முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தடை செய்யப்பட்ட பாரதியார் பாடல்கள்.. சினிமாவில் பயன்படுத்திய இயக்குநர்.. 1942ல் நடந்த நச் சம்பவம்!

தடை செய்யப்பட்ட பாரதியார் பாடல்கள்.. சினிமாவில் பயன்படுத்திய இயக்குநர்.. 1942ல் நடந்த நச் சம்பவம்!

பிருத்விராஜன்

பிருத்விராஜன்

ஆங்கிலேயருக்கு எதிராக திரைப்படங்களை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். பாடல், வசனங்கள் வழியாக ஆங்கிலேயரை தொடர்ச்சியாக எதிர்ந்து வந்தனர். தியாகராஜ பாகவர், பி.யூ.சின்னப்பா போன்ற அந்தக்கால சூப்பர் ஸ்டார்கள் அதற்கு உறுதுணையாக இருந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடஇந்தியாவைச் சேர்ந்த பிருத்விராஜ் மகாராஜாவைக் குறித்து வரலாறும் புனைவும் கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் பிருத்விராஜன். 1942 இல் திரைக்கு வந்த இந்தப் படத்தில் பிருத்விராஜ் மகாராஜாவாக பி.யூசின்னப்பா நடித்தார்.

பிருத்விராஜும், கனோஜ் மன்னன் ஜெயசந்தரும் இணைந்து முஸ்லீம் மன்னன் முகமது கோரியை போரில் தோற்கடித்து வெற்றிவாகை சூடுகிறார்கள். சித்தூர் மன்னர் சமரசிங்கர் காரணமாக முகமது கோரியை மன்னித்து அவனை அவனது சொந்த தேசத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த நேரத்தில், பிருத்விராஜின் பாட்டனாரும், அஜ்மீரின் அரசருமான நந்தபாலன் மரணப்படுக்கையில் இருப்பதாக சேதி வர, பிருத்விராஜும், ஜெயசந்தரும் அஜ்மீருக்கு அவரை காணச்செல்கிறார்கள், நந்தபாலன் தனது நாட்டை பிருத்விராஜிடம் ஒப்படைக்கிறார். இவை அனைத்தையும் கவனித்துவரும் ஜெயசந்தரின் மந்திரி ஜாலவர்மன் பிருத்வி - ஜெய்சந்தர் இடையே பகையை மூட்டிவிடுகிறான்.

இதனால், குழப்பத்தில் இருக்கும் பிருத்விராஜின் மனதை சித்திரங்களின் மீது திருப்பிவிடுகிறார் அவனது அரசவை கவி. அதில் இடம்பெற்றிருக்கும் ஜெய்சந்தரின் மகள் சம்யுக்தாவின் சித்திரத்தைப் பார்க்கும் பிருத்வி அவள்மீது காதல் கொள்கிறான். இதையறியும் ஜெயசந்தர் மகளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்வதுடன், பிருத்வியை அவமானப்படுத்தும்விதமாக பிருத்வியின் சிலையை செய்து அதனை சுயம்வர மண்டப வாசலில வைக்கிறான். சுயம்வரம் நிகழும் அன்று குதிரையில் வரும் பிருத்வி சம்யுக்தாவை கடத்திச் சென்று திருமணம் செய்கிறான்.

வரலாறும் புனைவும் இணைந்த இந்தக் கதை 1942 இல் சம்பத்குமார் இயக்கத்தில் பிருத்விராஜன் என்ற பெயரில் வெளியானது. பி.யூ.சின்னப்பா பிருத்விராஜனாக பிரதான வேடத்தில் நடித்தார். ஜெயசந்தராக டி.எம்.ராமசாமிப்பிள்ளையும், அவரது மந்திரி ஜாலவர்மனாக டி.எஸ்.பாலையாவும், நந்தபாலராக எஸ்.வேலுசாமி கவியும், முகமது கோரியாக டி.கே.சம்பங்கியும் நடித்தனர். ஏ.சகுந்தலா சம்யுக்தாவாக நடித்தார்.

சுவாரஸியமான கதை, சிறப்பான நடிப்பு என அனைத்தும் இருந்தும் பிருத்விராஜன் சுமாராகவே போனது. பிரதான நட்சத்திரங்களைவிட குமுதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த டி.ஏ.மதுரம், அன்னம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சி.டி.ராஜகாந்தம், பீதாம்பரமாக நடித்த காளி என்.ரத்தினம், சாரிவாகனாக வந்த என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை அதிகம் மகிழ்வித்தன. ஏ.நடராஜன், ஜி.ராமனாதன் ஆகியோர் இசையமைத்தனர். எஸ்.வேலுசாமி பாடல்களை எழுதினார். படத்தில் மூன்று பாரதியார் பாடல்களும் பயன்படுத்தப்பட்டன. அன்று பாரதியார் பாடல்கள் ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்டிருந்ததால் படத்தில் பாரதியாரின் பெயரைப் போடாமல் தவிர்த்தனர். பாரதியார் பாடல்களை படத்தில் பி.யூ.சின்னப்பா பாடினார்.

பிருத்விராஜன் படத்தை 1962 இல் எம்ஜி ராமச்சந்திரன், பத்மினி நடிப்பில் ராணி சம்யுக்தா என்ற பெயரில் எடுத்தனர். 2022 இல் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த இந்திப் படம் சாம்ராட் பிருத்விராஜ் படத்தின் கதையும் இதுதான். கமர்ஷியலுக்காகவும் இப்போதைய அரசியல் காரணமாகவும் பல்வேறு புனைவுகளை கூடுதலாக அதில் சேர்த்து படத்தை கந்தல் செய்திருந்தனர்.

Also read...  நீதிபதி முன்னிலையில் ஆக்டிங்.. டாப் லெவல் டூ கஷ்ட காலம்.. நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு!

ஆங்கிலேயருக்கு எதிராக திரைப்படங்களை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். பாடல், வசனங்கள் வழியாக ஆங்கிலேயரை தொடர்ச்சியாக எதிர்ந்து வந்தனர். தியாகராஜ பாகவர், பி.யூ.சின்னப்பா போன்ற அந்தக்கால சூப்பர் ஸ்டார்கள் அதற்கு உறுதுணையாக இருந்தனர். தடைசெய்யப்பட்ட பாரதியார் பாடலை படத்தில் வைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர் சம்பத் குமார், பாடிய பி.யூ.சின்னப்பா முதலானோர் பாராட்டுக்குரியவர்கள்.

1942 ஏப்ரல் 29 திரைக்கு வந்த பிருத்விராஜன் இன்று தனது 81 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema