முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அண்ணாவின் வேலைக்காரி படத்தை பார்த்து உருவாக்கம்.. படுதோல்விக்கு காரணமான கதை சறுக்கல்.. 'விஜயகுமாரி' படம் வீழ்ந்த கதை

அண்ணாவின் வேலைக்காரி படத்தை பார்த்து உருவாக்கம்.. படுதோல்விக்கு காரணமான கதை சறுக்கல்.. 'விஜயகுமாரி' படம் வீழ்ந்த கதை

விஜயகுமாரி

விஜயகுமாரி

விஜயகுமாரியில் நாயகன் விஜயனாக கே.ஆர்.ராமசாமியும், நாயகி இளவரசியாக டி.ஆர்.ராஜகுமாரியும், பிரதம மந்திரியாக செருகுளத்துர் சாமாவும், அவரது மகனாக பாலையாவும் நடித்திருந்தனர்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு படம் வெற்றி பெற்றால் அதுபோன்ற கதையில் ஒரு டஜன் படங்கள் உடனடியாக தயாராகும். கதை மட்டுமின்றி கதாபாத்திரங்களையும் அதுபோல் படைத்து ரசிகர்களை இம்சிப்பதில் திரையுலகினருக்கு அப்படியொரு கொண்டாட்டம். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி இவர்கள் எடுக்கும் படங்கள் எதுவும் ஓடியதில்லை. இருந்தும் ஓடியப் படங்களைப் போலச் செய்வதில் திரையுலகினர் சோர்வடைந்ததேயில்லை. இது தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது.

புராண, இதிகாச கதைகளை நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் சினிமா அறிமுகமானதும், நாடகக் கதைகளையே திரைப்படங்களாக்கினர். பத்துப் படங்கள் வந்தால் ஒன்பது புராண, இதிகாச கதையாக இருக்கும். மீதியிருக்கும் ஒன்று இந்தக் கதைகளால் ஊட்டம் பெற்ற நாட்டார் கதையாக இருக்கும். இப்படியொரு சூழலில் அண்ணாவின் சமூக சீர்த்திருத்த நாடகமான வேலைக்காரியை ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு என்கிற சோமசுந்தரம் 1949 இல் திரைப்படமாக எடுத்தார். படம் தமிழ்நாடு முழுவதும் அபராமான வரவேற்பைப் பெற்றதுடன் திரைத்துறையில் ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த வெற்றியால் களிப்படைந்த ஜுபிடர் சோமு, வேலைக்காரியைப் போன்ற ஒரு படத்தை மறுபடியும் எடுக்க ஆசைப்பட்டார். வேலைக்காரியை இயக்கிய கதாசிரியரும், இயக்குனருமான ஏஎஸ்ஏ சாமியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் வேலைக்காரி என்ற சமகால கதையை, முன்பு ஒரு காலத்தில் ஒரு தேசத்தை ஒரு ராஜா ஆண்டு வந்தான் என்ற சரித்திரப் பின்னணியில் எடுத்தார். வேலைக்காரியை பிரதிபலிக்கும் வகையில் விஜயகுமாரி என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டது. வேலைக்காரியில் நடித்த கே.ஆர்.ராமசாமியையே இதிலும் பிரதான வேடத்தில் நடிக்க வைத்தனர். முந்தையப் படத்தைப் போலவே புரட்சிகர எண்ணம் கொண்ட கதாபாத்திரம்.

அனைத்தையும் சரிவர திட்டமிட்டவர்கள் கதை விஷயத்தில் சறுக்கினர். ஒரு அரசர், அவருக்கு ஒரு அழகான மகள், சுயநலமும், குயுக்தியும் கொண்ட பிரதான மந்திரி, அவருக்கு அறிவிலியான ஒரு மகன். இளவரசியை தனது மகனுக்கு திருமணம் முடித்து, நாட்டை சொந்தமாக்கத் துடிக்கும் பிரதம மந்திரிக்கு வில்லனாக, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பும் வீர இளைஞன்,  அவனை காதலிக்கும் இளவரசி, அவன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி, நாடுகடத்தும் மந்திரி என  கதை செய்தனர்.

இதுவரை கதை ஓகேதான். இதே கதையில் அதற்கு முன்பும், பின்னும் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. ஆனால், இதற்குப் பிறகு தனித்தீவில் நாயகன் மாட்டிக் கொள்வது, அந்தத் தீவின் ராணி அவனை கொடுமைப்படுத்துவது, மீனவ சகோதரன், சகோதரி அதிசய கல்லைக் கொண்டு இளைஞனை காப்பாற்ற முயல்வது, இந்த நேரத்தில் இளவரசியைப் போல் தோற்றமுள்ள ஒருத்தி, இளவரசி என்று சொல்லி அரண்மனைக்குள் நுழைவது என்று பல கிளைக்கதைகளை திணித்து ரசிகர்களை திணறடித்தனர். படத்தை ஓரளவு காப்பாற்றியது இசையும் பாடல்களும். படத்தில் மொத்தம் 14 பாடல்கள். லாலு.. லாலு... லாலு... என்ற பாடலுக்கு வைஜெயந்திமாலா ஆடினார். வெஸ்டர்ன் நடனம். சி.ஆர்.சுப்பிரமணியன் இசையில், கே.டி.சந்தானம் இந்தப் பாடலை எழுதினார்.

பொழுது விடிந்தால் ராஜா, ராணி நாம்... என்ற உடுமலை நாராயணகவியின் பாடலுக்கு நாயகி டி.ஆர்.ராஜகுமாரி ஆடினார். இதுவும் வெஸ்டர்ன் நடனம். ராஜகுமாரியின் உடல்வாகுக்கு வெஸ்டர்ன் நடனம் ஒத்துவிரவில்லை, ரசிகர்களை அவரது நடனம் திரையரங்கில் சிரிக்க வைத்தது என ராண்டர் கை எழுதியுள்ளார். பத்மினி, லலிதா சகோதரிகளும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தனர். கீதானாந்தம் பேரின்பம்..., காட்சி யாவையும்... ஆகிய இரு பாடல்களுக்கு சி.எஸ்.ஜெயராமன் இசையமைத்தார்.

விஜயகுமாரியில் நாயகன் விஜயனாக கே.ஆர்.ராமசாமியும், நாயகி இளவரசியாக டி.ஆர்.ராஜகுமாரியும், பிரதம மந்திரியாக செருகுளத்துர் சாமாவும், அவரது மகனாக பாலையாவும், விஜயனின் தங்கையாக குமாரி கமலாவும், மீனவராக நம்பியாரும் நடித்திருந்தனர்.

வேலைக்காரியைப் போல் ஒரு படத்தை எடுக்க நினைத்து, வேலைக்காரி வெளியானதற்கு அடுத்த வருடமே அப்படியொரு படத்தை எடுத்து வெளியிட்டது, புத்திசாலித்தனம் இல்லை என்பதை ரசிகர்களின் புறக்கணிப்பு உணர்த்தியது. 1950 மார்ச் 18 வெளியான விஜயகுமாரி  இன்று 73 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema