முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மலையாளத்தில் மோகன்லால்.. தமிழில் பாண்டியராஜன்.. ரசிகர்களை கவர்ந்த காமெடி படம்!

மலையாளத்தில் மோகன்லால்.. தமிழில் பாண்டியராஜன்.. ரசிகர்களை கவர்ந்த காமெடி படம்!

கதாநாயகன் படம்

கதாநாயகன் படம்

மலையாளத்தில் மோகன்லால் - சீனிவாசன் காம்போ மிகப்பிரபலம். இவர்கள் இணைந்து நடித்த பெருவாரியான படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1988 இல் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர், ரேகா, ஷோபனா, எஸ்.எஸ்.சந்திரன், மனோரமா நடிப்பில் முக்தா சீனிவாசன் தயாரித்து, இயக்கிய ’கதாநாயகன்’ படம் வெளியாகி 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. மலையாளத்தில் வெளியான ’நாடோடிக்காற்று’ திரைப்படத்தைத் தழுவி கதாநாயகன் படத்தை எடுத்திருந்தனர். நாடோடிக்காற்று திரைப்படத்திற்கு மலையாள சினிமாவில் சிறப்பான இடம் உண்டு.

மலையாளத்தில் மோகன்லால் - சீனிவாசன் காம்போ மிகப்பிரபலம். இவர்கள் இணைந்து நடித்த பெருவாரியான படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிக் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்த படம் நாடோடிக்காற்று. சத்தியன் அந்திக்காடு இயக்கிய இந்தப் படத்தின் கதை இரட்டை இயக்குனர்களாக அந்தக்காலத்தில் வலம் வந்த சித்திக் - லாலினுடையது. அதற்கு சீனிவாசன் திரைக்கதை எழுதினார்.

ராமதாஸ் என்கிற தாசனும், விஜயனும் நண்பர்கள். தாசனுக்கு தான் பி.காம். பர்ஸ்ட் கிளாஸ் என்பதில் பெருமை. விஜயன் பத்தாம் கிளாஸ். இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பியூனாக வேலை பார்ப்பார்கள். இருவருமே சோம்பேறிகள். தாசனுக்கு எம்பிபிஎஸ் படிக்கும் பக்கத்துவீட்டு பெண் மீது காதல் ஏற்படும். அவளை இம்ப்ரஸ் செய்ய தாசனும், விஜயனும் காரில் வரும் ஒரு நபரை தாக்குவார்கள். அவர் அவர்களது புதிய மேனேஜர் என்பது பிறகுதான் தெரியவரும்.  இருவரது வேலையும் பறிபோகும். பிறகு வங்கியில் கடன் வாங்கி மாடு வாங்குவார்கள். பால் வியாபாரம் செய்து பெரியாளாகலாம் என திட்டம். அதுவும் நடக்காது. கடைசியில் கள்ளத்தோணி ஏறி துபாய் போக முடிவெடுப்பார்கள். அவர்களை துபாய்க்கு கொண்டு சேர்ப்பதாக வாக்குக் கொடுப்பவன் சென்னையில் அவர்களை இறக்கிவிட்டுச் செல்வான்.

சென்னையில் தாசனுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படும். வேலையும் கிடைக்கும். ஆனால், இவர்களின் முதலாளி தனது போதைப் பொருள் கடத்தலை துப்பறிய வந்த சிஐடிகள் என இவர்களை தவறாக நினைக்கும்படி விஷயங்கள் நடக்கும். இந்த ஆள்மாறாட்டமே கடைசியில் அவர்களை ஒரிஜினல் சிஐடிகளாக மாற்றும்.

வேலையில்லாத இரு இளைஞர்களின் வாழ்க்கையை நகைச்சவையும், அபத்தவுமாக படம் அணுகியிருந்தது. அவர்கள் துபாய் செல்லும் காட்சியும், அங்கு நடக்கும் குளறுபடிகளும் எவ்வளவு நகைச்சுவையோ அதேயளவுக்கு வலியுள்ளதாகவும் இருக்கும். மோகன்லாலின் அம்மா இறந்துவிட்டதாக வரும் கடிதமும், அதனை அவர் எதிர்கொள்ளும் விதமும் வேலைக்காக கண்காணாத தொலைவில் வசிப்பவர்களின் நிலையை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும்.

இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக பட்டணப் பிரவேசம் என்ற படத்தை சத்தியன் அந்திக்காடு இயக்கினார். இதற்கும் சீனிவாசனே திரைக்கதை எழுதினார். அதே தாசன், விஜயன்தான் நாயகர்கள். நாடோடிக்காற்றில் இவர்களின் முதலாளியாக, கடத்தல் கும்பல் தலைவனாக வரும் திலகனும் இதில் உண்டு.

நாடோடிக்காற்றின் இறுதியில் தாசன், விஜயனால் சிறைக்குச் செல்லும் திலகன், இரண்டாம் பாகம் பட்டணப் பிரவேசத்தில் சிறையிலிருந்து தப்பித்து, அவரது நண்பர் கரமனை ஜனார்த்தனன் நாயரின் வீட்டில் அடைக்கலம் புகுவார். படத்தில் இவரது பெயர் பிரபாகரன் தம்பி. அதே வீட்டில் இன்னொரு வழக்கு விஷயமாக விஜயன் - சீனிவாசன் - வேலைக்காரனாக மாறுவேடத்தில் நுழைந்திருப்பார். தன்னை சிஐடிகள் விடாமல் துரத்துவதாக பயப்படும் திலகன் கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு தப்பிச் செல்ல முயல்வார். முதலில் உதவி செய்யும் அவரது நண்பர் பிரபாகரன் தம்பி ஒருகட்டத்தில் முடியாது என்று கைவிரிப்பார். திலகன் அதிர்ச்சியாகி, பிரபாகரா... என்பார். திலகனின் இந்த டயலாக் மலையாளிகளிடையே பிரசித்தம். பிரபாகரா... என்றாலே அவர்களுக்கு திலகனும், பட்டணப்பிரவேசம் படமும் நினைவுக்கு வரும். அந்த பாதிப்பில் 'வரனே ஆவ்ஷயமுண்டு' படத்தில் சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரா என்று பெயர் வைத்தார்கள். அதுவும் வேறு மாதிரி சர்ச்சையில் சிக்கியட்து. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை நாய்க்கு வைத்துவிட்டார்கள் என்று சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்தன.

Also read... ஆங்கிலேயரை அலற வைத்த தமிழ் திரைப்படம்.. உடனடியாக தடை செய்து உத்தரவு.!

பட்டணப்பிரவேசத்தின் தொடர்ச்சியாக அக்கரை அக்கரை அக்கரை படத்தை எடுத்தனர். இதிலும் அதே தாசனும், விஜயனும்தான் நாயகர்கள். கதையின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடக்கும். இதற்கும் சீனிவாசன்தான் திரைக்கதை. முதலிரு படங்களை இயக்கிய சத்தியன் அந்திக்காடுக்குப் பதில் ப்ரியதர்ஷ்ன் அக்கரை அக்கரை அக்கரையை இயக்கினார். இயக்குனர் மாறும்போது படத்தின் தரமும் மாறும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படம். முதலிரு பாகங்களில் நகைச்சுவை மேலோங்கி இருந்தாலும், இரு இளைஞர்களின் வாழ்வியல் போராட்டங்களும், வலிகளும் இயல்பாக வெளிப்படும் தருணங்கள் அவற்றில் நிறைந்திருக்கும். பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி துணை கதாபாத்திரங்களும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். மாறாக அக்கரை அக்கரை அக்கரை வெறும் காமெடிப்படமாக மட்டுமே எஞ்சியது. ஆனாலும், படம் வெற்றிதான்.

தாசன், விஜயனாக ஆரம்பித்த மோகன்லால் - சீனிவாசன் காம்பினேஷன் பிறகு எத்தனையோ வெற்றிப் படங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால், நாடோடிக்காற்றை கதாநாயகனாக தமிழில் எடுத்து வெற்றி பெற்ற பிறகும் பாண்டியராஜன் - எஸ்.வி.சேகர் இணை அதேபோல் ஒரு தொடர்ச்சியை கொண்டிருக்கவில்லை. நாடோடிக்காற்று தெலுங்கு, இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் அந்தத் தொடர்ச்சி அற்றுப் போனது.

1988 மே 20 திரைக்கு வந்த, நாடோடிக்காற்றின் தமிழ் ரீமேக்கான கதாநாயகன் சென்ற சனிக்கிழமை - மே 20 - அன்று 35 வது வருடத்தை நிறைவு செய்தது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema