நட்சத்திர அந்தஸ்துடன் ஒரு நடிகர் 100 படங்களை எட்டுவதே ஒரு சாதனை. 100 வது படம் வெற்றிப் படமாக அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு இருக்க முடியாது. சிவாஜியைவிட வயதிலும், திரையுலக அறிமுகத்திலும் மூத்தவர் எம்ஜிஆர். சிவாஜி 1952 இல் திரையுலகுக்கு வந்தவர். எம்ஜிஆர் 1936 இல் சதிலீலாவதியில் அறிமுகமானார். ஆனால், முதலில் 100 படங்களை தொட்டவர் சிவாஜி. 1964 இல் அவரது 100 வது படம் நவராத்திரி வெளியானது.
சிவாஜி கணேசனின் நடிப்புக்காக திரையரங்குக்கு வருகிற ரசிகர்களே அதிகம். அவர் இரட்டை வேடத்தில் நடித்தால் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து. நவராத்திரியில் சிவாஜிக்கு ஒன்பது வேடங்கள். மனிதர் ஒன்பதுவிதமான பாவங்களில் பிச்சு உதற, அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ரசிகர்களுக்கு. கூடுதலாக நடிகையர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு. படம் திரையிட்ட அரங்குகள் அனைத்திலும் சிறப்பான வரவேற்பை பெற்று 100 நாள்கள் ஓடி, சிவாஜியின் பென்ச் மார்க் திரைப்படங்களுள் ஒன்றானது.
எம்ஜிஆர் நடிப்பில் 1968 இல் அவரது 100 வது படம் ஒளி விளக்கு வெளியானது. இந்திப் படத்தின் ரீமேக்கான இது எம்ஜிஆரின் பிற கமர்ஷியல் படங்களைப் போல ரசிகர்களை திருப்தி செய்து 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. கொழும்பில் அதிகபட்சமாக 150 நாள்கள் ஓடியது.
இவர்களுக்குப் பிறகு திரையில் முதன்மை இடத்தைப் பிடித்த கமல், ரஜினியில் கமல் தனது 100 வது படம் ராஜபார்வையை 1981 இல் எட்டினார். கமல் தனது சகோதரர்கள் சந்திரஹாசன், சாருஹாசனுடன் அப்படத்தை தானே ஹாசன் பிரதர்ஸ் பேனரில் தயாரித்தார். பிரபல தயாரிப்பாளரும், பிரசாத் ஸ்டுடியோவை நிறுவியவருமான எல்.வி.பிரசாத் ராஜபார்வையில் நாயகி மாதவியின் தாத்தாவாக நடித்தார். அப்பாவாக சந்திரஹாசனும், சர்ச் ஃபாதிரியாராக சாருஹாசனும் நடித்தனர். கமல் கண் தெரியாத வேடத்தில் நடித்தார்.
இந்தப் படத்தில் அவர் கண் தெரியாத வயலினிஸ்ட் என்பதால் முறைப்படி வயலின் கற்றுக் கொண்டார். இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. குறிப்பாக அந்திமழை பொழிகிறது பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. கண் தெரியாத நாயகன் எப்படி அந்தி மழையின் ஒவ்வொரு துளியிலும் நாயகனின் முகத்தைப் பார்க்க முடியும் என படம் வெளியான போது ஒரு சர்ச்சை ஓடியது.
கதைப்படி அந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாட அது ஒலிப்பதிவு செய்யப்படும். அதற்கு குழுவினருடன் சேர்ந்து நாயகன் வயலின் வாசிப்பான். ஏதோ ஒரு படத்திற்காக நடைபெறும் பாடல் ஒலிப்பதிவு அது. அந்தப் பாடலின் பின்னணியில் கமல், மாதவி காதல் காட்சிகள் இடம்பெறும் என்பதால் அது, கமல் பாடுகிற பாடல் என பலரும் தவறாக நினைத்தனர். சமீபத்தில்கூட வைரமுத்து ஒரு பேட்டியில் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
ராஜபார்வை படத்தின் கதை பட்டர்பிளைஸ் ஆர் ப்ளை என்ற ஹாலிவுட் படத்தை மேலோட்டமாக தழுவியது. அதன் கிளைமாக்ஸ் தி கிராஜுவேட் படத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தை மிகச்சிறப்பாக இயக்கியிருந்தார். விமர்சனரீதியாக ராஜபார்வை இன்று கொண்டாடப்பட்டாலும், 100 நாள்கள் ஓடிய போதிலும் அன்று அதுவொரு தோல்விப் படமாகவே கருதப்பட்டது. கமர்ஷியலாக படம் ஹாசன் பிரதர்ஸின் கையை கடித்தது.
ரஜினி 1985 இல் தனது 100 வது படம் ஸ்ரீராகவேந்திராவில் நடித்தார். ராகவேந்திரரின் தீவிர பக்தரான அவர் ராகவேந்திரராக இதில் தோன்றினார். அவரே கதை எழுதினார். ரசிகர்கள் எதிர்பார்த்த ரஜினி படத்தில் இல்லை என்பதால் படம் தோல்வியடைந்தது.
சிவாஜி, எம்ஜிஆருக்குப் பிறகு 100 வது படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய ஸ்டார் நடிகர் விஜயகாந்த். அவரது 100 வது படம் கேப்டன் பிரபகரன் 100 நாள்களை கடந்து ஓடி, மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
சொந்தத் தயாரிப்பின் மூலம் கமல் பரிசோதனை முயற்சியில் இறங்கியது ராஜபார்வையில் 1981 ஏப்ரல் 10 வெளியான அப்படம் இன்று 42 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.