முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகெங்கைச் சீமையாக மாறிய எம்ஜிஆரின் ஊமையன் கோட்டை

சிவகெங்கைச் சீமையாக மாறிய எம்ஜிஆரின் ஊமையன் கோட்டை

சிவகெங்கைச் சீமை

சிவகெங்கைச் சீமை

சிவகெங்கைச் சீமையையும் மக்கள் ஆரவாரத்துடனே வரவேற்றனர். அன்று வளர்ந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை தாங்கிய படம் என்ற அடையாளம் சிவகெங்கைச் சீமைக்கு இருந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வீரம் செறிந்த தமிழ் மன்னர்களின் கதைகள் தமிழ் சினிமாவில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. புராணம், சரித்திரம் என்றால் இயல்பாகவே சாகசக் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் வந்துவிடும், மக்களும் அவற்றை விரும்பி ரசிப்பார்கள் என்பதால் மன்னர்களின் வரலாறுகளை எடுப்பதில் அன்றைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆர்வம் காட்டினர்.

சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது ஐம்பதுகளின் இறுதியில் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. அந்தப் படம் தொடங்கிய சில வாரங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் சிவகெங்கைச் சீமை என்ற படம் தொடங்கப்பட்டதால், அப்படம் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு போட்டியாக எடுக்கப்படுவதாக ஒரு செய்தி பரவியது. மக்களும் அதனை நம்பினர். சிவாஜியா, எஸ்.எஸ்.ராஜேந்திரனா யாருடைய தமிழ் உச்சரிப்பு சிறப்பானது என்ற போட்டி அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் இருந்து வந்தது மேற்படி சந்தேகத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால், சிவகெங்கைச் சீமையின் வரலாறு வேறு.

எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் ஊமையன் கோட்டை என்ற படம் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கின. ஊமையன் கோட்டை வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்களைப் பற்றிய கதை. இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் பிற படவேலைகள் மற்றும் கட்சிப் பணிகள் காரணமாக எம்ஜி ராமச்சந்திரன் ஊமையன் கோட்டையில் நடிக்கவில்லை. பிறகு அதனை சிவகெங்கைச் சீமை என பெயர் மாற்றி எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் எடுத்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தயாரான 1959 இல் சிவாஜி தனது திமுக சார்பை விடுத்து காங்கிரஸ் பக்கம் சாய்ந்திருந்தார். சிவகெங்கைச் சீமைக்கு திரைக்கதை, வசனம் எழுதி, படத்தைத் தயாரித்த கண்ணதாசன் திமுகவில் இருந்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரனும் திமுககாரர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் போட்டியாக சிவகெங்கைச் சீமை எடுக்கப்படுவதாக மக்கள் நம்பியதற்கு இந்த அரசியல் பின்னணியும் ஒரு காரணமாக அமைந்தது.

1799 அக்டோபர் 16 கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டபின் அவரது தம்பி ஊமைத்துரையை கொலை செய்ய ஆங்கிலேயே அரசு முயற்சி செய்தது. அவர் தப்பியோடி மருது சகோதரர்களிடம் அடைக்கலம் புகுந்தார். அதனை காரணமாக வைத்து மருது சகோதரர்களின் சிவகெங்கைச் சீமை மீது கும்பினியாரின் படைகள் தாக்குதல் நடத்தின. மருது சகோதரர்கள் அவர்களை எளிதாக வெற்றி கொண்டனர். இந்த வெற்றி ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது. அவர்கள் பிரிட்டனிலிருந்து கூடுதல் படைகளை வரவழைத்து மீண்டும் தாக்குதல் தொடுத்தனர். இந்தமுறை மருது சகோதரர்களுக்கு எதிராக சில தமிழர்களே சதி செய்ததால் அவர்கள் வீழ்த்தப்பட்டு ஆங்கிலேயரால் கொல்லப்பட்டனர்.

இந்த வரலாறை காதல் புனைவுடன் சிவகெங்கைச் சீமை சொன்னது. இதில் மருது பாண்டியரைவிட அவரது தளபதியான முத்தழகின் கதாபாத்திரமே வீரியமாக சித்தரிக்கப்பட்டது. அந்த வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தார். அவர் காதலிக்கும் சிட்டுவாக கமலா லக்ஷ்மண் நடித்தார். ஆங்கிலேயரிடம் மருது சகோதரர்களை காட்டிக் கொடுக்கும் முத்தழகின் அண்ணன் கதாபாத்திரத்தில் பி.எஸ்.வீரப்பா தோன்றினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன் படத்தை வெளியிடுவதற்காக சிவகெங்கைச் சீமையை அவசர அவசரமாக எடுத்தனர். படத்தை கே.சங்கர் இயக்கினார். இந்த அவசரமே படத்தின் பலவீனமாக முடிந்தது. திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட முடியவில்லை. 1959 மே 16 வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகி மூன்று தினங்கள் கழித்து 19 ஆம் தேதி சிவகெங்கைச் சீமை வெளியானது. அதற்குள் கட்டபொம்மன் தமிழக மக்களை வசீகரித்திருந்தான். குறிப்பாக சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் பிரளயத்தை ஏற்படுத்தின.

Also read... 'பிச்சைக்காரி' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம்.. தமிழ் சினிமாவின் ’பிச்சை’ பெயர்கள்!

சிவகெங்கைச் சீமையையும் மக்கள் ஆரவாரத்துடனே வரவேற்றனர். அன்று வளர்ந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை தாங்கிய படம் என்ற அடையாளம் சிவகெங்கைச் சீமைக்கு இருந்தது. இதனால் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பெயர் வரும் போதும், அவர் திரையில் தோன்றும் இடங்களிலும் கரவொலி எழுந்தது. ஒரு பாடலில், 'மன்றம் மலரும் முரசொலி...' என்ற வரிகளை கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்த வரி பாடப்படும் போதும் கரவொலி விண்ணை எட்டும். இப்படி படம் நெடுக கரவொலியுடன் படத்தை திமுக அனுதாபிகள் கண்டு ரசித்தனர். இதுவும், படத்தில் சம்பிரதாயங்களுக்கு எதிராக வைக்கப்பட்டக் காட்சிகளும் சனாதனிகளை கொந்தளிக்கச் செய்தன. பகுத்தறிவு முற்றினால் இப்படித்தான் படம் எடுக்கத் தோன்றும், கறுப்பு உடையில் சிட்டுவின் ஆட்டத்தைப் பார்க்கும் போதே சிவகெங்கைச் சீமையின் அழிவு தெரிந்துவிட்டது என்றெல்லாம் எழுதினர்.

மாலையிட்ட மங்கை படத்தைத் தொடர்ந்து சிவகெங்கைச் சீமையை கண்ணதாசன் தயாரித்திருந்தார். திரைக்கதை, வசனத்துடன் படத்தில் இடம்பெற்ற 16 பாடல்களையும் அவரே எழுதினார். வீரபாண்டிய கட்டபொம்மன் அளவுக்கு இல்லையென்றாலும், இப்போதும் ஒருமுறை சிவகெங்கைச் சீமையை பார்த்து வைக்கலாம்தான். 1959 மே 19 வெளியான இப்படம் இன்று 64 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema