எம்ஜி ராமச்சந்திரன், பானுமதி மோதல் தமிழ் திரையுலகில் பிரபலமானது. எம்ஜி ராமச்சந்திரன் நாயகனாக தனியிடம் பிடிக்கும் முன்பே நடிகை, பாடகி, இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தனி முத்திரை பதித்தவர் பானுமதி . யாருக்கும் அஞ்சாதவர், யார் முன்னிலையிலும் சுயமரியாதையை விட்டுத் தராதவர்.
ஐம்பதுகளின் இறுதியில் பானுமதி தனது பரணி பிக்சர்ஸ் சார்பாக ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளை ஆரம்பித்தார். படவேலைகள் போய்க்கொண்டிருந்தவேளையில் அவருக்கு அந்தத் தகவல் வருகிறது. எம்ஜி ராமச்சந்திரன் நாடோடி மன்னன் என்ற படத்தை எடுக்கிறார், அதன் கதையும், பானுமதி எடுக்கும் படத்தின் கதையும் ஒன்று. பானுமதிக்கு அதிர்ச்சி. அவருக்கு விஷயம் புரிகிறது. 1894 இல் எழுதப்பட்ட நாவலை முப்பதுகளில் தி பிரிசனர் ஆஃப் ஸென்டா என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுத்தனர். பிறகு 1952 இல் அதே கதையை அதே பெயரில் திரைப்படமாக்கினர். அந்தப் படத்தின் கதையை தழுவிதான் பானுமதி தனது படத்தை எடுக்க திட்டமிட்டு வேலைகள் மேற்கொண்டு வந்தார். அதே கதையைதான் எம்ஜி ராமச்சந்திரனும் நாடோடி மன்னனுக்காக அடித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தனது கவனத்துக்கு வந்ததும் பானுமதி நேரில் எம்ஜி ராமச்சந்திரனை சந்தித்து, "நான் எடுக்கும் அதே கதையைத்தான் நீங்களும் எடுக்கிறீர்கள். நாங்கள் பல மாதங்கள் முன்பே படவேலைகளை தொடங்கிவிட்டோம். அதனால், உங்கள் படத்தை எடுக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். ஆனால், எம்ஜி ராமச்சந்திரன் சம்மதிக்கவில்லை. "இது எனக்கு முக்கியமான படம், நானே டைரக்ட் செய்கிறேன், அதனால் பின்வாங்க முடியாது" என்று கூறிவிட்டார். அத்துடன், ஆங்கிலப் படத்தில், நாயகன் மன்னனாக மாறும் பகுதியை மட்டும்தான் என்னுடைய படத்தில் வைக்கப் போகிறேன். நீங்கள் அந்தப் படத்தை அப்படியே எடுக்கிறீர்கள். அதனால் பிரச்சனை இல்லை என்றிருக்கிறார். தீவிர யோசனைக்குப் பின் பரணி பிக்சர்ஸ் தங்களது தயாரிப்பை கைவிட்டது.
இதன் பிறகு நடந்ததுதான் யாரும் எதிர்பாராத திருப்பம். நாடோடி மன்னனில் எம்ஜி ராமச்சந்திரன் பானுமதியை நாயகியாக ஒப்பந்தம் செய்தார். பானுமதிக்கே அதில் ஆச்சரியம். ஆனால், போகப் போக நிலைமை விபரீதமானது. இயக்கம் எம்ஜி ராமச்சந்திரன் என்றாலும், கே.சுப்பிரமணியம் மேற்பார்வையில்தான் படப்பிடிப்பு நடந்தது. ஒருகட்டத்தில் எம்ஜி ராமச்சந்திரன் அனைத்துப் பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டார். அதன் பிறகு நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழ்ந்தன. சொல்வது ஒன்றாகவும், எடுப்பது ஒன்றாகவும் இருந்தது. ஒரே காட்சிக்கு பல டேக்குகள் எடுக்கப்பட்டன. ஒருகட்டத்தில் கோபமான பானுமதி, மிஸ்டர் ராமச்சந்திரன், இது எனக்கு ஒத்துவராது என்று குட்பை சொல்லி விலக, அவர் இடைவேளையில் இறந்து போவது போல் காட்சியை எம்ஜி ராமச்சந்திரன் மாற்றினார்.
படத்தில் நடித்ததற்கான காசோலையை பானுமதி எம்ஜி ராமச்சந்திரனின் மனைவி வி.என்.ஜானகிக்கு திருப்பி அனுப்பினார். அத்துடன், உங்கள் கணவரின் பணத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்ற குறிப்பையும் அனுப்பினார். அப்படி பானுமதி, எம்ஜி ராமச்சந்திரன் மோதல் நாடோடி மன்னனில் நாயகியின் மரணத்துக்கு காரணமாயிற்று.
நான்கு படத்துக்கான புட்டேஜ்கள் படமாக்கப்பட்டு, அதனை பல ஜாம்பவான்கள் எடிட் செய்து, இறுதியில் எம்ஜி ராமச்சந்திரனே கத்தரி போட்டு ஒருவழியாக படம் வெளியானது. படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி என்று அறிவித்துவிட்டுதான் படத்தை எம்ஜி ராமச்சந்திரன் வெளியிட்டார். படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து, எம்ஜி ராமச்சந்திரனை திரையுலகின் மன்னனாக்கியது.
Also read... கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!
இந்த சண்டைக்குப் பிறகு பானுமதியும், எம்ஜி ராமச்சந்திரனும் இணைந்து நடிக்க வாய்ப்பேயில்லை என்று பேசியவர்களின் கருத்தைப் பொய்யாக்கி 1963 இல் காஞ்சித் தலைவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதற்கு முன்பே ராஜா தேசிங்கு படம் வெளியாகியிருந்தாலும், அது நாடோடி மன்னனுக்கு முன்பே தொடங்கப்பட்டு, தாமதமாக வெளியான படமாகும்.
தமிழ் திரையுலகில் எம்ஜி ராமச்சந்திரனை எதிர்த்து மணுமுணுக்கவே பயந்த காலத்தில், மிஸ்டர் ராமச்சந்திரன் என பெயர் சொல்லி அழைத்து, அனைவர் முன்னிலையிலும் அவரை எதிர்த்துப் பேசியவர் பானுமதி. அப்படியொரு நடிகை பிறகு தமிழ் சினிமாவில் தோன்றவேயில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema