முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எம்ஜிஆர் முதன்முறை நடித்த சமூகப் படம் எது தெரியுமா?

எம்ஜிஆர் முதன்முறை நடித்த சமூகப் படம் எது தெரியுமா?

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

1936 இல் சினிமாவில் அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து 25 வருடங்கள் சரித்திரக் கதைகளில் நடித்து வந்தார். அந்தவகை படங்களில் மட்டுமே வாள் சண்டையிட முடியும். ரசிகர்களுக்குப் பிடித்த வாள் சண்டையில்லாமல் ஒரு படத்தை கற்பனை செய்யவே அவரால் முடிந்ததில்லை. சரித்திரக் கதைக்கேற்ற நீண்ட பாகவதர் கிராஃபுடன்தான் அதுவரை எம்ஜிஆர் தோற்றமளித்தார். அந்த சிகையலங்காரத்தை மாற்றவும் அவருக்கு தயக்கம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரெஞ்ச் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவர் ராபர்ட் ப்ரெஸ்ஸான். ரஷ்ய நாவல் என்றால் அது தாஸ்தாவேஸ்கியோ, ஜெர்மன் இசை என்றால் அது மொஸார்ட்டோ அப்படி பிரெஞ்ச் சினிமா என்றால் ராபர்ட் ப்ரெஸ்ஸான் என்றார் பிரெஞ்ச் புதிய அலை இயக்குனர்களில் ஒருவரான கோதார்த். அந்த ப்ரெஸ்ஸானின் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று பிக்பாக்கெட்.

சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட ஒரு எளிய இளைஞன் பிக்பாக்கெட்டாக மாறுவதும், அவனுக்கு ஒரு காதல் கிடைப்பதும், சிறையில் அந்தக் காதலை அவன் உணர்ந்து கொள்வதும் என ஒருகாலகட்ட பாரிஸை பிரதிபலிக்கும் மிகச்சிறந்த படைப்பாக பிக்பாக்கெட் அமைந்தது. ஆச்சரியமாக, பிக்பாக்கெட் வெளியாவதற்கு 3வருடங்கள் முன்பு 1956 இல் அதே பெயரில் இந்தியில் (பாக்கெட் மார்) ஒரு படம் வெளியானது. தேவ் ஆனந்த் இதில் பிக்பாக்கெட்டாக நடித்திருந்தார்.

ப்ரெஸ்ஸானின் பிக்பாக்கெட் கிளாஸிக் என்றால், தேவ் ஆனந்த் நடித்த பாக்கெட் மார் ஒரு கமர்ஷியல் ஹிட். பிக்பாக்கெட்டாக இருக்கும் ஒருவன் தாயின் தியாகத்தாலும், தன்னால் பாதிக்கப்பட்டவரின் கஷ்டத்தை உணர்ந்தும் நல்லவனாக திருந்துவது கதை. இந்தப் படத்தை 1961 இல் தமிழில் எம்ஜிஆர் நடிப்பில் திருடாதே என்று எடுத்தனர்.

1936 இல் சினிமாவில் அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து 25 வருடங்கள் சரித்திரக் கதைகளில் நடித்து வந்தார். அந்தவகை படங்களில் மட்டுமே வாள் சண்டையிட முடியும். ரசிகர்களுக்குப் பிடித்த வாள் சண்டையில்லாமல் ஒரு படத்தை கற்பனை செய்யவே அவரால் முடிந்ததில்லை. சரித்திரக் கதைக்கேற்ற நீண்ட பாகவதர் கிராஃபுடன்தான் அதுவரை எம்ஜிஆர் தோற்றமளித்தார். அந்த சிகையலங்காரத்தை மாற்றவும் அவருக்கு தயக்கம்.

இந்த இரண்டையும் மாற்றி, சமூகப் படங்களில் அவரை நடிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை. எம்ஜிஆர் நவீன ஹேர் ஸ்டைலில் கோட், சூட்டில் இருப்பது போல் ஓவியம் வரைந்து எம்ஜிஆரை முதலில் திருப்திப்படுத்தினார். பிறகு இந்தி பாக்கெட் மார் படத்தைப் பார்க்க வைத்து, அதன் ரீமேக்கில் நடிக்க சம்மதம் பெற்றார். அந்தப்படத்திற்காக சின்ன அண்ணாமலை காட்டிய பல புதுமுகங்களிலிருந்து எம்ஜிஆர் தேர்வு செய்தவர்தான் சரோஜாதேவி.

பாக்கெட் மார் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு திருடாதே, நல்லதுக்கு காலமில்லை என இரு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. பின்னதை தனது சொந்தக் கருத்தாக மக்கள் எடுத்துக் கொள்வார்களோ என்று ஐயப்பட்ட எம்ஜிஆர் திருடாதே பெயரை தேர்வு செய்தார். பாதி படம் முடிந்த நிலையில், நாடகத்தில் சண்டைக் காட்சியில் நடித்து எம்ஜிஆர் காலை முறித்துக் கொள்ள திருடாதே உள்பட அவர் நடித்து வந்த அனைத்து படப்பிடிப்புகளும் தடைபட்டது. இந்த நேரத்தில் சின்ன அண்ணாமலை படத்தின் உரிமையை கண்ணதாசனின் அண்ணனுக்கு விற்றார்.

எம்ஜிஆர் தேறி வந்ததும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. எம்ஜிஆர் நடித்த முதல் சமூகப் படமான திருடாதே வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவுடன் 100 நாள்கள் ஓடியது. எம்.சுப்பையா நாயுடுவின் இசைக்கு கண்ணதாசன் உள்பட பலர் பாடல்கள் எழுதினர். அவற்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திருடாதே பாப்பா திருடாதே பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்து, இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது. வாள் சண்டையில்லையென்றால் ரசிகர்கள் புறக்கணித்து விடுவார்களோ என்று பயந்த எம்ஜிஆரை, அப்படியெல்லாம் இல்லை, சமூகப் படங்களில் நடித்தாலும் பார்ப்பார்கள், அதிலும் சண்டைக் காட்சிகளில் அசத்த முடியும் என்பதை உணர்த்தியது திருடாதே திரைப்படம். ப.நீலகண்டனின் இயக்கத்திற்கும் அதில் நிறைய பங்குண்டு.

1961 மார்ச் 23 ஆம் தேதி வெளியான திருடாதே தற்போது 62 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema, MGR