எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜி.எஸ்.மணி இயக்கத்தில் வெளியான படம் சாந்தி நிலையம். ஜெமினி கணேசன், காஞ்சனா பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
எஸ்.எஸ்.வாசனுடன் ஜெமினி ஸ்டுடியோஸை நிர்வகித்து வந்தவர் அவரது மருமகனான ஜி.எஸ்.மணி. அவரை இயக்குனராக்க வேண்டும் என்ற விருப்பம் வாசனுக்கு இருந்தது. அதற்காக சரியான கதையை அவர் தேடிக் கொண்டிருந்த போது கன்னடப் படமான பேடி பண்டாவலு என்ற படத்தைப் பார்க்க நேரிடுகிறது. படம் அவருக்குப் பிடித்துப்போக அதன் உரிமையை வாங்கி தமிழில் சாந்தி நிலையமாக எடுத்தார் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிற கதை. ஆனால், இதற்கு இன்னொரு வெர்ஷனும் உண்டு.
வாசன் தனது மாப்பிள்ளை ஜிஎஸ்.மணியை இயக்குனராக்குவது என்று தீர்மானித்த போது, ஜி.எஸ்.மணி ஸ்ரீதரின் நண்பரும், காதலிக்க நேரமில்லை உள்பட பல ஸ்ரீதர் படங்களின் கதாசிரியருமான சித்ராலயா கோபுவை தேடிச் சென்றுள்ளார். அப்போது கோபுவின் வீடு சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது. கோபுவை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கோபுவுக்கோ ஆச்சரியம். எப்பேர்ப்பட்ட நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோஸ், அதன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசனின் மருமகனே தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்றால் சும்மாவா?
தனது மாமனார் தன்னை இயக்குனராக்க தீர்மானித்திருப்பதை கோபுவிடம் கூறிய ஜி.எஸ்.மணி, சவுண்ட் ஆஃப் மியூஸிக் போன்ற ஒரு கதையை தனக்காக தயார் செய்து, திரைக்கதை அமைத்துத் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு கோபுவும் உடனடியாக ஒப்புக் கொண்டு வேலைகளை ஆரம்பித்துள்ளார். திரைக்கதை தயாரானதும் வாசன் முன்னிலையில் படித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். காதலிக்க நேரமில்லை படத்தின் கதாசிரியர் என்றதும் வாசனுக்கும் ஆர்வம் தோன்றியிருக்கிறது. ஒருகட்டத்தில் தனது வீட்டில் உள்ளவர்களையும் அழைத்து கதை கேட்க வைத்துள்ளார்.
சித்ராலயா கோபுவின் கூற்றுப்படி, வாசனுக்கு கதை பிடித்திருந்திருக்கிறது. ஆனால், எலைட் கதையாக இருக்கிறது, பி அண்ட் சியில் ஓடாது என்றிருக்கிறார். கதையில் வரும் பாலு கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டிய கோபு, நாகேஷ் இதில் நடித்தால் படம் சி சென்டர்வரை போகும் என்று சமாதானப்படுத்தியுள்ளார். வாசனும் படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டு, சாந்தி நிலையம் உருவானது என்பது இன்னொரு கதை. சாந்தி நிலையம் கன்னடப் படத்தை அப்படியே கொண்டிருந்ததால் பிரச்சனை வேண்டாம் என அதன் உரிமையை வாங்கியதாகவும் கூறுகிறார்கள்.
Also read... பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தப்பித்த அவன் அமரன் திரைப்படம்
எப்படியிருந்தாலும் சாந்தி நிலையம் சவுண்ட் ஆஃப் மியூஸிக்கின் ஆழமான பாதிப்பை கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் Charlotte Brontë எழுதிய Jane Eyre நாவலை தழுவி கன்னடப் படமான பேடி பண்டாவலு படத்தை எடுத்தனர். அந்த ஆங்கில நாவலின் தாக்கத்தையும் சாந்தி நிலையத்தில் பார்க்கலாம். அதிகாரப்பூர்வமாகப் பார்த்தால் சாந்தி நிலையத்தின் கதைக்கான கிரெடிட்டை அந்த பிரிட்டன் எழுத்தாளருக்குத்தான் தர வேண்டும்.
சாந்தி நிலையத்தில் ஜெமினி கணேசனை விடவும் காஞ்சனாவின் கதாபாத்திரமே அனைவரையும் கவர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு ராஜாங்கமே நடத்தினார். குறிப்பாக, இயற்கை எனும் இளைய கன்னி உள்பட அனைத்துப் பாடல்களும் ஆரவாரமாக வரவேற்கப்பட்டன. பூமியில் இருப்பதும்... பாடலை காஞ்சனா குழந்தைகளுடன் ஹீலியம் பலூனில் பறந்தபடி பாடுவதாக எடுத்தனர். உண்மையில் பலூனை பறக்கவிடாமல் தரையில் வைத்தே இந்தக் காட்சியை படமாக்கினர். பலூன் பறப்பது போல் காட்டியது ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லேயரின் திறமை. இந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
1969 மே 23-ல் வெளியான சாந்தி நிலையம் வாசன் கணித்தது போல் ஏ சென்டர்களில் ஓடிய அளவுக்கு பி, சி சென்டர்களில் வரவேற்புப் பெறவில்லை. சாந்தி நிலையம் வெளியாகி தற்போது 54 வருடங்கள் நிறைவு பெறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema