விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருப்பவர் மதுரா. இவரது அம்மா இலங்கை தமிழர், அப்பா ஜெர்மனியை சேர்ந்தவர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் மதுரா. “நான் ஜெர்மனி நாட்டில் பெர்லின் மாநகரில் பிறந்தேன். என்னுடைய அப்பா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், என்னுடைய தாயார் இலங்கை யாழ்ப்பாண தமிழ் பெண். நான் ஜெர்மன் நாட்டில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சிப்பட்டறையில் பணியாற்றுகிறேன்.
என்னுடைய சிறு வயதிலிருந்து தமிழ் மொழி, அதை சார்ந்த கலைகளான பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். தமிழ் மொழியில் உயர்தர கல்வியை முடித்து, ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் உள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றுகிறேன். சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் ஜெர்மனில் மூன்று இசை வீடியோக்களில் நடித்துள்ளேன். அந்த வீடியோக்களைப் பார்த்து தான் என்னை யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
முன்பே கூறியபடி அம்மாவின் பூர்வீகம் இலங்கை என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதாலும் இதை என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது. நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும் இது அமையும் என்று கருதுகிறேன்” என்ற மதுரா, விஜய் சேதுபதி மற்றும் விவேக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அழகிய தருணங்கள் குறித்து நினைவுக் கூர்ந்தார்.
”என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது, அதை புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார் விஜய் சேதுபதி. அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு இயக்குநருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு விவேக் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
படப்பிடிப்பு இடைவேளையில் பியானோவில் முதல்வன் படத்தின் குறுக்கு சிறுத்தவளே பாடலை வாசிக்க கற்று கொடுத்தார், அதுமட்டுமல்லாமல் நிறைய இளையராஜா பாடல்களை வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். விவேக் சாரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது” என்றார்.
தமிழ் படத்தில் நடித்ததை பெருமையாகக் கருதும் மதுரா தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்த விரும்புகிறாராம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay Sethupathi