முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே படத்தில் ஆண், பெண் வேடம்.. கமலுக்கே முன்னோடி இவர்தான் - நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி பற்றி தெரியுமா?

ஒரே படத்தில் ஆண், பெண் வேடம்.. கமலுக்கே முன்னோடி இவர்தான் - நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி பற்றி தெரியுமா?

எஸ்.டி.சுப்புலட்சுமி

எஸ்.டி.சுப்புலட்சுமி

1930 - 40களில் ஹீரோயினாக கலக்கிய நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி பற்றிய சுவாரசியத் தகவல்கள்

  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்.டி.சுப்புலட்சுமி முப்பது மற்றும் நாற்பதுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர். சின்ன வயதிலேயே இசையும், நடனமும் பயின்று நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக்கிய போது, நாடகத்தில் நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியும் சினிமாவில் அறிமுகமானார்.

படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியமுக்கும் அதுதான் முதல் படம். அவரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1936 இல் கே.சுப்பிரமணியம் இயக்கிய குசேலர் படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார்.

ஏழை பிராமணனான குசேலரும், கிருஷ்ணரும் ஒன்றாக உஜ்ஜயினியில் உள்ள சாந்தீபன முனிவரின் ஆசிரமத்தில் குருகுல கல்வி படிப்பார்கள். கிருஷ்ணர் கல்வியை முடித்து துவாரகை திரும்புவார். குசேலர் தனது கிராமத்துக்குச் சென்று மனைவி, குழந்தைகள் என லௌகீக வாழ்க்கையில் ஈடுபடுவார். கோவிலில் பூஜை செய்யும் பிராமணர் அல்லாததால் குசேலர் வறுமையில் வாடுவார். அவரது மனைவி கிருஷ்ணரிடம் சென்று ஏதாவது பொருளுதவி பெற்றுவரும்படி கூறுவாள். குசேலருக்கு அதில் உடன்பாடு இல்லை. உங்களுக்காக வேண்டாம், நம் குழந்தைகளுக்காக சென்று வாருங்கள் என குழந்தை சென்டிமெண்டைகூறி  குசேலரை அனுப்பி வைப்பாள். கிருஷ்ணரை சந்திக்கும் போது அவருக்குத்தர, நாலுவீட்டில் சென்று அவல் வாங்கி அதனை துணியில் முடிந்து தருவாள் குசேலரின் மனைவி சுசீலை.

துவாரகையில் உள்ள கிருஷ்ணரின் அரண்மனைக்கு குசேலர் செல்வார். அரண்மனை காவல்காரர்கள் மூலம் தகவல் கிருஷ்ணருக்கு செல்லும். குசேலர் என்ற பெயரை கேட்டதும் அரண்மனை வாயிலுக்கே வந்து நண்பனை வரவேற்று, தடபுடல் விருந்து வைப்பார் கிருஷ்ணர். நண்பா என்னைப் பார்க்க வருகையில் எனக்கு ஏதாவது கொண்டு வந்திருப்பாயே என்று கேட்பார் கிருஷ்ணர். குசேலர் தயங்கிக் கொண்டே தான் கொண்டு வந்த அவலைத் தர, ஆகா, என்ன ருசி என்று அதனை சாப்பிட்டு மகிழ்வார் கிருஷ்ணர்.

பல தினங்கள் அரண்மனையில் கிருஷ்ணரின் விருந்தினராக தங்கிவிட்டு குசேலர் வீடு திரும்புகையில் தனது மனைவி பிள்ளைகள் மாட மாளிகையில் பட்டுடுத்தி, பணக்கார வாழ்வு வாழ்வதை காண்பார்.

இந்த சமஸ்கிருத கதையில் குசேலரின் பெயர் சுதாமா என்பதாகும். தமிழில் குசேலர். இதனை பலமுறை தமிழ் சினிமா படமாக்கியிருக்கிறது. 1936 இல் படமான போது பாபநாசம் சிவன் குசேலராக நடித்தார். அவரது மனைவி சுசீலையாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். அது மட்டுமில்லை, குசேலரின் நண்பர் கிருஷ்ணராகவும் அவரே நடித்திருந்தார். ஒரே படத்தில் ஆண், பெண் வேடமிட்டு வருவது ஒருவகை. அவ்வை சண்முகியில் கமல் அப்படித்தான் நடித்தார்.

ஆனால், ஒரே படத்தில் ஆண், பெண் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பது அபூர்வம். (தசாவதாரத்தில் கமல் பாட்டியாக நடித்தது இந்தவகையைச் சேர்ந்தது) 1936 லேயே ஒரு நடிகை பெண், ஆண் என இரு வேடங்களில் நடித்தார். இந்திய சினிமாவில் அதற்கு முன் யாரும் ஆண், பெண் என இரு கதாபாத்திரங்களை ஒரே படத்தில் ஏற்று நடித்ததில்லை.

குசேலா வெளியான போது அதன் பாடல்கள் மற்றும் எஸ்.டிசுப்புலட்சுமியின் நடிப்புக்காக பாராட்டப்பட்டது. படமும் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்தது. 1936 ஏப்ரல் 10 வெளியான குசேலா இன்று 87 வது வருடத்தை நிறைவு செய்கிறது

First published:

Tags: Classic Tamil Cinema