முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 48 வருடங்களுக்கு முன் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்த எம்ஜிஆர்!

48 வருடங்களுக்கு முன் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்த எம்ஜிஆர்!

நினைத்ததை முடிப்பவன்

நினைத்ததை முடிப்பவன்

நினைத்ததை முடிப்பவன் என இந்தப் படத்துக்கு பொருத்தமாக பெயர் வைத்தனர். எம்ஜி ராமச்சந்திரனே நல்லவன், வில்லன் என இரு வேடங்கள் ஏற்றுக் கொண்டதால் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைத்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அறுபதுகளின் இறுதியில் இந்திப் படவுலகின் முன்னணி நடிகராக உயர்ந்து வந்தார் ராஜேஷ் கன்னா. அவர் நடித்தப் படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி, வெற்றி பெற்றன. இரண்டு படங்கள் சேர்ந்தார்போல் வெற்றி பெற்றாலே இப்போதுள்ள நடிகர்களை கையில் பிடிக்க முடியாது. ராஜேஷ் கன்னா தொடர்ச்சியாக 17 வெற்றிப் படங்கள் கொடுத்தார். அதுவும் 1969 - 1971 என மூன்றே வருடங்களில் இந்த சாதனையை அவர் செய்தார்.

ராஜேஷ் கன்னா நடிப்பதெல்லாம் வெற்றியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சச்சா ஜுத்தா வெளியானது. மன்மோகன் தேசாய் படத்தை இயக்கியிருந்தார். ராஜேஷ் கன்னா நல்லவன், கெட்டவன் என இரு வேடங்களில் நடித்தார். அதாவது ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே. வைரக்கடத்தல்தான் கதையின் மையம். அதில் ஆள் மாறாட்டம் என்ற எவர்கிரீன் சுவாரஸியத்தைச் சேர்த்து சச்சா ஜுத்தாவை தந்திருந்தார்.

1970 மே 1 தொழிலாளர் தினத்தில் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த இரண்டாவது படம் என்ற சாதனையையும் படைத்தது. இதன் கதையை எழுதியவர் இயக்குனர் மன்மோகன் தேசாயின் மனைவி ஜீவன் பிரபா. இந்தப் படத்தை 1975 இல் தமிழில் எம்ஜி ராமச்சந்திரனை வைத்து ரீமேக் செய்தனர். 1973 இல் அவர் இரண்டு வேடங்களில் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகி இன்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையை படைத்த நிலையில், மீண்டுமொரு இரட்டை வேடப்படம் என்றால் ரசிகர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என கூற வேண்டியதில்லை.

சச்சா ஜுத்தா படத்தின் தமிழ் ரீமேக்கின் வசனத்தை உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசனத்தை எழுதிய ஆர்.கே.சண்முகம் எழுதினார். நாயகன், வில்லன் இரு வேடங்களிலும் எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பது என முடிவானது. கிராமத்து பேண்ட் மாஸ்டரும், அப்பாவியுமான சுந்தரம் நாயகன். வைரங்களை கொள்ளையடிக்கும் ரஞ்சித் வில்லன். கால் ஊனமான தங்கை சீதாவின் திருமணத்துக்கு பணம் சேர்க்க சுந்தரம் சென்னை வருகையில், தோற்றத்தில் தன்னைப்போல இருக்கும் ரஞ்சித்தை சந்திப்பான். சுந்தரத்தை ரஞ்சித்தாக்கி திரைமறைவில் வைரக்கடத்தலை தொடர்ந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என ரஞ்சித் திட்டம் போடுவான். பொய் சொல்லி சுந்தரத்தையும் அதற்கு சம்மதிக்க வைப்பான். ரஞ்சித்தின் காதலி மோகனா சுந்தரத்துக்கு ரஞ்சித்தைப் போல் நடிக்கக் கற்றுத் தருவாள்.

இந்த சந்திப்பிற்கு முன்பே போலீஸ் அதிகாரி மோகனுக்கு ரஞ்சித் மீது சந்தேகம் ஏற்பட்டு, போலீஸ் அதிகாரி லீலாவை உளவுப் பார்க்க நியமித்திருப்பார். லீலா ரஞ்சித்தின் வேஷத்தில் இருக்கும் சுந்தரத்துடன் நெருங்கிப் பழக, சுந்தரம் அவளை காதலிக்க ஆரம்பிப்பான். இந்த நேரத்தில் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தில் அனைத்தையும் இழந்து, சென்னையில் அண்ணனை தேடி வருவாள் சீதா. மோகனிடம் அடைக்கலமாகும் அவளை ரஞ்சித் சுந்தரமாக நடித்து தன்னுடன் அழைத்து வருவான். ரஞ்சித்தின் கள்ளக் கடத்தல் குறித்து சுந்தரத்துக்கு தெரியவர, ரஞ்சித்தாக நடிக்க மறுப்பான். தனது கஸ்டடியில் இருக்கும் சுந்தரத்தின் தங்கை சீதாவை வைத்து மிரட்டி ரஞ்சித் சுந்தரத்தை தனது திட்டத்துக்கு இணங்க வைப்பான். கடைசியில் என்னானது என்பதை கோர்ட்டில் நடக்கும் எதிர்பாராத திருப்பத்தின் வழியாக முடித்திருப்பார் இயக்குனர் ப.நீலகண்டன்.

Also read... எம்ஜிஆர் சாதனையை முறியடித்த சிவாஜி.. 6 வருட சிம்மாசனத்தை தனதாக்கிய திரிசூலம்!

நினைத்ததை முடிப்பவன் என இந்தப் படத்துக்கு பொருத்தமாக பெயர் வைத்தனர். எம்ஜி ராமச்சந்திரனே நல்லவன், வில்லன் என இரு வேடங்கள் ஏற்றுக் கொண்டதால் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைத்தது. மோகனாவாக லதாவும், லீலாவாக மஞ்சுளாவும் தங்கள் பங்குக்கு கவர்ச்சியை அள்ளி விசினர். ஊனமுற்ற தங்கையாக சாரதா நடித்தார். வழக்கமாக வில்லனாக வந்து உள்ளங்கையை தேய்க்கும் நம்பியார் இதில் போலீஸ் அதிகாரி மோகனாக நல்லவராக நடித்திருந்தார். எம்எஸ்வியின் இசையில் புலமைப்பித்தன் எழுதிய பூமழை தூவி பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. அவினாசி மணி எழுதிய நீ தொட்டுப் பேசினால் பாடல் படத்தில் இடம்பெறவில்லை.

1975 மே 9 திரைக்கு வந்த நினைத்ததை முடிப்பவன் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டானது. எனினும் உலகம் சுற்றும் வாலிபனின் மெகா ஹிட்டை தொடவில்லை.  நினைத்ததை முடிப்பவன் வெளியாகி இன்றுடன் 48 வருடங்கள் நிறைவு பெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema, MGR