சினிமா மீது கொண்ட பெருங்காதலால் திரைத்துறைக்கு வந்தவர் ஜோசப் தளியத் ஜுனியர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவரது தந்தை கண்டிப்பான உயர் நீதிமன்ற நீதிபதி. தந்தையின் விருப்பத்துக்கு மாறாக, சினிமா மீது கொண்ட காதலால் சென்னை வந்து, திரைத்தறையில் பணியாற்றினார் தளியத். சென்னையில் அவருக்கு நட்பானவர் நியூட்டன் ஸ்டுடியோஸின் பங்குதாரர்களில் ஒருவரான எஃப்.நாகூர். இவர் சிறந்த கலை இயக்குனரும் கூட.
தளியத் நாகூருடன் இணைந்து சிட்டாடல் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஞான சுந்தரி என்ற திரைப்படத்தை 1948-ல் தயாரித்தார். தளியத், நாகூர் இருவரும் இணைந்து படத்தை இயக்கவும் செய்தனர். ஞான சுந்தரி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது கொடுத்த உற்சாகத்தில், சிட்டாடல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தனியாகவே படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்தார் தளியத்.
1957-ல் இவர் தயாரித்து இயக்கிய மல்லிகா திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி நடித்தனர். அந்தப் படத்தை பாயல் என்ற பெயரில் இந்தியில் சுனில் தத், பத்மினியை வைத்து இயக்கினார். பல படங்களை இந்தியில் டப்பிங் செய்தும் வெளியிட்டுள்ளார். 1965-ல் இவர் இயக்கிய இரவும் பகலும் படத்தில் ஜெய்சங்கர், சி.வசந்தா ஆகியோரை அறிமுகம் செய்தார். இரவும் பகலும் ஹிட்டாகி ஜெய்சங்கர் என்ற அறிமுக நடிகருக்கு நல்லதொரு முகவரியை தந்தது. அடுத்த வருடம் தளியத் படம் இயக்குவது அறிந்து, ஜெய்சங்கர் சென்று வாய்ப்பு கேட்க, அவருக்காக கதையை மாற்றி எடுத்ததுதான் தளியத்தின் இன்னொரு வெற்றிப் படமான காதல் படுத்தும் பாடு. இதில் வாணிஸ்ரீ ஜெய்சங்கரின் ஜோடியாக நடித்தார்.
1952-ல் தனது தாய்மொழி மலையாளத்தில் ஆத்மசாந்தி என்ற படத்தை தளியத் இயக்கினார். அதனை அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். டி.ஆர்.பாப்பாவின் இசையும் பாடல்களும் படத்தின் ஹைலைட்டாக அமைந்தன. மொத்தம் உள்ள 12 பாடல்களில் 10 பாடல்களை நாஞ்சில் டி.என்.ராஜப்பா எழுத, இரு பாடல்களை கே.பி.காமாட்சிசுந்தரம் எழுதினார். அதில் ஒன்று, பின்னணிப் பாடகர் டி.ஏ.மோதியும், பி.லீலாவும் பாடிய வண்டிரண்டும் ஓடுது பார்... பாடல். இந்தப் பாடலுடன் சேர்த்து மொத்தம் மூன்று பாடல்களை மோதி பாடினார். மூன்றுமே தேனமுது. வண்டிரண்டும் பாடல் கே.பி.காமாட்சியின் எளிய வரிகளில் ரசிகர்களை சட்டென்று ஈர்த்தது. அந்தப் பாடல்...
வண்டிரண்டும் ஓடுது பார்
வண்டிரண்டும் ஓடுது பார்
வானம்பாடி குருவிகள் போலே
போகலாம் இனி மேலே (2)
ஆனந்தம் காணுவோம்...
வளர்மதிபோலே
எழில் முகமானே
வாழ்வின் ஜோதி நீ தானே...
மாமயிலே
மாமுகிலே
வாசமேவும் மாமலர் நீயே
வாழ்வின் மணம் நீ தானே
ஆசை தந்த மோகினி நீயே
அழகு மோகனன் நீயே
பாசமேவும் காதலாலே
பழகும் சகடைகள் நாமே...
எளிய தமிழில் அமைந்த வரிகளை மோதி, பி.லீலா குரல்களில் கேட்பது எப்போதும் ஆனந்தம் தரும் அனுபவம். அதுபோல் மோதி பாடிய, ஆதாரம் ஏதும் இல்லையே... பாடல் இன்னொரு தேனமுது. ஆத்மசாந்தியில் டி.கே.மாதவன் நாயரும், மிஸ் குமாரியும் பிரதான வேடங்களில் நடித்தனர். படம் மலையாளத்தில் போன அளவுக்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. எனினும் அதன் பாடல்களால் இன்றும் நினைவுகூரப்படும் படமாக உள்ளது.
1952 மார்ச் 21-ஆம் தேதி வெளியான ஆத்மசாந்தி நேற்று 71-வது வருடத்தை நிறைவு செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema