சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18 ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். கோவை நகராட்சியில் பணிபுரிந்து வந்த தம்புசாமி இவரது தந்தையாவார். சாமிக்கண்ணு தென்னக ரயில்வே திருச்சி பொன்மலை புகைவண்டி நிலையத்தில் தனது 22 வது வயதில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்து வந்த போது டியூபாண்ட் என்ற பிரெஞ்சு திரைப்படவியலாளருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அவர் தனது தாயகம் திரும்பிய போது, சாமிக்கண்ணு வின்சென்ட் தனது மனைவியின் நகைகளை விற்று பணம் திரட்டி, டியூபாண்டிடம் இருந்த திரைப்பட புரொஜக்டர் உள்ளிட்ட திரைப்பட உபகரணங்களை விலைக்கு வாங்கினார். அந்த புரொஜக்டரின் உதவியுடன் ஏசுவின் வாழ்க்கை என்ற படத்தை பட்டிதொட்டியெங்கும் திரையிட்டார்.
டெண்ட் கொட்டகை என்ற முறையை தொடங்கியவர் இவரே. வெரைட்டி ஹால் என்ற பெயரில் நிரந்தர சினிமா அரங்கை முதல்முதலில் நிர்மாணித்தவரும் இவரே. ஆரம்ப காலத்தில் பல படங்களை தயாரித்து, தென் இந்திய சினிமாவுக்கு வழிகாட்டியாக சாமிக்கண்ணு வின்சென்ட் திகழ்ந்தார். 1935 இல் இவர் தயாரித்த படம் சுபத்திரா பரிணயம்.
மகாபாரதத்தில் வரும் ஏராளமான கிளைக்கதைகளில் ஒன்றில் சுபத்திரை குறித்து வருகிறது. இவர் வாசுதேவனுக்கும், அவரது முதல் மனைவி ரோகிணி தேவிக்கும் பிறந்தவர். இவரது அண்ணன் பலராமன். வாசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்தவர் கண்ணன் என்கிற கிருஷ்ணன். கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், கிருஷ்ணன், பலராமன் இருவரது தங்கை சுபத்திரை. பலராமனை விஷ்ணுவின் ஓர் அவதாரமாக சில புராணக் குறிப்புகள் கூறுகின்றன. விஷ்ணு பள்ளிகொண்டிருக்கும் ஆதிசேஷன் படுக்கையாக பலராமனை கூறுவோரும் உண்டு.
பாண்டவர், கௌரவர் மோதலில் கிருஷ்ணன் பாண்டவர்களின் பக்கம் இருந்தார். பலராமன் கௌரவர்களின் ஆதரவாளர். கிருஷ்ணன் தனது தங்கை சுபத்திரையை பாண்டவர்களில் பராக்கிரமியான அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். பலராமன் சுபத்திரையை கௌரவர்களில் மூத்தவன் துரியோதனுக்கு மணமுடிக்க விரும்பினார். கிருஷ்ணனின் விருப்பமா, பலராமனின் தேர்வா என்று சகோதரர்களுக்குள் பெரும் போராட்டம் நிலவியது. சில பல சூழ்ச்சிகளுக்குப் பிறகு கிருஷ்ணனின் விருப்பமே நிறைவேறியது. சுபத்திரை அர்ஜுனனை மணந்தாள். சக்கரவியூகத்தை உடைக்கச் சென்று பலியான அர்ஜுனனின் மகன் அபிமன்யு சுபத்திரைக்குப் பிறந்தவன்.
சுபத்திரையின் திருமண விஷயத்தில் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த பலராமன் இறுதியில் மனம் மாறி அர்ஜுனன் - சுபத்திரை திருமணத்தை ஏற்றுக் கொள்வதை சுபத்திரா பரிணயம் படம் விரிவாக சொல்லிற்று. இந்தப் படத்தை புரஃபுல்லா கோஷ் என்பவர் இயக்க, பால் பர்ஸ், பில்மேயர் பெர்க்கிலி ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்தனர். அர்ஜுனனாக எஸ்.வி.சுப்பையாவும், சுபத்திரையாக டி.எஸ்.வேலம்மாளும் நடித்தனர். கொல்கத்தா பயோனியர் ஸ்டுடியோஸில் சுபத்திரா பரிணயம் படமாக்கப்பட்டது.
Also read... இதயத்தை பிழியும் சோகம்.. ரசிகர்களை கவர்ந்து வெற்றிவாகை சூடிய 'கண்ணின் மணிகள்'.!
அந்தக்காலத்தில் இசையமைப்பாளர் என்று தனியாக யாரும் இல்லை. படத்தைத் தயாரிக்கும் அல்லது படம் எந்த ஸ்டுடியோவில் தயாராகிறதோ அந்த ஸ்டுடியோவின் ஆர்கெஸ்ட்ராதான் பின்னணி இசையை அமைக்கும். அதுபோல் பின்னணி பாடகர் என்பதும் அப்போது இல்லை. படத்தில் நடிப்பவர்களே பாடலையும் பாடுவார்கள். அதனால்தான் ஆரம்பக் காலத்தில் சிறந்த பாடகர்களே சினிமாவில் பிரதான நடிகர்களாக இருந்தனர். சுபத்திரா பரிணயம் வெளியான போது அமோக வரவேற்பை பெற்றது. இதே கதை 1941 இல் சுபத்திரா அர்ஜுனா என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. அதில் அர்ஜுனனாக வி.எஸ்.மணியும், கிருஷ்ணராக செருகுளத்தூர் சாமாவும் நடித்தனர்.
1935 ஏப்ரல் 27 வெளியான சுப்த்திரா பரிணயம் சமீபத்தில் 88 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema