கே.பாலசந்தருக்கு முன் தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையுடன் புகழ்பெற்றிருந்தவர் எஸ்.பாலசந்தர். வீணை பாலசந்தர் என்றால் பலருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் 1947 இல் வெளியான பக்த துளசிதாஸ் படத்துக்கு இசையமைத்தார். அதற்கு அடுத்த வருடம், இது நிஜமா என்ற படத்தை இயக்கினார். இதன் இன்ஸ்பிரேஷனில் உருவானதுதான் கல்யாண ராமன் திரைப்படம்.
எஸ்.பாலசந்தர் வித்தியாசமான கதைக் களங்களை திரைப்படமாக்கியவர். பாடல்களே இல்லாமல் தயாரான முதல் தமிழ்ப் படம் அந்த நாளை இயக்கியவரும் இவரே. 1952 இல் ஏஎஸ்ஏ சாமி திரைக் கதையில், எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் இவர் ராணி என்ற படத்தில் நடித்தார். டைட்டில் ரோலில் நடித்தவர் பானுமதி. இதுவொரு நாயகி மையத் திரைப்படம்.
பிறமொழிப் படங்களைத் தழுவி தமிழில் படம் செய்வதாக பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். பழைய படங்களின் தரமும், கதையும், இப்போதைய படங்களில் இருப்பதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், இவை இரண்டுமே உண்மையில்லை. இன்றைவிட அன்று அதிகமான ஹாலிவுட் படங்கள் தமிழில் தழுவப்பட்டன. திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கதை குறித்த பார்வையும் மாறிவிட்டது. அன்று பல வருடங்களை உள்ளடக்கிய நீண்ட கதைகள் தேவைப்பட்டன. இன்று சிறு சம்பவம் போதும். அதையே சுவாரஸியமான சினிமாவாக்கிவிடுகிறார்கள். ராணி திரைப்படமும் ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதே.
நாற்பதுகளில் ஹாலிவுட்டின் காதல் தேவதையாக கொண்டாடப்பட்டவர் ரீட்டா ஹேவொர்த். அவர் தனது மகள் பெயரில் பெக்வொர்த் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கொலம்பியா பிக்சர்ஸுடன் இணைந்து 3 படங்கள் தயாரித்து, நடிப்பதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். முதல் படமாக தி லவ்ஸ் ஆஃப் கார்மென் தயாரானது. இதில் பிரதான வேடத்தில் ரீட்டா ஹேவொர்த் நடித்தார். இந்தப் படத்தை மேலோட்டமாகத் தழுவி எடுக்கப்பட்டதே ராணி திரைப்படம்.
ராஜவம்சத்தின் சடங்குப்படி, அரசகுலத்தில் பிறக்கும் குழந்தைக்கு அரச இலட்சினையை உடம்பில் பச்சைக்குத்துவார்கள். அப்படி அரசகுலத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பச்சைக்குத்தும் வைபவம் நடக்கும். அன்றிரவு, பச்சைக்குத்திய நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தையை கடத்திச் செல்வார்கள். வருங்கால இளவரசியான அந்தக் குழந்தையை தங்களின் தலைவியாக பாவித்து, தங்களுடனே வைத்துக் கொள்வார்கள். அரண்மனையில் வளர வேண்டிய அக்குழந்தை தெருவிலும், புழுதியிலும் வளரும். பருவ வயதை எய்திய பின் அந்த இளவரசிக்கு படைவீரன் ஒருவனின் மீது காதல் வரும். அவள் எப்படி தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை கண்டுபிடிக்கிறாள். இளவரசியாக எப்படி அரண்மனைக்குள் நுழைகிறாள் என்பது கதை.
Also read... ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!
இதில் இளவரசியாக பானுமதி நடித்தார். அவர் காதலிக்கும் இளைஞராக எஸ்.பாலசந்தர் நடித்தார். இவர்களுடன் எஸ்.வி.சுப்பையா, எம்.சரோஜா, வகாப் காஷ்மீரி, எம்.ஆர்.சந்தானம், பேபி சச்சு ஆகியோரும் நடித்தனர். அன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான படங்களை தயாரித்த எஸ்.சோமசுந்தரம், எஸ்.கே.மொகைதீன் ஆகியோரின் ஜுபிடர் பிலிம்ஸ் ராணியை தயாரித்தது. அவர்களின் ஆஸ்தான கதாசிரியரும், இயக்குனருமான ஏஎஸ்ஏ சாமி ஹாலிவுட் படத்தைத் தமிழுக்கேற்ப மாற்றி திரைக்கதை, வசனம் எழுதினார். ஆங்கிலேயரான எல்லீஸ் ஆர்.டங்கன் படத்தை இயக்கினார்.
அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற கதை என்பதால் படத்தை தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுத்தனர். பத்துக்கு மேற்பட்ட பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. பானுமதி, எஸ்.பாலசந்தரின் நடிப்பும், இசையும், கச்சிதமான இயக்கமும் ரசிகர்களுக்கு நல்ல காட்சி அனுபவத்தைத் தந்தன.
1952 ஏப்ரல் 26 வெளியான ராணி இன்று 71 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema