முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வைரக் கடத்தல் பின்னணியில் ஜெயலலிதா நடித்தப் படம்... அனைத்து மொழிகளிலும் ஹிட்டான சுவாரஸ்யம்...

வைரக் கடத்தல் பின்னணியில் ஜெயலலிதா நடித்தப் படம்... அனைத்து மொழிகளிலும் ஹிட்டான சுவாரஸ்யம்...

வைரம்

வைரம்

1972 டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியில் விக்டோரியா நம்பர் 203 என்ற படம் வெளியானது. கே.ஏ.நாராயண் எழுதிய கதையில் அசோக் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். பிரிஜ்மோகன் படத்தை இயக்கியிருந்தார். இவர் இந்தியின் புகழ்பெற்ற இயக்குனர் கம் தயாரிப்பாளர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

1972 டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியில் விக்டோரியா நம்பர் 203 என்ற படம் வெளியானது. கே.ஏ.நாராயண் எழுதிய கதையில் அசோக் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். பிரிஜ்மோகன் படத்தை இயக்கியிருந்தார். இவர் இந்தியின் புகழ்பெற்ற இயக்குனர் கம் தயாரிப்பாளர்.

விக்டோரியா நம்பர் 203 வைரக்கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக திருட்டை மையப்படுத்தியப் படங்களுக்கு இயல்பாகவே சில சுவாரஸியங்கள் உண்டு. இந்தப் படத்தில் நகைச்சுவையும், காதலும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும். இதனால் படம் இந்தியில் சூப்பர் ஹிட்டானது. அசோக் குமார், சாய்ரா பானு நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். 1972 இல் வெளியான படங்களில் சலீம் - ஜாவெத் திரைக்கதையில் உருவான சீதா அவுர் கீதா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எங்க வீட்டுப் பிள்ளையை உல்டா செய்து இதன் திரைக்கதையை எழுதியிருந்தனர். எங்க வீட்டுப்பிள்ளை ரைட்ஸை வைத்திருந்த நாகிரெட்டி, சீதா அவுர் கீதா தயாரிப்பாளர்களுடன் சண்டையிட்டதோடு, அந்தப் படத்தை தமிழில் வாணி ராணி என்றும் தெலுங்கில் கங்கா மங்கா என்றும் ரீமேக் செய்து, இரண்டு மொழிகளிலும் லாபம் பார்த்தார். அந்தப் படத்தைவிட 20 சதவீதம் அதிகம் வசூலித்தது இந்த வைரத்திருட்டுப் படம்.

இந்தியில் ஒரு படம் வெற்றி பெற்றால் உடனடியாக அது பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி விக்டோரியா நம்பர் 203 தெலுங்கில் அந்தரு டொங்கலே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான சோபன் பாபு இதில் நாயகனாக நடித்தார். நாயகியாக நடித்தவர் நம்மூர் லட்சுமி. படம் வெளியாகி மூன்று சென்டர்களில் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.

சோபன் பாபு படத் தயாரிப்பில் இருந்தவேளை தமிழிலும் விக்டோரியா நம்பர் 203 ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் இன்னொரு நெருங்கிய நண்பரான ஜெய்சங்கர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ஜெயலலிதாவே நடித்தார். வில்லனாக ஆர்.எஸ்.மனோகர் மிரட்டியிருந்தார். படத்துக்கு வைரம் என்று பெயர் வைத்திருந்தனர்.

செந்தில்நாதன் ஊருக்கு பெரிய மனிதர். உண்மையில் அவர் ஒரு கள்ளக் கடத்தல் பேர்வழி. பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை திருட ஒரு ஆளை அனுப்பி வைப்பார். அவன் வைரத்தை திருடிவிட்டு எஸ்கேப்பாக, அவனை கொன்று, வைரங்களை மீட்டுவர ஒரு கொலையாளியை அனுப்பி வைப்பார். அவனும் அந்த துரோகியைக் கொல்வான். ஆனால், வைரம் எங்கிருக்கிறது என்பது தெரியாது. இந்த கொலையில் அப்பாவி ஜட்கா ஓட்டுனர் கைதாகி சிறைக்குச் செல்ல, அவரது மகள் ஆண் வேடமிட்டு ஜட்கா ஓட்டி குடும்பத்தை காப்பாற்றுவாள். அந்த வேடத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார்.

இதில் ஜெய்சங்கர் ஒரு ப்ளேபாய். ஜெயலலிதாவை ஆண் என்று நினைத்து அவர் நெருக்கமாக பழக முனைவதும், ஜெயலலிதா அதனை சாமர்த்தியமாக சமாளிப்பதும் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்தது. வெறும் காதல் பதுமையாக இல்லாமல் சிறையில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற முயற்சி எடுக்கும் மகள் என்று சற்று கனமான பாத்திரமாக ஜெயலலிதாவுக்கு தந்திருந்தார்கள். ஜெய்சங்கர் வில்லன் ஆர்.எஸ்.மனோகரனின் மகனாக வருவார். அவரது பிறப்பில் இருக்கும் மர்மம் இன்னொரு ட்விஸ்ட். வைரம் எங்கு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஜெய்சங்கர் கண்டுபிடிப்பதை த்ரில்லிங்காக எடுத்திருந்தார் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா.

வில்லத்தனம் செய்து வந்தவரை காமெடியனாக களமிறக்கினால், அவர் கொஞ்சமே கொஞ்சம் காமெடி செய்தாலும் மக்கள் மத்தியில் எடுபடும். அதற்கு முன்னோடியாக அமைந்த படம் வைரம் எனலாம். அதுவரை கண்ணை உருட்டி வில்லத்தனம் செய்து வந்த நடிகர் அசோகனை இதில் காமெடியனாக்கியிருந்தார்கள். அவரும், எம்.ஆர்.ஆர்.வாசுவும் வைரத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்கள் கலகலப்புடன் விறுவிறுப்பாக அமைந்திருந்தன.

ஸ்ரீகாந்த் இதில் கொலைகாரனாக நடித்திருந்தார். இவர்கள் அனைவரில் துடுக்குத்தனமான நடிப்பில் அனைவரையும் விஞ்சி நின்றவர் ஜெயலலிதா. அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார் ஜெய்சங்கர். அசோகனும், எம்.ஆர்.ஆர்.வாசுவும் ஜெயலலிதா உடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்ப்பதை கொஞ்சம் கவர்ச்சியாகவே படமாக்கியிருந்தார் இயக்குனர். டி.ஆர்.பாப்பா இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. ஜெயலலிதா கிளாமராக நடித்தப் படங்களில் இதுவும் ஒன்று என்பது வைரத்தின் கூடுதல் மதிப்பு.

Also read... அஜித்துக்கு டப்பிங் பேசிய விக்ரம்... எந்த படத்திற்கு தெரியுமா?

விக்டோரியா நம்பர் 203 தெலுங்கு, தமிழுடன் கன்னடத்திலும் கிட்டு தாதா என்ற பெயரில் 1975 இல் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் 1983 இல் ப்ரியதர்ஷன் இதனை ரீமேக் செய்தார்.  2007 இல் இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். 1994 இல் வெளியான இந்திப் படம் அந்தாஸ் அப்னா அப்னா படத்தில் விக்டோரியா நம்பர் 203 படத்தின் கிளைமாக்ஸை பயன்படுத்தியிருந்தனர். அப்படி ஒரே கதை இந்திக்கு இரண்டு வெற்றிகளையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படவுலகுக்கு தலா ஒரு வெற்றியையும் சம்பாதித்துத் தந்தது. இன்று வருகிற கமர்ஷியல் படங்களைவிட வைரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்போதும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

1974 மே 24 வெளியான வைரம் நேற்று 49 வருடங்களை நிறைவு செய்து இன்று பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema, Jayalalithaa