முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காத்துக்கிடந்த ’மெளனராகம்’ திரைப்படம்.. மணிரத்னம் தொடங்கிய கன்னடப்படம்.. இயக்குநரின் சினிமா பயணம்!

காத்துக்கிடந்த ’மெளனராகம்’ திரைப்படம்.. மணிரத்னம் தொடங்கிய கன்னடப்படம்.. இயக்குநரின் சினிமா பயணம்!

மணிரத்னம்

மணிரத்னம்

கன்னட, மலையாளப் படங்களுக்குப் பிறகே மணிரத்னம் தமிழுக்கு வந்தார். அப்போது வீனஸ் பிக்சர்ஸ் டி.கோவிந்தராஜனின் மகன் தியாகராஜன் எம்பிஏ முடித்துவிட்டு சத்யஜோதி பிலிம்ஸை தொடங்கியிருந்தார். அதில் தனது நண்பன் மணிரத்னம் ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம், முதல் படம் இயக்கியது கன்னடத்தில். பெயர் பல்லவி அனு பல்லவி. அதுவொரு கதம்பமான தயாரிப்பு. படத்தை இயக்கிய மணிரத்னம், இசையமைத்த இளையராஜா, நடித்த லட்சுமி உள்பட பலர் தமிழர்கள். படத்தை தயாரித்தவர் வீனஸ் பிக்சர்ஸ் டி.கோவிந்தராஜன். மணிரத்னத்தின் தந்தை கோபால ரத்னம் வீனஸ் பிக்சர்ஸில் பணிபுரிந்திருக்கிறார். டி.கோவிந்தாஜனின் மகன் தியாகராஜனும், கோபால ரத்னத்தின் மகன் மணிரத்னமும் நண்பர்கள். அந்தக் கதையை பிறகு பார்ப்போம். பகல் நிலவின் நாயகன் இந்திக்காரரான அனில் கபூர்.

பல்லவி அனு பல்லவிக்கு ஈழத்தமிழரான பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். பி.லெனின் எடிட்டர். முதல் படத்திலேயே தனக்கான டீமை மணிரத்னம் செட் செய்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். பல்லவி அனு பல்லவி ஏ சென்டர்களில்  நல்ல லாபத்தை அள்ளியது. பி, சி சென்டர்களில் கொஞ்சம் மந்தமாகவே போனது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படம் தந்ததும் பலரும் மணிரத்னத்தை முற்றுகையிட்டனர். அதில் ஒருவர் மலையாளப்பட தயாரிப்பாளர் என்.ஜி.ஜான். அவர் மலையாளத்தில் ஈநாடு, இனியெங்கிலும் என இரு அரசியல் படங்களை எடுத்து, இரண்டும் ஹிட்டாகியிருந்தது. அதனால், மணிரத்னம் அவரிடம் சொன்ன மௌனராகம் படத்தின் கதையை நிராகரித்தார். ஈநாடு, இனியெங்கிலும் படங்களின் கதாசிரியர் டி.தாமோதரனை வைத்து உணரு படத்தின் கதையை எழுதி மணிரத்னத்தை அதை இயக்க வைத்தார். துறைமுகத்தில் நடக்கும் தொழிற்சங்க அரசியல் பின்னணியில் உருவான உணரு சுமாராகப் போனது.

கன்னட, மலையாளப் படங்களுக்குப் பிறகே மணிரத்னம் தமிழுக்கு வந்தார். அப்போது வீனஸ் பிக்சர்ஸ் டி.கோவிந்தராஜனின் மகன் தியாகராஜன் எம்பிஏ முடித்துவிட்டு சத்யஜோதி பிலிம்ஸை தொடங்கியிருந்தார். அதில் தனது நண்பன் மணிரத்னம் ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவரிடமும் மணிரத்னம் மௌனராகம் படத்தின் கதையையே கூறினார். அப்போது அந்தப் படத்தின் பெயர் திவ்யா. காதல் கதையெல்லாம் வேண்டாம், ஒரு ஆக்ஷன் படம் எடுப்போம் என தியாகராஜன் கூற, அதற்காக எழுதப்பட்டதுதான் பகல் நிலவு கதை.

இதில் தேவராஜ் என்கிற பெரியவராக சத்யராஜ் நடித்தார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இளைஞன் செல்வம். அவன் புதிதாக ஊருக்கு வரும் ஜோதியை காதலிப்பான். ஜோதியின் அண்ணன் பீட்டர் நேர்மை தவறாத போலீஸ் அதிகாரி. பீட்டர் பெரியவர் மீது நடவடிக்கை எடுக்கையில் அதற்கு குறுக்கே வருகிறவன் செல்வம். பெரியவர் மீதான விசுவாசமா இல்லை ஜோதி மீதான காதலா எது முக்கியம் என்ற  செல்வத்தின் நெருக்கடி மீதி கதையை நகர்த்திச் செல்லும்.

செல்வமாக முரளியும், ஜோதியாக ரேவதியும் நடித்தனர். சரத்பாபு பீட்டராக நடித்தார். ராதிகாவும் படத்தில் உண்டு. இவர்களில் பெரும்பான்மையானவர்களை தியாகராஜனே தேர்வு செய்தார். அதேபோல் லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமாரை வைத்து தனியாக ஒரு காமெடி ட்ராக் எழுதி அதில் கவுண்டமணியை நடிக்க வைத்தார். இளையராஜாவின் இசையும், பாடல்களும் படத்துக்கு முகவரி தந்தன. மணிரத்னத்தின் மேக்கிங் பேசப்பட்டது. எனினும் அது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. முக்கியமாக மணிரத்னமே பலருடைய ஆளுகைக்கு உள்பட்டே பகல் நிலவை எடுத்தார் என சொல்லலாம். அதன் பிறகு அவர் இயக்கிய இதயகோவிலும் அப்படியேதான் வெளிவந்தது. மணிரத்னம் முழுமையாக தனது ஸ்டைலில் இயக்கிய படம் மௌன ராகம். அதுதான் பென்ச் மார்க் படமாக அமைந்தது. உணரு படத்தயாரிப்பாளரும், தியாகராஜனும் அந்தக் கதையை நிராகரித்ததற்காக ரொம்பவே வருத்தப்பட்டிருப்பார்கள்.

Also read... 27 வயதில் முதியவர் தோற்றத்தில் நடித்த கமல்ஹாசன்.. மேக்கப்புக்கு பின்னால் சுவாரஸ்ய தகவல்!

பகல் நிலவுபெரியவர் கதாபாத்திரத்தில் நாயகன் வேலுநாயக்கரின் சாயலை நாம் பார்க்கலாம். அதுபோல், ரவுடி, சிலருக்கு நல்லதும் செய்கிறவர் என்ற தளபதி தேவா என்கிற தேவராஜனின் பாத்திரப் படைப்பையும் இதில் பார்க்கலாம். பகல் நிலவில் சத்யராஜின் கதாபாத்திரப் பெயரும் தேவராஜ்தான்.  மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களின் சாயல்கள் பகல் நிலவிலேயே தென்பட ஆரம்பித்தன. முக்கியமாக அவரது துள்ளல் காதல் காட்சிகள். சிகரெட் புகைக்கும் முரளி ரேவதியை கண்டதும் புகையை வாய்க்குள் அடக்கிக் கொள்வதும், ரேவதி அதனை கண்டுபிடிப்பதும் அன்றைய இளசுகளின் மனம் கவர்ந்த காட்சி.

மணிரத்னம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி இந்த ஜுனில் 38 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அவரது படங்கள் குறித்த உரையாடலை தொடங்குவதற்கு ஏற்ற நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema, Mani ratnam