தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்தில் மறக்க முடியாத திரைப்படங்களை தந்தவர் கே.பாலசுப்பிரமணியம். மௌனப்படக் காலத்தில் புராண, இதிகாச கதைகளே பெரும்பாலும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்தி படங்களுக்குப் பிறகே புராண, இதிகாச கதைகள் புறம்தள்ளப்பட்டன. இதில் விதிவிலக்கு உண்டு. அவர் கே.பாலசுப்பிரமணியம்.
1934 பவளக்கொடி படத்தை இயக்கி திரைத்துறையில் நுழைந்த இவர் சமூக சீர்த்திருந்த கருத்துக்களைக் கொண்ட படங்களை இயக்கினார். குறிப்பாக மத, சாதி ரீதியாக சமூகத்தில் நிலவிவந்த அடிப்படைவாத கோளாறுகளை தனது படங்களில் விமர்சித்தார். 1937 இல் இவர் பாலயோகினி என்ற படத்தை இயக்கினார். இதில் வரும் சப் கலெக்டரின் சகோதரி ஒரு விதவை. அவர் சப் கலெக்டரை சந்திக்கவரும் பெண்ணை அவமானப்படுத்திவிடுவார். சப் கலெக்டர் கோபமாகி, விதவை சகோதரியை வீட்டைவிட்டு துரத்துவார். அவருக்கு அடைக்கலம் தருவது முனுசாமி என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் சப் கலெக்டரின் வேலைக்காரர்.
முனுசாமி இறந்த பிறகு அவரது குழந்தைகளை விதவை சகோதரி வளர்ப்பார். இது சமூகத்துக்குப் பிடிக்காது. வீட்டை தீ வைத்துக் கொளுத்திவிடுவார்கள். அன்றைய விதவைகளின் நிலை, சாதிய பாகுபாடுகள் என பல விஷயங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன. பாலயோகினி விமர்சனங்களுடன் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து 1938 இல் ஸேவாஸதனம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இது சுமதி என்ற பிராமணப் பெண்ணைப் பற்றியது. அவளது கணவன் கொடுமைக்காரன். ஒருகட்டத்தில் அவளை வீட்டைவிட்டு துரத்துவான். காலம் அவளை பாலியல் தொழிலாளியாக்கும். பிறகு அதிலிருந்து மீண்டு, பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்காக ஒரு சேவை மையத்தைத் தொடங்கி தனது வாழ்க்கையை அந்தக் குழந்தைகளின் நலன்களுக்காக அர்ப்பணிப்பாள்.
1973 இல் கே.பாலசந்தர் இயக்கிய அரங்கேற்றம் படத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக ஒரு பிராமணப் பெண் பாலியல் தொழில் செய்வதாக காட்டப்பட்டிருக்கும். அதற்கு ஒரு சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில் பாலியல் தொழிலாளியாக நடித்த பிரமிளா மாட்டிக் கொண்டார். அவரை வேறு படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். கிடைத்த வேடங்களும் பாலியல் தொழிலாளியாகவே இருந்தன. இறுதியில் மலையாள காலைக்காட்சிப் படங்களில் நடிக்கும் அளவுக்கு பிரமிளாவின் நிலைமை கீழிறங்கியது. இது இப்படி இருக்க,
1938 இல் சாதியப்படிநிலைகள் கறாராக பின்பற்றப்பட்ட காலகட்டம். ஒரு பிராமணப் பெண் பாலியல் தொழில் செய்வதாக காட்டியதற்கு என்னவிதமான எதிர்ப்பு எழுந்திருக்கும் என்பதை நாமே கற்பனை செய்து பார்க்கலாம். படத்தை இயக்கிய கே.பாலசுப்பிரமணியம் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது சாதியே அவருக்கு கேடயமானது. சுமதியாக நடித்தவர், வேறு யாருமில்லை எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரது முதல் படம் இது. இந்த வாய்ப்பை அவருக்கு வாங்கித் தந்தவர் அன்றைய காலகட்டத்தின் பிரபல நடிகையும், இயக்குனர் கே.பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான எஸ்.டி.சுப்புலட்சுமி. அவரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தாயும் தோழிகள். அந்த நட்பில் இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். அதேபோல் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு முதன்முதலாக கச்சேரி செய்யும் வாய்ப்பை பெற்றுத் தந்ததும் இவரே.
Also read... அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே... ஹேப்பி பர்த்டே த்ரிஷா!
ஸேவாஸதனம் படம் இந்தி மற்றும் உருது நாவலாசிரியர் பிரேம்சந்த் எழுதிய பாசார் - இ - குஷ்ன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. குழந்தைத் திருமணங்கள் சாதாரணமாக நடக்கும் காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை இது. மணமகன் இறந்தால் அந்த சின்ன வயதிலேயே பெண்களின் தலைமொட்டையடிக்கப்பட்டு மூலையில் முடக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட விதவைகளுக்கென்றே விடுதிகள் வாரணாசியில் உண்டு. அது குறித்து தீபா மேத்தா எடுத்தப் படம்தான் வாட்டர். அந்த வாரணாசி பின்னணியில் நாவலின் கதை எழுதப்பட்டது. இதனைத் தழுவி எடுக்கப்பட்தே ஸேவாஸதனம்.
இந்தப் படம் வெளிவந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான என்.சங்கரைய்யா படத்தைப் பாராட்டி எழுதினார். அப்போது வெளிவந்து கொண்டிருந்த திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, இளம் பெண்ணை முதிய ஆண் திருமணம் செய்யும் வழக்கத்தையும், அதனால் விளையும் கேடுகளையும் படம் கூறியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
1938 இல் ஸேவாஸதனம் படத்துக்கு எழுந்த எதிர்ப்பைவிட அதிக எதிர்ப்பை 1973 இல் வெளியான பாலசந்தரின் அரங்கேற்றம் படம் எதிர்கொண்டது. ஒரு நடிகையின் திரைவாழ்க்கையே அஸ்தமித்தது. இன்று அப்படியொரு படத்தை நம்மால் எடுக்கவே முடியாது. நவீனமும், நெகிழ்வுத்தன்மையும் கொண்டதாக மாற வேண்டிய சமூகமும், திரைத்துறையும் கடந்த 80 - 85 வருடங்களில் மேலும் கெட்டிப்பட்டு இறுகிப் போயுள்ளது.
1938 மே 2 ஆம் தேதி வெளியான ஸேவாஸதனம் நேற்று 85 வது வருடத்தை நிறைவு செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema