முகப்பு /செய்தி /entertainment / தயங்கி நின்ற சரத்பாபு.. நடிக்க வைத்த ஜெயலலிதா.. சரத்பாபுவின் திரை பயணம்!

தயங்கி நின்ற சரத்பாபு.. நடிக்க வைத்த ஜெயலலிதா.. சரத்பாபுவின் திரை பயணம்!

சரத்பாபு

சரத்பாபு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த கடைசி படமான 'நதியை தேடி வந்த கடல்' படத்தில் கதாநாயகனாக சரத்பாபு நடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சரத்பாபு ஹைதராபாத்தில் மறைந்தார். 71 வயதான அவரது திரைப்பயணம் குறித்த தொகுப்பை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

சரத் பாபு என்றவுடன் சட்டென்று இந்தப் பாடல் திரை ரசிகர்களின் நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது. 70களில் தொடங்கி 90கள் வரையில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக, பணக்கார இளைஞனாக, நண்பனாக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. தெலுங்கு படங்களில் அறிமுகமான சரத்பாபுவிற்கு பட்டினப்பிரவேசம் என்ற தமிழ் திரைப்படம் முதல் திரைப்படம் என்றாலும் ’நிழல் நிஜமாகிறது’ திரைப்படமே சரத் பாபுவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த முக்கியமான திரைப்படம்.

தமிழ், தெலுங்கு என மாறி மாறி திரைப்படங்களில் நடித்த சரத்பாபுவிற்கு தமிழில் முன்னணி இயக்குனர்களான மகேந்திரன், கே பாலச்சந்தர் ஆகியோர் முக்கியத்துவம் அளித்து தங்களது திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகளை வழங்கினர்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என மகேந்திரன் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் எல்லாம் சரத்பாபுவுக்கு என கதாபாத்திரங்கள் காத்துக் கொண்டிருந்தன. இதேபோல பாலச்சந்தர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் , முத்தா சீனிவாசன் இயக்கிய கீழ்வானம் சிவக்கும் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் எல்லாம் சரத் பாபு தனது கதாபாத்திரத்தால் தமிழ் சினிமாவை அலங்கரித்தார்.

ரஜினிகாந்துடன் நடித்த 2 திரைப்படங்கள் அவரது திரைவாழ்வில் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்தன. முள்ளும் மலரும் திரைப்படத்தில் இரண்டு கைகளையும் இழந்து விட்டு நடிகர் ரஜினி மிடுக்காக சரத் பாபுவை பார்த்து பேசும் வசனங்கள் ரஜினியின் சாந்தமான சவாலுக்கு சாட்சியாக நின்றன. இதே போல, ரஜினியின் ஆரம்ப கால ஹிட் படமான நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

இதுபோல் அண்ணாமலை திரைப்படத்தில் வீட்டை இழந்து விட்டு சரத்பாபுவை பார்த்தும் ஆக்ரோஷமாக ரஜினி பேசும் வசனங்கள் நெஞ்சை விட்டு அகலாதவை. ரஜினியின் கேரியரில் அண்ணாமலையும், முக்கிய படமாக அமைந்தது.

மேலும் முத்து திரைப்படத்திலும் ரஜினியின் நண்பனாக தோன்றி முத்திரை பதித்திருப்பார் சரத்பாபு. கமல்ஹாசனுடன் நண்பனாக சட்டம் திரைப்படத்தில் தோன்றி, அவருடன் பின்னர் மோதும் கதாப்பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சரத்பாபு.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த கடைசி படமான 'நதியை தேடி வந்த கடல்' படத்தில் கதாநாயகனாக சரத்பாபு நடித்தது குறிப்பிடத்தக்கது. சரத்பாபு தயங்கியபோது ஜெயலலிதா அவரை அழைத்து பேசிய பின்னரே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வந்த சரத்பாபு தமிழில் கடைசியாக சிங்கம் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்திருந்தார்.

top videos

    தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக மூன்று முறை நந்தி விருதையும் தமிழ் திரைப்படத்திற்காக ஒரு முறை சிறந்த துணை நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் வென்றவர் சரத்பாபு.

    First published:

    Tags: Actor, Death