தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமெண்டுக்கு இணையான முக்கியத்துவம் தங்கை சென்டிமெண்டுக்கு உண்டு. அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி பல டஜன் படங்கள் வெளிவந்துள்ளன. சிவாஜி மட்டுமே ஒன்றரை டஜன் படங்களில் நடித்திருப்பார். அதில் ஒன்று தங்கை திரைப்படம்.
இதன் கதையை முதலில் கூறியபோது சிவாஜி நடிப்பதற்கு தயங்கினார். உணர்ச்சிகரமான நடிப்புதான் சிவாஜியின் அடையாளம். தங்கையில் கொஞ்சம் அடிதடி அதிகமிருந்ததால் தனது இமேஜுக்கு சரிவருமா என்ற சந்தேகமும், அது ஏற்படுத்திய தயக்கமும் அவருக்கு இருந்தது. அத்துடன் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் அவர் அதற்கு முன் நடித்திருக்கவில்லை. இந்த இடத்தில் ஏ.சி.திருலோகசந்தர் குறித்து சொல்ல வேண்டும்.
1952 வெளியான எம்ஜி ராமச்சந்திரனின் குமாரி படத்தில் திருலோகசந்தர் ஜுனியர் அசிஸ்டென்டாக வேலை பார்த்தார். பிறகு எட்டு வருடங்கள் கழித்து ஜோசப் தளியத்தின் விஜயபுரி வீரன் படத்தின் கதை, வசனத்தை எழுதினார். பீம்சிங்கின் பார்த்தால் பசி தீரும் படத்தின் கதை, வசனமும் இவரே. 1962 இல் வீரத்திருமகன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். நான்கைந்து படங்களுக்குப் பிறகு 1966 இல் எம்ஜி ராமச்சந்திரன் நடித்த அன்பே வா படத்தை இயக்கினார். அடுத்த வருடம் தங்கை படத்தின் கதையுடன் சிவாஜியை சந்தித்தார்.
சிவாஜியின் தயக்கத்தைப் போக்கியவர் கே.பாலாஜி. அவரது சுஜாதா பிலிம்ஸ்தான் தங்கையை தயாரித்தது. கதை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என சிவாஜியை அவர் சம்மதிக்க வைக்க, படம் தயாரானது. கே.ஆர்.விஜயா டாக்டராக நடித்தார். காஞ்சனாவும் படத்தில் உண்டு. உள்ளுக்குள் தீமையால் நிறைந்த, ஆனால், வெளியுலகுக்கு நல்லவன் போல் காட்டிக் கொள்ளும் உலகநாதன் என்ற வேடத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருந்தார். கே.பாலாஜியின் ஒரிஜினல் வேடமும், மாறுவேடமும் அவருக்குப் பொருந்திப் போயிருந்தன. சூதாட்டத்துக்கு ஆள் பிடிக்கும் வேடத்தில் நாகேஷ் சிரிப்பு காட்டியிருந்தார். இவர்களுடன் எஸ்.வி.ராமதாஸ், ஹரிகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபி, மாஸ்டர் ஸ்ரீதர், பேபி கௌசல்யா ஆகியோரும் நடித்திருந்தனர்.
Also read... இளம்பெண் மீது மோகம்.. சமூகத்துக்கு எதிரான படமென சென்சாரில் சிக்கிய திரைப்படம்!
எம்எஸ்வி இசையில் அமைந்த ஏழு பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். இதில் ஒரு சுவாரஸியமான சம்பவம் நடந்தது. ஒரு சிச்சுவேஷனுக்கு எம்எஸ்வி மெட்டமைக்க, அதற்கேற்ப ஐந்து பாடல்கள் எழுதினார் கண்ணதாசன். அதில் எதை எடுப்பது, எதை விடுவது என்பதில் எம்எஸ்வி, திருலோகசந்தர் இருவருக்கும் குழப்பம். கண்ணதாசனாலும் உதவ முடியவில்லை. எழுதியவர் என்றமுறையில் ஐந்து பாடல்களுமே அவருக்கு முக்கியம்தானே. இந்த நேரத்தில் தபால்காரர் தபால் எடுத்துவர, அவரைப் பிடித்து உட்கார வைத்து, ஐந்தில் ஒரு பாடலை தேர்வு செய்யும்படி கேட்டிருக்கிறார்கள். அப்படி அவர் தேர்வு செய்த பாடல்தான், கேட்டவரெல்லாம் பாடலாம்... பாடல்.
1967 மே 19 வெளியான தங்கை சிவாஜியின் ஆரம்ப தயக்கத்தைப் பொய்யாக்கி 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அப்படம் இன்று 56 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema