முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 39 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த ரஜினியின் படம்

39 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த ரஜினியின் படம்

ரஜினி

ரஜினி

பணக்கார நாயகன் சந்தர்ப்ப சூழலால் ஏழையாக வாழ நேர்வது, திமிர்ப்பிடித்த நாயகியை அடக்குவது என்பவை இந்திய மாஸ் சினிமாவுக்கான கச்சாப் பொருட்கள். அதனை சரிவிகிதத்தில் கலந்து ஹிட் அடித்தார் ராஜசேகர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1978 டிசம்பரில் வெளியான ப்ரியா திரைப்படம் 175 நாள்கள் ஓடி, ரஜினியின் முதல் வெள்ளி விழா படம் என்ற சாதனையை படைத்தது. அதே வருடம் ப்ரியாவுக்கு முன்னதாக முள்ளும் மலரும், தாய் மீது சத்தியம் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. எனினும், முதல் வெள்ளி விழா என்ற பெருமையை தேடித் தந்தது ப்ரியா திரைப்படம்.

ப்ரியாவின் வெற்றிக்குப் பிறகு ரஜினி தொடர்ந்து வெள்ளிவிழா படங்கள் தர ஆரம்பித்தார். 1980 வெளியான பில்லா 175 தினங்கள் ஓடி வெற்றி பெற்றது. அதன் பிறகு அனைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ரஜினியை வைத்து படம் எடுக்க ஆர்வம் கொண்டனர். எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு ரஜினியை வைத்து குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்கள் தந்தவர் ராஜசேகர். படிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை, தர்மதுரை படங்களை ராஜசேகர் இயக்கினார். அவர் முதன்முதலாக ரஜினியை வைத்து இயக்கிய படம் தம்பிக்கு எந்த ஊரு. 1984 வெளியானது.

அதற்கு முந்தைய வருடம், 1983 இல் ராஜசேகர் மலையூர் மம்பட்டியான் படத்தை இயக்கியிருந்தார். அதுவொரு கல்ட் கிளாஸிக் திரைப்படம். நமது கிராமத்து வீர நாயகனை மையமாகக் கொண்டு புனையப்பட்ட திரைப்படங்களுக்கு அஸ்திவாரம் போட்ட முதல் படம். தியாகராஜனை வைத்து அப்படியொரு ஹிட் படத்தை வேறு யாராலும் தந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். இளையராஜாவின் பாடல்கள் படத்தின் தரத்தை உயர்த்தின.

மலையூர் மம்பட்டியானின் மாபெரும் வெற்றியை அடுத்து ரஜினியை வைத்து தம்பிக்கு எந்த ஊரு படத்தை ராஜசேகர் இயக்கினார். மாஸ் ஹீரோவுக்கென அளவெடுத்து தைத்த சட்டை இந்தக் கதை. பணக்கார வீட்டுப் பிள்ளையான ரஜினி பொறுப்பு, உழைப்பு இல்லாமல் ஊதாரியாகத் திரிகிறவர். அவருக்கு வாழ்க்கையில் பொறுப்பும், பிடிப்பும் வர வேண்டும் என ஆசைப்படுகிறார் அவரது தந்தை பி.எஸ்.ராகவன். அதற்காக தனது நண்பனும், முன்னாள் ராணுவ வீரருமான செந்தாமரையின் கிராமத்துக்கு ரஜினியை அனுப்பி வைக்கிறார்.

தான் யாருடைய மகன் என்பதை சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் செந்தாமரையின் கிராமத்துக்கு வருகிறார் ரஜினி. செந்தாமரையின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து அவர் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும். வேண்டா வெறுப்பாக அந்த வாழ்க்கைக்கு உடன்படுகிறவர் படிப்படியாக செந்தாமரையுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருக்கமாகிறார். இதனிடையில் பணக்காரப் பெண் மாதவியின் திமிரை அடக்கி, அவரது காதலை பெறுகிறார். மாதவியை வில்லன் பிடித்துச் செல்ல, ரஜினி காப்பாற்றுகிறார். இறுதியில் ரஜினியும், மாதவியும் ஒன்றிணைவதுடன் சுபம்.

பணக்கார நாயகன் சந்தர்ப்ப சூழலால் ஏழையாக வாழ நேர்வது, திமிர்ப்பிடித்த நாயகியை அடக்குவது என்பவை இந்திய மாஸ் சினிமாவுக்கான கச்சாப் பொருள்கள். அதனை சரிவிகிதத்தில் கலந்து ஹிட் அடித்தார் ராஜசேகர். இந்தப் படத்திற்கு இளையராஜா போட்டப் பாடல்களில், காதலின் தீபம் ஒன்று பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் பேவரைட் பாடலானது. இன்றும் ரஜினி பாடல்களில் அதிகம் பேர் கேட்கும் பாடல்களில் ஒன்றாக இது உள்ளது.

Also read... விஜய்யுடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா... வைரலாகும் வீடியோ!

இந்தப் பாடல்களின் கம்போஸிங் மற்றும் ஒலிப்பதிவின் போது இளையராஜா குடலிறக்க அறுவை சிச்சை செய்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். தத்தகாரத்தில் பாடலின் டியூனை சொல்ல முடியாத சூழலில், பாடல் மெட்டை அவர் விசில் அடித்துச் சொல்ல, அதற்கேற்ப பாடல் வரிகள் எழுதப்பட்டன. பாடல் பதிவின் போது தொலைபேசி வழியாக அவர் திருத்தங்கள் சொல்லி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

தம்பிக்கு எந்த ஊரு ஃபார்முலாவில் அதன் பிறகு பல படங்கள் வெளிவந்தன. திமிர் பிடித்த நாயகியை ரஜினியே பல படங்களில் அடக்கினார். சொத்துக்கள் இருந்தும் ஏழையாக பல படங்களில் நடித்தார். அதில் பல படங்கள் தம்பிக்கு எந்த ஊரு படத்தைவிடவும் அதிக நாள்கள் ஓடியிருக்கின்றன. எனினும் தம்பிக்கு எந்த ஊரு ரஜினி ரசிகர்களுக்கு இன்றும் ஸ்பெஷல்தான். குறிப்பாக காதலின் தீபம் ஒன்று பாடல் அந்தப் படத்தை இன்றும் சிறப்புக்குரியதாக வைத்துள்ளது.

1984 ஏப்ரல் 20 வெளியான தம்பிக்கு எந்த ஊரு இந்த மாதம் 20 ஆம் தேதி  39 வது வருடத்தை நிறைவு செய்தது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema, Rajinikanth