!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan 2 Review: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? விமர்சனம் இதோ!

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது? புத்தகத்தில் இருந்த முடிவை மாற்றினாரா மணிரத்னம்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருண்மொழிவர்மன், வந்தியத் தேவன் ஆகியோர் கடலில் மூழ்கும் இடத்தில் முடிவடையும். அவர் இறந்துவிட்டதாக சோழப்பேரரசு முழுவதும் செய்திகள் பரவும். இதனால் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு விடை சொல்லும் விதமாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகியுள்ளது.

சோழப் பேரரசின் இளவரசன் அருண்மொழிவர்மன் மீண்டானா? ஆதித்த கரிகாலனை நந்தினியின் பழி வாங்கும் திட்டம் என்ன ஆனது? வந்தியத்தேவன் குந்தவையிடம் செய்தியை கொண்டு சேர்த்தானா? சோழப் பேரரசின் அரசனானது யார்? உள்ளிட்டவற்றை 2 மணி நேரம் 44 நிமிடங்களில் மணிரத்னம் கூறியுள்ளார்.

முதல் பாகம் புதிய புதிய கதாபாத்திரங்கள், அவற்றிற்கான அறிமுகம் என காட்சிகள் விறு விறுப்புடன் சுவாரஸ்யம் குறையாமல் நகரும். இந்த இரண்டாவது பாகத்தின் தொடக்கமே கதைக்குள் நுழைந்துவிடும். அதிலும் முதல் 15 நிமிடங்கள் கரிகாலன், நந்தினி ஆகியோரின் இளமை கால காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவை ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன. அதேசமயம் நந்தினியின் சூழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதையும் அதன் மூலம் விளக்கியுள்ளார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருக்கும் முக்கிய காட்சிகளை முடிந்தவரை இரண்டாம் பாகத்தில் சேர்த்துள்ளனர். இருந்தாலும் புத்தகத்தை படிக்காதவர்களுக்கு, கோர்வையாக இல்லாமல் ஆங்காங்கே காட்சிகள் நகர்வது போன்ற உணர்வை கொடுக்கிறது.

காட்சி அமைப்புகளை பொறுத்தவரையில், அதிக செட் இல்லாமல் உண்மையான கோட்டைகளில் பெரும்பாலான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெரும் செலவும், படப்பிடிப்பு நாட்களும் குறைந்துள்ளன. ஆனால் காட்சிகள் வரலாற்று படத்திற்கான உணர்வை அப்படியே பிரதிபலிக்கின்றன. சில இடங்கள் பிரமாண்டமாகவும் தெரிகின்றன. அதில் மணிரத்னமும் அவருடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் வெற்றியடைந்துள்ளனர். அத்துடன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாகவே உள்ளன.

இந்த இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான காட்சிகள் குறைவு. ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வு ஏற்படாது. படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் இடம்பெறுவது போன்றே தெரியும். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனைவரும் ஸ்கோர் செய்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு ரவிவர்மாவின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவை முக்கிய பலம். அவர்களை விட படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் பணி அளப்பரியது. ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகத்தை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக புத்தகத்தின் சாராம்சம் குறையாமல் எடிட் செய்து கொடுத்துள்ளார்.

Also read... Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 பட பாடல்கள் ஒரு லிஸ்ட்!

இந்த பாகத்தில் முதல்பாகம் போல் வந்தியத்தேவன் - நம்பி நகைச்சுவை, காதல் காட்சிகள் குறைவு. மேலும் முழுக்க முழுக்க கதைகளத்தை சுமந்து செல்வதால் இரண்டாம் பாகம் மொதுவாக செல்வது போன்ற ஒரு உணர்வை கொடுக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் பார்வையாளர்களை சோர்வடைய செய்யவில்லை.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை சுறுக்கி படமாக்கியதால் சில முக்கிய பதிவுகளை மணிரத்னம் மாற்றியுள்ளார். குறிப்பாக சேந்தன் அமுதந்தான் உண்மையான உத்தம சோழன் என்பதை மணிரத்னம் மறைத்துள்ளார். சேந்தன் அமுதனுக்கு பதிலாக மதுராந்தகனே உத்தம சோழன். அவனே சோழ பேரரசை 14 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என மாற்றியுள்ளார். இந்த கதை பெரியது என்பதால் அதற்கு இன்னும் சில காட்சிகள் வைக்க வேண்டும். அதை குறைக்கவே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர். ஆனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்களும், வரலாற்று ஆர்வலர்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பது இந்த நாள் வரை தெரியாது. அந்த வகையிலேயே கல்கி தன்னுடைய புத்தகத்திலும் எழுதியிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் வேறு விதமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் அதிக நிறைகளும் சில குறைகளும் இருந்தாலும், போர்க்களத்தில் நிச்சயம் வென்று வசூலில் ஆட்சி செய்யும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Ponniyin selvan