முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கே.சங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பக்திப் படம் வருவான் வடிவேலன்

கே.சங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பக்திப் படம் வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன்

ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை போன்ற படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருகாலத்தில் தமிழில் வெளியான படங்களில் 90 சதவீதம் புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன. புராண, இதிகாச கதைகளை மக்கள் ரசித்துப் பார்த்தனர். இந்தக் கதைகளே நாடகமாகவும் நடத்தப்பட்டன என்பது ஒரு காரணம். அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்திப் படங்களுக்குப் பிறகு பக்திப் படங்கள் எடுப்பதில் தொய்வு ஏற்பட்டது. எனினும், சிறப்பாக எடுக்கப்பட்ட மதுரை வீரன், சம்பூர்ண ராமாயணம் போன்ற பக்திப் படங்கள் ஓடின.

ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை போன்ற படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டன. திருவிளையாடலும், சரஸ்வதி சபதமும் தமிழர்கள் வாழ்வில் ஓர் அங்கமாயின. எழுபதுகளில் அன்னக்கிளி, 16 வயதினிலே, உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் வெளியாகி மக்களின் ரசனையில் மாற்றத்தை ஏற்படுத்தின. எம்ஜிஆர், சிவாஜி காலகட்டம் ஓய்ந்து கமல், ரஜினி தலைதூக்கிய நேரம் அது. பக்திப் படங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன.

முழுக்க புராண, இதிகாசத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் மறைந்து, கடவுளின் மகிமையை நிகழ்காலத்தில் பறைசாற்றும் படங்கள் எடுக்கப்பட்டன. அதாவது, நிகழ்காலத்தில் தனது பக்தருக்கு  ஒரு பிரச்சனை வருகையில் கடவுள் எப்படித் தோன்றி தனது பக்தரை காப்பாற்றுகிறார் என்ற ரீதியில் கதைகள் புனையப்பட்டன. அப்படி வந்தப் படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே.சங்கர் இயக்கிய வருவான் வடிவேலன்.

இதில் லதா உமா என்கிற முருக பக்தையாக நடித்திருந்தார். கோடீஸ்வர தந்தையின் ஒரே மகளான உமா கோயில் வாசலில் பிச்சையெடுத்து, அதில் வாழ்ந்து வருவாள். அவளுக்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கும். அவளது கணவன் பாஸ்கர் ஒரு பொம்பளை பொறுக்கி. உமாவிடம் வம்புக்கிழுத்து அவளிடமே அடி வாங்கியிருப்பான். அந்த அவமானத்திற்குப் பிறகும் அவளைத் தேடி வந்து பெண் கேட்க, உமா அவனை மணந்து கொள்வாள்.  முதலிரவு அன்று, வள்ளி, தெய்வானைக்கு கோயிலில் செய்த அதே அலங்காரத்தை எனக்கும் செய்துப் பார்க்க வேண்டும் என்று உமா சொல்ல, அவ்வளவுதானே, செய்திட்டாப் போச்சு என்று பாஸ்கர் அவளுக்கு வள்ளி, தெய்வானைக்குப் போடும் அதே ஆபரணங்களை போட்டுவிடுவான். அந்த ஆபரணங்களை உமா கோயில் உண்டியலில் போட்டுவிடுவாள். பாஸ்கர் ஒரு பொம்பளை பொறுக்கி மட்டுமில்லை, கோயில் சிலை, நகைகளை திருடி விற்பவன் என்பது உமாவுக்கு தெரியும். அவன் கொள்ளையடித்த கோயில் நகைகள் மறுபடியும் கோயிலை சென்று சேரவே அவனை திருமணம் செய்திருப்பாள். அந்த கல் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா? கல்லை நம்பினா பத்து மாசத்தில் கல்லில் அம்மியோ குழவியோதான் உனக்குப் பிறக்கும் என பாஸ்கர் சொல்ல, முருகனே என் வயிற்றில் வந்து பிறப்பான் என உமா சபதம் செய்ய, அதனைத் தொடர்ந்துதான் உமா கோயிலில் பிச்சையெடுத்து சாப்பிட ஆரம்பிப்பாள்.

இந்த நேரத்தில் பாஸ்கர் செங்கமலம் என்கிற நாட்டியக்காரியுடன் பழக ஆரம்பித்திருப்பான். செங்கமலம் நல்லவள். கோயிலில் நடனமாடுகிற கடவுள் பக்தை. ஒருமுறை கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து மயக்கமாகும் உமாவை வீட்டிற்கு அழைத்து வந்து உதவி செய்வாள். அந்த நேரத்தில் குடிபோதையில் வரும் பாஸ்கர், உமாவை செங்கமலம் என நினைத்து அவளுடன் கூடுவான். செங்கமலத்திற்கு விஷயம் தெரிந்துவிடும். உமா கர்ப்பமாவாள். செங்கமலத்தின் தந்தை வேலகிரியின் மனதை மாற்றி, உமாவின் கர்ப்பத்தை கலைக்கச் சொல்வான் பாஸ்கர். அவரும் சாமியார் வேஷத்தில் வந்து கர்ப்பத்தை கலைக்கிற மருந்தை உமாவுக்கு தருவார். அதையும் மீறி குழந்தைப் பிறக்கும். அந்தக் குழந்தையை தன்னிடம் எடுத்துவரச் சொல்வான் பாஸ்கர். வேலகிரி குழந்தையை எடுத்து வருகிற போது, சந்தர்ப்ப சூழலால் இன்னொருவரிடம் குழந்தை கிடைக்கும். அவர் அக்குழந்தையை வளர்த்து வருவார்.

பாஸ்கர், வேலகிரி ஆகியோர் எப்படி தங்களின் தவறை உணர்ந்து திரும்புகிறார்கள், குழந்தை வடிவில் இருக்கும் பால முருகன் அதற்கு எப்படி உதவி செய்கிறார் என்பது கதை. இதில் டாக்டராக முத்துராமனும், குழந்தையை வளர்க்கும் நாகேஷின் சகோதரராக விஜயகுமாரும், அவரது மனைவியாக படாபட் ஜெயலட்சுமியும் நடித்திருந்தனர்.  உமாவாக பிரதான வேடத்தில் லதாவும், பாஸ்கராக ஜெய்கணேஷும், செங்கமலமாக ஜெயசித்ராவும் நடித்திருந்தனர்.

Also read... பெரியபாளையத்து பவானி அம்மனாக ஜெயலலிதா நடித்த சக்திலீலை

அபலையான தனது பக்தைக்கு எப்படி முருகன் அருள்புரிகிறார் என்பதே வருவான் வடிவேலன் படத்தின் கான்செப்ட். புராணம், இதிகாசம் என புரட்டாமல் நிகழ்கால சமூகத்தில், தனது பக்தைக்கு கடவுள் எப்படி அருள்புரிகிறார் என்பதை படம் காடிட்டியது. பழைய பக்திப் படங்களுக்கும் பராசக்திப் பிறகான பக்திப் படங்களுக்குமான பிரதான வித்தியாசம், பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றுகிற கதாபாத்திரம், நிகழ்வு படத்தில் ஒரு காட்சியிலாவது இடம்பெறும். வருவான் வடிவேலு படத்தில் தேங்காய் சீனிவாசனின் கதாபாத்திரம் பக்தியை காசாக்கிற வேலையைச் செய்யும். விபூதி பூசுனா வியாதி குணமாகாது. வியதிக்குத் தகுந்தபடி கும்பாபிஷேக சீட்டு எடுத்தாதான் வியாதி குணமாகும். தலைவலிக்கு ஒரு ரூபா சீட்டு, வயித்து வலிக்கு இரண்டு ரூபா சீட்டு என வியாதிக்குத் தகுந்தபடி காசு கறப்பார்.

எழுபதுளில் வெளிவந்த பக்திப் படங்களில் பரவலான வரவேற்புடன் வெற்றி பெற்ற முக்கியமான திரைப்படம் வருவான் வடிவேலன். படத்தின் இரண்டாம் பாதியில் மலேசியாவில் பல காட்சிகளை படமாக்கியிருந்தனர். அதுவும், தமிழ்க் கடவுளைப் பற்றிய படம் என்பதும் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. 1978 மே 15 வெளியான வருவான் வடிவேலன் இன்று 45 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema