கமல் முதன்முதலாக நாயகனாக நடித்தது 1974 இல் வெளியான மலையாள கன்னியாகுமரி படத்தில். தமிழில் அதற்கு முன்பு 1972 இல் கமலை நாயகனாக்கி ஆர்.சி.சக்தி உணர்ச்சிகள் படத்தைத் தொடங்கினார். கமல், ஆர்.சி.சக்தி இருவருமே நண்பர்கள். தங்கப்பன் மாஸ்டர் அன்னை வேளாங்கண்ணி படத்தை இயக்கிய போது கமல், ஆர்.சி.சக்தி இருவரும் உதவி இயக்குனர்களாக பணியாற்றினார்கள். கூடுதலாக கமலைப் போல் ஆர்.சி.சக்தியும் பரமக்குடிக்காரர். நட்பு மேலும் இறுக்கமானது.
பெண்ணின் சகவாசத்தால் பாலியல் நோய் பிடித்து இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவும் இளைஞனின் கதை உணர்ச்சிகள். இப்படியொரு கதையை இந்தக் காலத்தில்கூட யோசிக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்தக் காலத்திலும் நடிகர்கள் முன்வர மாட்டார்கள். அப்படியான வில்லங்க வேடத்தில் கமல் துணிச்சலாக நடித்தார்.
பூபதி என்ற பண்ணையாரின் தங்கை கமலா. அழகி. கணவனை இழந்தவள். அவளுக்கும் வேலைக்காரன் முத்துவுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதில் முத்துவுக்கு அத்தனை உடன்பாடில்லை. இந்த விஷயம் பண்ணையாருக்கு தெரியவர, முத்து வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடி விடுகிறான். அவனை துரத்திக் கொண்டு பண்ணையாரும் சென்னை வருகிறார்.
முத்து செல்கிற இடமெல்லாம் பெண் வாசனை அவனை துரத்துகிறது. இறுதியில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு வரும் பாலியல் தொழிலாளி மரகதத்தை ஒருமுறை போலீசில் சிக்காமல் காப்பாற்றுகிறான். இதனால் மரகதத்துக்கு அவன் மீது கருணை ஏற்படுகிறது. தனது தம்பி போல் தனது வீட்டிலேயே அவனை வைத்துக் கொள்கிறாள். அவனது நடத்தையால் மரகதம் அவனை வீட்டைவிட்டு துரத்துகிறாள். இறுதியில் பாலியல் நோய் தாக்கி மருத்துவமனையில் இறந்து போகிறான்.
இதில் வேலைக்காரன் முத்துவாக கமல் நடித்தார். யாரும் நடிக்கத் தயங்குகிற வேடத்தில் துணிச்சலாக நடித்திருந்தார். பொதுவாக நடிகைகளின் குளியல் காட்சியைத்தான் படத்தில் வைப்பார்கள். இதில் கமல் குளிக்கையில் இளம் விதவையான கமலா ஒளிந்திருந்து பார்ப்பது போல் காட்சி வைத்திருந்தனர். அவர்களின் உறவுக்கு காரணம் கமலா என்பதை காட்டும்விதமாக இந்தக் காட்சியை இயக்குனர் வைத்திருந்தார். விதவை கமலாவாக எல்.காஞ்சனாவும், பாலியல் தொழிலாளி மரகதமாக ஸ்ரீவித்யாவும் நடித்திருந்தனர். அலட்சியம், கோபம் அனைத்தும் கலந்துகட்டிய ஸ்ரீவித்யாவின் நடிப்பு படம் வெளியான போது பேசப்பட்டது. மரகதம் பேசும் வசனங்கள் அந்தக் காலத்தில் சமூகத்தின் மனதை உலுக்குவதாக இருந்தது.
Also read... அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் எப்படி இருக்கிறது? - விமர்சனம் இதோ!
உணர்ச்சிகளின் கதையும், காட்சியும், வசனங்களும் சென்சார் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. இதனால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தனர். இந்தப் பிரச்சனையில் பல வருடங்கள் கடந்தன. இதனிடையில் இதே கதையை மலையாளத்தில் ராசலீலா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதில் மரகதமாக ஸ்ரீவித்யா நடித்த வேடத்தில் ஜெயசுதா நடித்தார். கதையில் பல மாற்றங்கள் செய்தனர். குறிப்பாக முத்து - அதாவது கமல் வி.டி. நோயால் இறப்பது போல் இருந்த கிளைமாக்ஸை மாற்றினர். சங்கரன் நாயர் எழுதி, இயக்கிய ராசலீலா மலையாளத்தில் வெற்றிப் படமானது. அப்படம் வெளியான பின் 1976 ஜுன் 25 ஆம் தேதி உணர்ச்சிகள் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. ராசலீலாவில் இருந்த மாற்றங்களை உணர்ச்சிகளில் செய்திருந்தால் உணர்ச்சிகளும் வெற்றி பெற்றிருக்கும். எனினும் இரு இளைஞர்களின் துணிச்சலான முயற்சி என்றவகையில் உணர்ச்சிகள் முக்கியமான படம்.
1976 மே 25 வெளியான உணர்ச்சிகள் நேற்று 47 வது வருடத்தை நிறைவு செயதது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema