முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளம்பெண் மீது மோகம்.. சமூகத்துக்கு எதிரான படமென சென்சாரில் சிக்கிய திரைப்படம்!

இளம்பெண் மீது மோகம்.. சமூகத்துக்கு எதிரான படமென சென்சாரில் சிக்கிய திரைப்படம்!

ராஜாம்பாள்

ராஜாம்பாள்

படத்தில் வயதான நீதிபதி இளம் பெண் மீது கொண்ட மோகத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படையாக காட்டியிருந்தனர். படம் சென்சாரை தாண்டி வந்தது அதிசயம். படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராசிபுரம் சுப்பிரமணியன் ஐயர் மனோகர் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்தப் பெயரின் சுருக்கம்தான் ஆர்.எஸ்.மனோகர். தமிழின் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அஞ்சல் துறையில் பணியாற்றிவந்த மனோகர் நடிப்பின் மீதிருந்தஆசையால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பிற்காலத்தில் 'லாஸ்ட் டாங்கோ இன் ஹெவன்' என்ற ஆங்கில நாடகத்தைத் தயாரித்தார். பிறகு அது 'காட் ஒன்லி நோவ்ஸ்' என்ற பெயரில் திரைப்படமானது.

ஆர்.எஸ்.மனோகர் 1951 இல் வெளியான ராஜாம்பாள் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதுதான் அவரது முதல் படம். ஜே.ஆர்.ரங்கராஜு ராஜாம்பாள் நாடகத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஆர்.எம்.கிருஷ்ணசுவாமி படத்தை இயக்கினார். இதில் நடேசன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் வீணை எஸ்.பாலசந்தர் நடித்தார். பின்னணி இசையும் அவரே.

சாமிநாத சாஸ்திரி, நடேச தீட்சிதர் இருவரும் நண்பர்கள். சாஸ்திரியின் மகள் ராஜாம்பாளும், தீட்சிதரின் மகன் கோபாலனும் காதலர்கள். தந்தையர்கள் இருவருக்கும் இந்த காதலில் பெருமகிழ்ச்சி. விரைவில் திருமணத்தை முடித்துவிடும் முடிவில் இருக்கிறார்கள். ஆனால், சாஸ்திரியின் இரண்டாவது மனைவி கனகவல்லி ராஜாம்பாளை தனது உதவாக்கரை தம்பி நடேசனுக்குக் கட்டித்தர வேண்டும் என அடம்பிடிக்கிறாள். சாஸ்திரி போராடிப் பார்த்தும் கனகவல்லி உடன்படாமல் போக, தனது சொத்தில் பாதியை நடேசனுக்கு எழுதித் தருகிறார். அப்போதும் அக்கா, தம்பி இருவரும் சமாதானமாகாமல் கோபாலன், ராஜாம்பாள் இருவரது ஜாதகமும் பொருந்திப் போகவில்லை என ஜோதிடரை பொய் சொல்லத் துhண்டுகிறார்கள். இந்த மெயின் கதையில் மூன்று கிளைக்கதைகள் இணையும்.

ராஜாம்பாளின் நடனத்தைப் பார்க்கும் கிழட்டு சப் மாஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிக்கு காம மேகம் ஏற்படுகிறது. ராஜாம்பாளை திருமணம் செய்ய, அவரும் சோதிடரை அணுகி பொய் சொல்லச் சொல்கிறார்...

இன்னொருபுறம் பணக்கார இளம் விதவையான லோகசுந்தரி கோபாலன் மீது காதல் கொள்கிறாள். விதவை மறுமணத்தை ஆதரித்து முற்போக்காகப் பேசும் கோபாலன், யாரையாவது திருமணம் செய்து கொள் என்று சொல்ல, அந்த யாரோ நீதான் என லோகசுந்தரி தனது ஆசையை வெளிப்படுத்துகிறாள். ஏற்கனவே ராஜாம்பாளை காதலிப்பதால் லோகசுந்தரியின் விருப்பத்துக்கு கோபாலன் உடன்பட மறுக்க, அவளும் கோபாலனின் திருமணத்தை முடக்க நினைக்கிறாள்...

ராஜாம்பாளை திருமணம் செய்ய அலையும் நடேசன் பாலாம்பாள் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான். அவளுக்கு நடேசனுடன் வாழ வேண்டும் என ஆசை....

நமது ஜட்ஜய்யாவின் ஏற்பாட்டின்படி சோதிடர் பொய் சொல்கிறார். ஆனால் சாஸ்திரியோ, கட்டம் பொருந்தி வந்தாலும் வராவிட்டாலும் என் பொண்ணு கோபாலனுக்கு தான் என்கிறார். இதனால், ஜட்ஜய்யா சாஸ்திரியின் வீட்டில் திருட்டு நகையை வைத்து சாஸ்திரியை திருடனாக்குகிறார். ராஜாம்பாளை திருமணம் செய்துத்தர மறுத்தால் கொலை வழக்கில் கோபாலனையும் சிறைக்கு அனுப்புவேன் என மிரட்டுகிறார். இதனால், ராஜாம்பாள் ஜட்ஜை மணக்க சம்மதம் தெரிவிக்கிறாள். அதேநேரம், அவள் கோபாலனுடன் கடிதத் தொடர்பில் இருப்பதையும் இரவு 2 மணிக்கு அவர்கள் ஓடிச்செல்ல தீர்மானித்திருப்பதையும் லோகசுந்தரி கண்டுபிடித்து நடேசனுக்கு தகவல் சொல்கிறாள்.

கோபாலனை தேடி வரும் ராஜாம்பாளை கடத்தி நடேசன் திருமணம் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்கள். நடேசனிடம் இருக்கும் கடிதத்தின் மூலம் இதனை அறிந்து கொள்ளும் பாலம்மாளும் இரவு அந்த இடத்துக்கு செல்கிறாள். பாலாம்மாளை நடேசனுக்கு முன் வைத்திருந்த நரசிம்மலு நாயுடுவும் பாலாம்மாளுக்கு தெரியாமல் அவளை பின் தொடர்கிறான்.

Also read... 1975 இல் எம்ஜிஆர், சிவாஜியை ஓவர் டேக் செய்த கமல்ஹாசன்

இந்த கும்பல்கள் ஒன்று சேரும்போது ஏற்படும் களேபரத்தில் பாலம்மாள் கொல்லப்பட்டு, தீக்கிரையாக்கப்படுகிறாள். தாமதமாக வரும் கோபாலன் இறந்து போனது ராஜாம்பாள் என தவறாக நினைக்கிறான். அவளை கொலை செய்த குற்றத்துக்காக அவன் கைது செய்யப்படுகிறான். நடேசனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜாம்பாள் என்னவானாள், உண்மை தெரிந்து கோபாலன் விடுதலையானானா என்பது மீதி கதை.

படத்தில் வயதான நீதிபதி இளம் பெண் மீது கொண்ட மோகத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படையாக காட்டியிருந்தனர். படம் சென்சாரை தாண்டி வந்தது அதிசயம். படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சென்சார் சான்றிதழை படத்தின் தயாரிப்பாளர் மறுபடி புதுப்பிக்கச் சென்ற போது, அப்போதைய சென்சார் அதிகாரி ஜி.டி.சாஸ்திரி சான்றிதழை புதுப்பிக்க மறுத்ததோடு, இது சமூக விரோதத் திரைப்படம், இதை வெளியிடவே கூடாது என்று திருப்பி அனுப்பினார்.

படத்தில் கோபாலனாக ஆர்.எஸ்.மனோகரும், நடேசனாக வீணை எஸ்.பாலசந்தரும் நடித்தனர். ராஜாம்பாளாக பி.கே.சரஸ்வதியும், லோகசுந்தரியாக மாதுரிதேவியும், பாலாம்பாளாக சி.ஆர்.ராஜகுமாரியும், கனகவல்லியாக சி.கே.சரஸ்வதியும் நடித்தனர். கிழ ஜட்ஜ் நீலமேக சாஸ்திரியாக டி.என்.சிவதாணு நடித்தார்.

கதையும், திறமையான நடிப்பும், இனிமையான இசையும், பாடல்களும் படத்தை வெற்றி பெறச் செய்தன. 1951 மே 18 வெளியான ராஜாம்பாள் தற்போது 72 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema