எழுபதுகளின் மத்தியில் எம்ஜிஆர், சிவாஜியின் ஆதிக்கம் குறையத் தொடங்கி, தமிழ் சினிமா இன்னொரு தடத்தில் ஓட ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் கமல் அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1975 இல் எம்ஜிஆர், சிவாஜியை விட அதிகப் படங்களில் கமல் நடித்தார்.
எம்ஜிஆர் அறுபதுகளுக்குப் பிறகே அதிகப் படங்களில் நடித்தார். ஆனால், சிவாஜி ஆரம்பம் தொட்டே வருடத்துக்கு எட்டு, பத்து படங்களில் சாதாரணமாக நடித்து வந்தார். 1975 இல் எம்ஜிஆர் நடிப்பில் நான்கும், சிவாஜி நடிப்பில் எட்டும், கமல் நடிப்பில் பத்தும் படங்கள் வெளியாகின. எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்தவை நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி. இதில் இதயக்கனி தவிர்த்து மூன்றிலும் லதா ஜோடி. நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன் இரண்டிலும் எம்ஜிஆருக்கு இரட்டை வேடங்கள். இந்த நான்கில் பளாக் பஸ்டரானது இதயக்கனி படம்.
சிவாஜி நடிப்பில் அன்பே ஆருயிரே, அவன்தான் மனிதன், மன்னவன் வந்தானடி, டாக்டர் சிவா, மனிதனும் தெய்வமாகலாம், சினிமா பைத்தியம், வைர நெஞ்சம், பாட்டும் பரதமும் என 8 படங்கள் வெளிவந்தன. இதில் அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, அவன்தான் மனிதன் ஆகிய மூன்று படங்களை திருலோகசந்தர் இயக்கினார். மன்னவன் வந்தானடி, மனிதனும் தெய்வமாகலாம் இரண்டும் பி.மாதவன். சினிமா பைத்தியத்தில் சிவாஜிக்கு கௌரவ வேடம். இந்த எட்டு வெற்றிப் படங்களில் பம்பர்ஹிட் என்றால், அவன்தான் மனிதன். ஸ்ரீதரின் வைர நெஞ்சம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் லாபம் சம்பாதித்தது.
அந்த வருடம் இவர்கள் இருவரையும்விட அதிகப் படங்களில் நடித்தவர் கமல். அந்தரங்கம், அபூர்வ ராகங்கள், ஆயிரத்தில் ஒருத்தி, சினிமா பைத்தியம், தங்கத்திலே வைரம், தேன் சிந்துதே வானம், பட்டாம்பூச்சி, மாலை சூட வா, பட்டிக்காட்டு ராஜா, மேல்நாட்டு மருமகள் என கமலின் சினிமா கரியரை வளர்தெடுத்த படங்கள் இவை. இதில் மேல்நாட்டு மருமகள், தங்கத்திலே வைரம் படங்களில் சிவகுமார் அண்ணனாகவும், கமல் தம்பியாகவும் நடித்தனர். தங்கத்திலே வைரம் படத்தில் இவர்கள் இருவரும் இசைக் கலைஞர்கள். சிவகுமார் பாடுவதில் கெட்டி என்றால், கமல் நடனமாடுவதில் வல்லவர். இவர்களின் தந்தை தேங்காய் சீனிவாசன். அவரது தங்கையின் கணவர் வி.கே.ராமசாமி, அவரது மகள் மனோரமா.
தேங்காய் சீனிவாசனின் தங்கை, அதாவது வி.கே.ராமசாமியின் மனைவி தனது மரணப் படுக்கையில், தனது மகள் மனோரமாவை தேங்காய் சீனிவாசனின் மூத்த மகன் சிவகுமாருக்கு கல்யாணம் செய்துத் தர வேண்டும் என சத்தியம் வாங்குவார். ஆனால், அந்த சத்தியத்தை தேங்காய் சீனிவாசன் நிறைவேற்ற மாட்டார். தனது மகன்களுக்கு அக்கா, தங்கை என ஒரே வீட்டில் இருந்துதான் பெண் எடுப்பேன், அப்போதுதான் மகன்கள் என்றும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பார். அப்படியா சங்கதி என மனசுக்குள் கறுவிக்கொள்ளும் விகே.ராமசாமி, ; இரு மகன்களுக்கும் தானே மாப்பிள்ளைப் பார்த்துத் தருவதாக கூறுவார். நாராயணசாமி என்ற அவரை ஊரில் நாரதர் சாமி என்றுதான் அழைப்பார்கள். அந்தளவு கலகம் மூட்டுவதில் கெட்டிக்காரர். மச்சானின் குணம் அறிந்தும் மகன்களுக்குப் பெண் பார்க்கும் பொறுப்பை வி.கே.ராமசாமியிடும் தருவார் தேங்காய் சீனிவாசன்.
அந்த நாரதர்சாமி மச்சானின் வீட்டில் கலகமூட்ட இரண்டு பெண்களை கண்டுபிடிப்பார். அவர்கள்தான் ஜெயசித்ராவும், ஸ்ரீப்ரியாவும். இருவருக்கும் எதிரெதிரே வீடு. இரண்டு பேரும் சண்டைக் கோழிகள். இவர்களின் ஏட்டிக்குப் போட்டி சண்டை. நமது கதாநாயக சகோதரர்கள் வரை வரும். ஒருவர் சிவகுமாரை புகழ, மற்றவர் கமல்ஹாசனை புகழ்வார். இவர்களின் போட்டியை அறியாத சகோதரர்கள், பெண்கள் இரண்டு பேரும் தங்களை காதலிப்பதாக நினைத்து, அவர்கள் வெட்டிய குழியில் விழுவார்கள். திருமணமும் நடக்கும்.
நமது நாரதர்சாமி அப்போதும் விடமாட்டார். அவர் செய்யும் சகுனி வேலையால் அண்ணன், தம்பி இரண்டு பேரும் பாம்பும், கீரியுமாக மாறிப் போவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் மனைவிகள் என்று பழி நாயகிகள் மீது விழும். அந்த களங்கத்தைப் போக்க ஒரேவழி, அண்ணன், தம்பியை ஒன்று சேர்ப்பது. படுக்கையறை ஒத்துழையாமை முதல் அனைத்துப் போராட்டங்களையும் மனைவிகள் நடத்திப் பார்ப்பார்கள். எதுவும் நடக்காது. இறுதியில் அப்பா தேங்காய் சீனிவாசன் போடும் ஒரு நாடகம் அவர்களை இணைக்கும்.
Also read... காலைத் தொட்டு வணங்கும் காட்சி.. கடுப்பான நடிகை.. பழைய சினிமாவில் பரபர சம்பவம்!
நல்ல கலகலப்பான திரைப்படம் தங்கத்திலே வைரம். அண்ணன், தம்பியைவிட அவர்களின் மனைவிகள் தங்களின் வாய் துடுக்கால் படத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். படமும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது. சொர்ணம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய கல்கி பத்திரிகை, 'நடிப்பில் சிவகுமாரைவிட கமலஹாசன் அதிக மார்க்குகள் பெறுகிறார். அவர் நடிப்பில் காணும் ஓர் இளமைத் துடிப்பு இளம் தலைமுறையினருக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கும். அத்துடன், அவர் நடிப்பில் காணும் யாரையும் காப்பியடிக்காத சுயேச்சையான தன்மையும் திருப்தி அளிக்கின்றன. கமலஹாசன் இதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்/ என எழுதியது.
1975 மே 16 வெளியான தங்கத்திலே வைரம் நேற்று 48 வது வருடத்தை நிறைவு செய்து, இன்று 49 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema