முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இலவசமாக நடித்த யானை.. முதன்முதலில் பின்னணி பாடகி.. 55 வாரங்கள் ஓடிய முருகன்- வள்ளி காதல் கதை!

இலவசமாக நடித்த யானை.. முதன்முதலில் பின்னணி பாடகி.. 55 வாரங்கள் ஓடிய முருகன்- வள்ளி காதல் கதை!

ஸ்ரீ வள்ளி

ஸ்ரீ வள்ளி

1945 ஏப்ரல் 13 வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று, டி.ஆர்.மகாலிங்கத்தை முன்னணி நட்சத்திரமாக்கியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்க் கடவுள் முருகன் மலைசாதிப்பெண் வள்ளியை காதலித்து மணந்து கொண்ட கதை தமிழ்நாட்டில் பிரபலமானது. இது பல நாடகக் கம்பெனிகளால் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. சினிமா அறிமுகமானபோது முருகன் - வள்ளி கதையை திரைப்படமாக எடுத்தனர். ஒருமுறை அல்ல பலமுறை.

1921 இல் வள்ளி திருமணம் என்ற பெயரில் முருகன் - வள்ளி காதல்கதை மவுனப்படாக எடுக்கப்பட்டது. பிறகு ஸ்ரீ சுப்பிரமணியம் என்ற பெயரில் 1930 இல் மீண்டும் ஒரு மவுனப்படம் எடுக்கப்பட்டது. இதுவும் முருகன், வள்ளியைப் பற்றியதுதான். அந்த வருடமே இந்தப் படத்தை சுப்பிரமணியம் என்ற பெயரில் மறுபடி எடுத்தனர். அதே காலகட்டத்தில் வள்ளி திருமணம் என்ற பெயரில் மேலும் ஒரு படம் வெளியானது.

இப்படி ஒரே கதையை பல பெயர்களில் பல காலகட்டங்களில் மட்டுமின்றி ஒரேநேரத்தில் திரைப்படமாக்கி ரசிகர்களை திகட்ட வைத்தனர். திரைப்படங்கள் பேச ஆரம்பித்த பின், 1933 இல் சாமிக்கண்ணு வின்சென்ட் வள்ளி திருமணம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார். படம் வெற்றி பெற்றது. இதன் பிறகு 16 வருடங்கள் கழித்து ஏவி மெய்யப்ப செட்டியார் ஸ்ரீ வள்ளி என்ற பெயரில் ஒரு படத்தைத தயாரித்து, இயக்கி வெளியிட்டார்.

ரஜினியின் படத்தை முந்திய கமல் படம்.. 38 வருடங்களுக்கு முன் புத்தாண்டில் நடந்த பரபர போட்டி!

ஸ்ரீ வள்ளி வெளியான 1945 இல் ஏவி மெய்யப்ப செட்டியார் பிரகதி ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வந்தார். முருகன் - வள்ளி குறித்த படத்தை எடுப்பது என முடிவானதும் தனது மனைவியுடன் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார் செட்டியார். முருகனின் கதையை படமாக்குகையில் எவ்வித பிழையும் நேர்ந்துவிடக் கூடாது, அப்படியே பிழை ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த புனித யாத்திரையை செட்டியார் தம்பதி மேற்கொண்டது. ஸ்ரீ வள்ளி படத்தின் திரைக்கதையை செட்டியாருடன் இணைந்து ஏ.டி.கிருஷ்ணசாமி எழுதினார்.

ஸ்ரீ வள்ளியில் முருகனாக தியாகராஜ பாகவதரை நடிக்க வைக்க செட்டியார் திட்டமிட்டிருந்தார். பிறகு, தனது நந்தனார் படத்தில் சிறுவனாக அறிமுகமான டி.ஆர்.மகாலிங்கத்தை முருகனாக்கினார். டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல்வளம் செட்டியாருக்குப் பிடித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்தது. வசுந்தரா தேவியை வள்ளியாக நடிக்க வைப்பது என முடிவு செய்தனர். முருகனை நான்தான் தேர்வு செய்வேன் என்று, தயாரிப்பு தரப்பு பரிந்துரைத்த நடிகர்களை எல்லாம் வேண்டாம் என புறக்கணித்தார் வசுந்தரா தேவி. இறுதியில் தயாரிப்பாளர் வசுந்தரா தேவி வேண்டாம் என்று, பாலயோகினி போன்ற படங்களில் சிறுமியாக நடித்த குமாரி ருக்மணியை வள்ளியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

ஸ்ரீ வள்ளி திரைப்படம் பிரகதி ஸ்டுடியோவில் தயாரானது. சில வெளிப்புற காட்சிகளை சென்னை அடையாறு பகுதியில் படமாக்கினர். கதைப்படி ஒரு குட்டி யானை தேவைப்பட, திருச்சசூர் சென்று நான்கு வயது யானை ஒன்றை கொண்டு வந்தனர். அதன் உடமையாளரான சாமி ஐயர், படத்தின் கதையை கேட்டு, யானைக்கு எந்தப் பணமும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அப்படி அந்த யானை ஸ்ரீ வள்ளியில் இலவசமாக நடித்துக் கொடுத்தது.

படம் முடிந்த பிறகு செட்டியாருக்கு அனைத்தும் திருப்தியாக அமைந்தும், ஒன்றே ஒன்று மட்டும் நெருடலாக இருந்தது. அது வள்ளியாக நடித்த ருக்மணியின் பாடல். அவரது குரலில் குறை இருப்பதாக செட்டியாருக்குத் தோன்ற, பாடகி பெரியநாயகியின் குரலில் பாடல்களைப் பதிவு செய்து, அதனை ருக்மணி பாடும் இடங்களில் பயன்படுத்திக் கொண்டார். அதற்கு முன்புவரை பின்னணி பாடகர், பாடகி என்ற ஒன்று தமிழ் சினிமாவில் இருந்ததில்லை. முதல்முறை ஸ்ரீ வள்ளி படத்தில்தான் அந்தமுறை நடைமுறைக்கு வந்தது. தனது குரலில் பாடிய பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டு, வேறொருவர் குரல் பயன்படுத்தப்பட்டது ருக்மணிக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. அவர் கடைசிவரை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனினும் தயாரிப்பாளரின் முடிவுதான் வென்றது. இதற்குப் பதிலாக மூன்று படங்களில் நாயகியாக நடிக்க வைப்பது என்று செட்டியார் போட்ட ஒப்பந்தத்தையும் ருக்மணி ஏற்றுக் கொள்ளவில்லை.

1945 ஏப்ரல் 13 வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று, டி.ஆர்.மகாலிங்கத்தை முன்னணி நட்சத்திரமாக்கியது. படத்தில் இடம்பெற்ற காயாத கானகத்தே... பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. மதுரை சென்ட்ரல் திரையரங்கில் ஸ்ரீ வள்ளி 55 வாரங்கள் - அதாவது ஒரு வருடத்தை கடந்து ஓடி சாதனைப் படைத்தது. பிறகு 1961 இல் இதே கதையை இதே பெயரில் மறுபடி திரைப்படமாக்கினர். அதில் முருகனாக சிவாஜியும், வள்ளியாக பத்மினியும் நடித்தனர்.

1945 ஏப்ரல் 13 வெளியான ஸ்ரீ வள்ளி இன்று 78 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema