முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்தடுத்து படம் ரிலீஸ் செய்த சிவாஜி.. பிரமாண்டங்களுக்கு நடுவில் சிக்கிய ’பொம்மை கல்யாணம்’.. !

அடுத்தடுத்து படம் ரிலீஸ் செய்த சிவாஜி.. பிரமாண்டங்களுக்கு நடுவில் சிக்கிய ’பொம்மை கல்யாணம்’.. !

பொம்மை கல்யாணம்

பொம்மை கல்யாணம்

சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1958 வெளியான சிவாஜி கணேசன் நடித்தப் படங்களில் ஒன்று பொம்மை கல்யாணம். ஆச்சார்யா ஆத்ரேயா எழுத்தில் ஆர்.எம்.கிருஷ்ணமூர்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இதனை இயக்கினார். தெலுங்குப் படம் 1958 ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் அதே வருடம் மே 3 ஆம் தேதி வெளியானது.

சிவாஜி வருடம் முழுவதும் நடித்துக் கொண்டிருப்பார். அதனால், வருடம் முழுக்க அவர் நடித்தப் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ஒரு படம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாகப் போய்க்கொண்டிருக்கையில் அடுத்தப் படத்தை வெளியிடுவார்கள். ஒரே நேரத்தில் இரு படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் மூன்றாவதாக ஒன்று வெளியாகும். இதன் காரணமாக வெள்ளிவிழா போக வேண்டிய படம் 100 நாள்கள் ஓடும். 100 நாள்கள் ஓட வேண்டியது 50 நாள்களில் தூக்கப்படும். அதற்காக கவலைப்பட முடியாது. கவலைப்படும் நேரத்தில் இன்னொரு படம் வெளிவரும்.

1958 லும் அப்படித்தான் நடந்தது. அந்த வருடத்தின் ஆரம்பத்தில் பொம்மல பெள்ளி - பொம்மை கல்யாணத்தின் தெலுங்குப் பதிப்பு - வெளியாகி வெற்றி பெற்றது. அது தெலுங்கு என்பதால் அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். 1958 இல் சிவாஜி நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் உத்தம புத்திரன். பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியான அப்படம், 36 நாள்களை கடந்த நிலையில் மார்ச் 14 பதிபக்தி படத்தை வெளியிட்டனர். உத்தம புத்திரன், பதிபக்தி இரண்டும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில் ஏப்ரல் 14 சம்பூர்ண ராமாயணத்தை வெளியிட்டனர். இதில் என்.டி.ராமராவுடன் சிவாஜியும் நடித்திருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைக்கு வருகையில் உத்தம புத்திரன் ஐம்பது நாள்களையும், பதிபக்தி முப்பது நாள்களையும் கடந்திருந்தது. உத்தம புத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் என மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கையில் மே 3 ஆம் தேதி பொம்மை கல்யாணம் வெளியானது.

உத்தம புத்திரன் 100 நாள்களை நிறைவு செய்ய பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் இரண்டும் பொம்மை கல்யாணத்துடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. பொம்மை கல்யாணம் 50 தினங்களை கடந்த போது அன்னையின் ஆணை வெளியானது. பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் ஆகிய படங்களுடன் அன்னையின் ஆணையும் சேர, பொம்மை கல்யாணம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டது. பதிபக்தி 100 நாள்களும், சம்பூர்ண ராமாயணம் 5 இடங்களில் 100 நாள்களும், மதுரையில் 165 நாள்கள் ஓடின. அன்னையின் ஆணை 100 நாள்கள் ஓடியது.  அந்த வருடம் வெளியான சாரங்கதாரா, சபாஷ் மீனா, காத்தவாயராயன் ஆகிய படங்களும் 100 நாள்கள் ஓடின. நடுவில் பொம்மை கல்யாணம் மட்டும் 50 நாள்களுடன் பின்னடைவை சந்தித்தது. 100 நாள்கள் ஓடவில்லை என்றாலும் படம் லாபம்தான்.

Also read... மௌனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை... த்ரிஷாவின் சூப்பர் ஹிட் பாடல்கள்!

பொம்மை கல்யாணம் ஒரு அக்மார்க் குடும்பப் படம். மாமியாரின் வரதட்சணை வெறியை விரிவாக கண்ணீர் ததும்ப காட்சிப்படுத்தியிருந்தது. சிவாஜி சுதந்திரப் போராட்ட தியாகி ரங்காராவின் மகள் ஜமுனாவை காதலிப்பார். வரதட்சணை பெயராது என்பதால் இந்தத் திருமணத்தை சிவாஜியின் தாய் சாந்தகுமாரி எதிர்ப்பார். அவருக்கு தனது சகோதாரனின் மகள் மைனாவதியை சிவாஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்கு மாறாக சிவாஜி, ஜமுனா திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தபின், மருமகளை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வார். சிவாஜி ஊரில் இல்லாத நேரம் மருமகளை வீட்டைவிட்டே துரத்திவிட்டு, பழியை மருமகள் மீது போடுவார். அத்துடன் மைனாவதியை மகன் சிவாஜிக்கு திருமணம் செய்ய சாந்தகுமாரி ஏற்பாடு செய்வார். சிவாஜியும், ஜமுனாவும் இறுதியில் இணைந்தார்களா, சாந்தகுமாரியின் வரதட்சணை வெறி தணிந்ததா என்பது கதை.

சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது. கே.வி.மகாதேவன் இசையில் படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

வரதட்சணை கொடுமை குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தியவகையில் இன்றும் பார்க்கக் கூடிய படமாகவே பொம்மை கல்யாணம் உள்ளது. 1958 மே 3 வெளியான பொம்மை கல்யாணம் இன்று 65 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema