வரலாற்று, புராணக் கதைகள் ஆரம்ப காலத்தில் அதிகம் எடுக்கப்பட்டன. மக்கள் செவிவழியாகக் கேட்ட புராண, சரித்திர கதைகளை திரைவடிவமாக்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் கலைஞர்களுக்கு அலாதியான இன்பம் இருந்தது. அந்தப் படங்கள் பக்தியை வளர்த்தன. இன்று மதப்பிளவை ஏற்படுத்தும் பல படங்கள் வருகின்றன. அந்த அரசியலைவிட்டு நாம் ருக்மாங்கதன் கதைக்கு வருவோம்.
பொதுவாக பூமியில் - அதாவது இந்தியாவில் ஒரு மன்னன் சிறப்பாக ஆட்சி செய்தால் அவனை வீழ்த்துவதற்கென்றே தேவலோகத்தில் இருந்து படையெடுப்பார்கள். அப்படியொரு கதைதான் ருக்மாங்கதனுடையதும். ருக்மாங்கதன் சூரிய வம்சத்தைச் சேர்ந்த அரசன். நெறிதவறாது ஆட்சி புரிந்து வருகிறவன். அவனது ஆட்சியின் திறத்தை வசிஷ்டர் இந்திரனிடம் எடுத்துரைக்க, அதனை நேரில் சென்று அறிந்துவரும்படி நாரதரை அனுப்புகிறான். அவரும் ருக்மாங்கதனின் அரண்மனைக்குச் செல்கிறார். அவரை மன்னன் முறைப்படி வரவேற்று, உபசரணைகள் செய்கிறான். மனநிறைவுடன் நாரதர் இந்திரலோகம் சென்று தேவேந்திரனிடம் தான் கண்டது, கேட்டது அனைத்தையும் கூறுகிறார்.
நாரதர் தேவசபைக்குள் நுழையும் போதே அதுவரை தேவர்கள் அறிந்திராத நறுமணமும் உடன் சேர்ந்து வருவதை கவனித்த இந்திரன் அது குறித்து கேட்க, ருக்மாங்கதன் தன்னை வரவேற்ற போது அணிவித்த மாலையிலிருந்து அது வருவதாகவும், அவனது மலர்த்தோட்டம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது எனவும், தனது கழுத்தில் கிடக்கும் மாலையை காட்டி சொல்கிறார். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட இந்திரன் தினமும் ருக்மாங்கதனின் தோட்டத்திலிருந்து இந்திர சபைக்கு மலர் கொண்டு வரும்படி தேவர்களை பணிக்கிறான். அவ்வாறே தேவர்களும் செய்கிறார்கள்.
தோட்டத்தில் மலர்கள் குறைவதை கவனித்த ருக்மாங்கதன் காவலைப் பலப்படுத்துகிறான். ஒருநாள் வீரர்கள் கத்திரிப்பூண்டு செடிகளை எரித்து, அந்த வெளிச்சத்தில் யார் மலர்களை திருடிச் செல்வது என்பதை தேட, தேவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் விஷயத்தைச் செல்ல, ருக்மாங்கதனும் அவர்களை மன்னித்து அனுப்பி வைக்கிறான்.
ஆனால், அவர்கள் வந்த விமானம் கிளம்ப மறுக்கிறது. ருக்மாங்கதனின் நாட்டில் யாராவது ஒருவர் ஏகதாசி விரதப் பலனை அளிக்க முன்வந்தால் விமானம் கிளம்பும் என்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில் யாருமே ஏகதாசி விரதம் இருக்கவில்லை. ஒரேயொரு பெண் மட்டும் கணவனுடன் சண்டையிட்டு, ஏகாதாசி அன்று உணவு உண்ணாமல் இருக்கிறாள். அவளது விரதப்பலனை பெற்று விமானத்தை கிளப்பி இந்திரலோகம் வந்து சேர்கிறார்கள்.
Also read... அர்ஜுனன்- சுபத்திரை திருமணத்தின் பின்னணி கதையைச் சொன்ன சுபத்திரா பரிணயம்!
இதன் பிறகு ருக்மாங்கதனும் அவனது குடிமக்களும் தவறாமல் ஏகதாசி விரதம் இருக்கிறார்கள். ஏகதாசி விரதம் இருந்து அனைவரும் நேரடியாக சொர்க்கலோகம் செல்வதால் தன்கு வேலையில்லாமல் போய்விட்டது என்று எமதர்மன் புலம்ப, இந்திரன் மோகினியை அனுப்பி, ருக்மாங்கதனை வசப்படுத்தி, ஒரு வரத்தையும் பெற்று விடுகிறான். ஏகதாசி விரதம் இருக்கக் கூடாது என்பதே அந்த வரம்.
இதைத்தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள் என மன்னனும், அவரது மனைவியும் மோகினிடம் கெஞ்ச, அவர்களின் ஒரே மகனை பலியாகக் கேட்கிறாள். மன்னனும் வாளை உருவி மகனை கொலை செய்யப் போகையில் தேவர்கள் அவனைத் தடுத்து, உன்னுடைய ஏகதாசி விரத உறுதியை பரிசீலிக்கவே இந்த நாடகத்தை நடத்தினோம் என்று சொல்ல, அன்று முதல் ஏகதாசி விரதம் தொடர்ந்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஏகதாசி விரதத்தின் காரணத்தைச் சொல்லும் மூன்று கதைகளில் நாரதர் புராணத்தில் இடம்பெறும் கதையிது. இதனை பி.எஸ்.வி.ஐயர் 1947 இல் திரைப்படமாக இயக்கினார். ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.ஆர்.ராமச்சந்திரன், சி.நாராயணராவ், மங்களம், பி.ஏ.பெரியநாயகி, சி.டி.ராஜகாந்தம், பி.ஏ.ராஜாமணி ஆகியோர் இதில் நடித்தனர். ராமநாதன் இசைக்கு பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதினார். 1947 மே 6 ஆம் தேதி வெளியான ருக்மாங்கதன் இன்று 76 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema