சாண்டோ சின்னப்பதேவரின் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக கதை எழுதி வந்த கலைஞானத்திடம் ஒருநாள் தேவர், 'நீ படம் எடுடா, நான் பைனான்ஸ் பண்றேன்' என்றதுதான் ரஜினி பைரவியில் ஹீரோவானதற்கு அச்சாரமாக அமைந்தது. அப்போதைய (சில) தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. தங்களிடம் நெடுநாள் வேலை பார்த்தவர்களுக்கு, தங்களது முயற்சியில் இப்படி தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு உயர்வை ஏற்படுத்தித் தருவார்கள். அப்படித்தான் தேவர் கலைஞானத்தை தயாரிப்பாளராக்க தீர்மானித்தார்.
அதுவரை அடுத்தவர் படங்களுக்கு கதை எழுதி வந்த கலைஞானம் தனது சொந்தத் தயாரிப்புக்காக கதை எழுதினார். அண்ணன் - தங்கை பாசத்தை வைத்து அவர் எழுதிய கதைக்கு விஸ்வரூபம் என பெயர் வைத்தார். பொற்றோரை இழந்த அண்ணனும், தங்கையும் சின்ன வயதில் பரிசல் விபத்தொன்றில் பிரிகிறார்கள். பாசக்கார அண்ணன் தங்கையைத் தேடி அலைகிறான். கடைசியில் ஒரு மிராசுதாரரின் மனைவி அவனை தனது சொந்த மகன்போல் வளர்க்கிறார். மிராசுதாரருக்கு ஒரு சொந்த மகனும் இருக்கிறான். இருவரும் இணைந்தே வளர்கிறார்கள். தன்னை காப்பாற்றி ஆளாக்கியதற்கு நன்றிக் கடனாக மிராசுதாரரின் மகனின் தீயச் செயல்களுக்கு உதவி செய்கிறான். ஒருமுறை ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு வருகிறான். மிராசுதாரரின் மகன் அவளை கற்பழிக்கிறான். அதன் பிறகுதான் கடத்தி வந்தது தான் வாழ்நாள் முழுவதும் தேடி வந்த தங்கை எனத் தெரிகிறது. மிராசுதாரரின் மகனின் காலில் விழுந்து தங்கையை திருமணம் செய்து கொள்ள மன்றாடுகிறான். அவன் மறுக்கிறான். தங்கை இறக்க, அண்ணன் சிறைக்குச் செல்கிறான். சிறையிலிருந்து வரும் அவன் விஸ்வரூபம் கொண்டு மிராசுதாரர் மகனை பழிவாங்குகிறான்.
கதை தயார். ஸ்ரீதரை வைத்து படத்தை இயக்குவது என்று கலைஞானம் முடிவு செய்கிறார். அண்ணன் ஜக்கையன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைப்பது எனவும் முடிவு செய்கிறார். அப்போது வில்லன், இரண்டாவது ஹீரோ என்று ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். கலைஞானம் கதை எழுதிய ஆறு புஷ்பங்கள் படத்தில் ரஜினி இரண்டாவது ஹீரோ. அந்தப் படத்தின் போதே கலைஞானத்துக்கு ரஜினி நல்ல பழக்கம்.
அப்போது ராயப்பேட்டையில் தங்கியிருந்த ரஜினியை சந்தித்து கலைஞானம் கதையை கூறுகிறார். கதை ரஜினிக்குப் பிடித்துப் போகிறது. நான்தானே ஹீரோ என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு உறுதி செய்து கொள்கிறார். ஆறு புஷ்பங்கள் படத்தில் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினிக்கு ஐம்பதாயிரம் சம்பளம் பேசி ஐந்தாயிரம் அட்வான்ஸ் தருகிறார் கலைஞானம். இந்தப் பணத்தைப் புரட்ட அவர் தனது மனைவியின் தாலிக்கொடியை விற்க வேண்டி வந்தது தனிக்கதை. இதன் பிறகுதான் ட்விஸ்ட்.
ரஜினியை ஹீரோவாக்கியது தேவருக்கு பிடிக்கவில்லை. ரஜினி மீது அவருக்கு எந்த வெறுப்பும் இல்லை. அது அவரது பாலிசி. புதுமுகத்தை தேவர் ஹீரோவாக்குவதில்லை. ஏதாவது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் மட்டுமே அவர்களை தனது படத்தில் ஹீரோவாக நடிக்க வைப்பார். ரஜினியை வில்லனாக்கி படம் முழுக்க வர்ற மாதிரி பண்ணிடு என்று தேவர் சொல்ல, ரஜினிதான் ஹீரோன்னு வாக்குக் கொடுத்திட்டேன், எப்படி வாக்கு மாறுவது என்று கலைஞானம் தயங்க, என் விருப்பப்படி படம் எடுத்தாதான் பைனான்ஸ், உன் விருப்பப்படி எடுக்கிறதுன்னா எக்கேடும் கெட்டுப்போ என்று கைவிரித்துவிட்டார் தேவர்.
கதை தயார், கதாநாயகன் தயார். ஆனால், படப்பிடிப்பு நடத்த பைனான்ஸுக்கு என்ன பண்ணுவது? இந்த நேரத்தில் ஆறு புஷ்பங்கள் படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான உடந்தை மணாளன் கலைஞானத்தைப் பார்த்து, உங்க ஆறு புஷ்பங்கள் படத்தால் எனக்கு நல்ல லாபம். அடுத்து என்ன படம் என்று கேட்க, கலைஞானம் தானே விஸ்வரூபம் என்ற படத்தைத் தயாரிக்கப் போகும் விஷயத்தை கூறுகிறார். அந்த கதையை கேட்ட உடந்தை மணாளன் வேறு இரண்டு விநியோகஸ்தர்களை அழைத்து வந்து கதையை சொல்லச் சொல்கிறார். அதில் காதர் என்ற விநியோகஸ்தர் கதை கேட்டு கண்ணீர் விடுகிறார். கதை மூவருக்கும் ஓகே. அந்த இடத்திலேயே உடந்தை மணாளன் என்.எல்.சி. ஏரியா உரிமைக்காக பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தருகிறார் உடந்தை மணாளன். காதர் திருச்சி, பெங்களூரு ஏரியாவுக்காக பத்தாயிரம் அட்வான்ஸ் தருகிறார். இன்னொருவர் சென்னை ஏரியாவுக்காக ஐந்தாயிரம் தருகிறார். ஒரே நாளில் 25 ஆயிரம் ரூபாய் புரள்கிறது. படத்தின் கதை பைரவி என்ற தங்கை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதியிருந்ததால் விஸ்வரூபத்தைவிட பைரவியே சரியாக இருக்கும் என உடந்தை மணாளன் சொல்ல, கலைஞானமும் அதனை ஏற்றுக் கொண்டு படத்தின் பெயரை பைரவி என மாற்றினார்.
பைரவி படத்தின் கதையை கேட்ட தாணு, சென்னை ஏரியாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்தவருக்கு பத்தாயிரம் ரூபாய் தந்து, சென்னை ஏரியாவை வாங்கிக் கொண்டார். அப்போது சென்னை ஏரியாவுக்கு அவர் தந்தது 80 ஆயிரம் ரூபாய். பைரவி கதை கேட்டு திருச்சி, பெங்களூரு ஏரியாவுக்காக பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்த விநியோகஸ்தர் காதர் வேறு யாருமில்லை, நடிகர் ராஜ்கிரண்தான். அப்போது அவர் விநியோகஸ்தராக இருந்தார்.
ஸ்ரீதருக்குப் பதில் அவரது அசிஸ்டெண்ட் எம்.பாஸ்கரை இயக்குனராக்கி 1978 ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கினர். படபூஜையில் தேவர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்ற, சிவாஜி கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஸ்டார் சொல்ல, ரஜினியின் நாயகன் வாழ்க்கை அமர்க்களமாகத் தொடங்கியது.
Also read... நல்லவராக நம்பியார்.. கிளப் டான்ஸராக மனோரமா.. குழந்தையை வைத்தே ஜெயித்துக் காட்டிய பலே இயக்குநர்!
1978 ஜனவரி 14 பைரவியை தொடங்கி ஐந்தே மாதத்தில் எடுத்து முடித்து ஜுன் 2 ஆம் தேதி படத்தை வெளியிட்டனர். படம் வெளியாவதற்கு முதல்நாள் இயக்குனர் எம்.பாஸ்கர், ரஜினி உள்பட பலர் தியேட்டர் ரவுண்ட்ஸ் வந்தனர். சென்னை விநியோகஸ்தர் தாணு ரஜினிக்கு பிளாசா திரையரங்கில் கட்அவுட் வைத்து சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜின்னு பெரிய ஸ்டார்கள் இருக்கிறப்போ இந்த மாதிரி கட்அவுட், பட்டம் எல்லாம் வேண்டாம், எனக்குப் பிடிக்கலை என்றிருக்கிறார் ரஜினி. ஆனால், அந்த பிரபலமும், பட்டமும் சரி என்பதை மறுநாள் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் உறுதிப்படுத்தினர். படம் ஹிட்டானது. தமிழ் சினிமாவுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்தார்.
ரஜினி பைரவியின் ஹீரோ என்பதில் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்தவர் கலைஞானம். நான்தானே ஹீரோ என்று ரஜினி தன்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதாக கலைஞானமே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். பைரவியின் நாயகன் ரஜினி என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், படத்தின் டைட்டிலில் வில்லன் ஸ்ரீகாந்த் பேருக்கு அடுத்துதான் ஹீரோ ரஜினியின் பெயர் இடம்பெறும். அந்த மர்மம் மட்டும் இன்னும் விலகாமலே உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema