முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'பிச்சைக்காரி' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம்.. தமிழ் சினிமாவின் ’பிச்சை’ பெயர்கள்!

'பிச்சைக்காரி' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம்.. தமிழ் சினிமாவின் ’பிச்சை’ பெயர்கள்!

ஜீவித நவுகா

ஜீவித நவுகா

மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான பிச்சைக்காரி படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. அவரது திரைவாழ்க்கையிலும் சரி, இயக்குனர் சசியின் திரைவாழ்க்கையிலும் சரி அதிகம் வசூலித்தத் திரைப்படம் பிச்சைக்காரன். தமிழைவிட தெலுங்கில் பிச்சைக்காரன் அதிக வரவேற்பைப் பெற்றது. அதில் பாதியை இரண்டாவது பாகம் பெற்றாலும், அது பெரிய வெற்றிதான்.

1953 இல் எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் பணக்காரி என்ற படம் வெளிவந்து தோல்வியடைந்தது. அதற்கு இரண்டு வருடங்கள் முன்பு 1951 இல் பிச்சைக்காரி என்ற படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. பிச்சைக்காரியால் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் பணக்காரர் ஆனார்கள். பணக்காரியால் பிச்சைக்காரர்கள் ஆனார்கள் என பணக்காரி வெளிவந்த போது விமர்சனம் செய்தனர். அப்படி பிச்சைக்காரன், பிச்சைக்காரி பெயருக்கு தனபாக்யம் அதிகமிருந்திருக்கிறது.

பிச்சைக்காரி படம் ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்டது. அடிப்படையில் இதன் கதை, நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அப்போது தென்னிந்திய மொழிப்படங்கள் சென்னையை மையப்படுத்தி இயங்கி வந்ததால் மலையாளப் படமான இதனை தமிழ், தெலுங்கிலும் எடுத்தனர். பலவகைகளில் இப்படம் முக்கியமானது.

மலையாளத்தில் ஜீவித நவுகா - அதாவது வாழ்க்கைப் படகு என்ற பெயர் கொண்ட படத்துக்கு தமிழில் ஏன் பிச்சைக்காரி என்று பெயர் வைத்தனர் என தெரியவில்லை. இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் திக்குறிச்சி சுகுமாரன் நாயர் நடித்தார். இவர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உள்பட்ட திக்குறிச்சி என்ற சிற்றூரில் பிறந்தவர். தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு அருகிலுள் ஊர். மார்த்தாண்டம் அரசு பள்ளியில் பயின்ற இவர் கவிஞர், நாடகாசிரியர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமைகள் கொண்ட ஆளுமை. மலையாளத்தின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர்.

ஜீவித நவுகாவில் பிரதான வேடத்தில் தோன்றிய நடிகை பி.எஸ்.சரோஜா. திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் சின்ன வயதிலேயே சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். பிறகு தமிழ்ப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார். எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் இவர் நடித்துள்ளார். ஜீவித நவுகா அவரது முதல் மலையாளப் படம். இவரது தந்தை மலையாளத்தின் முதல் திரைப்படமான விகிதகுமாரனில் நடித்துள்ளார். இந்த விகிதகுமாரனை இயக்கிய ஜே.சி.டேனியலும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர், அதாவது இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்.

ஜீவித நவுகாவின் பிரதான தயாரிப்பாளர் போபன் குஞ்சாக்கோ. இவரது உதயா ஸ்டுடியோதான் படத்தை தயாரித்தது. 1947 இல் போபன் சாக்கோ உதயா ஸ்டுடியோவை தொடங்கினார். இவர் படங்கள் இயக்கவும் செய்துள்ளார். மலையாளத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான குஞ்சாகோ போபனின் தாத்தா இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... பழிக்குப் பழியா? கட்டபொம்மனாக நடிக்க மறுத்த சிவாஜி!? காரணம் இதுவா?

ஜீவித நவுகா 1951 மார்ச் 15 ஆம் தேதியும், அதன் தமிழ் பதிப்பான பிச்சைக்காரி மே 18 ஆம் தேதியும் வெளியானது. படம் தமிழில் வெற்றி பெற்றது. அதேநேரம் மலையாளப் பதிப்பு வரலாறு காணாத வரவேற்பைப் பெற்று 284 நாள்கள் ஓடியது. அதுவரை எந்த மலையாளப் படமும் இப்படியொரு வரவேற்பைப் பெற்றதில்லை. அதனால், மலையாளத்தின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படம் என்ற பெருமை அதற்குக் கிடைத்தது.

மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். 1936 இல் இந்தியில் வெளியான ஜீவன் நைய்யா படத்தின் ரீமேக்தான் ஜீவித நவுகா - அதாவது பிச்சைக்காரி படம் என்பது முக்கியமானது. 1951 மே 18 வெளியான பிச்சைக்காரி இன்று 72 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema