1936 இல் வெளியான சதிலீலாவதி படத்தில் எம்ஜிஆர், டி.எஸ்.பாலையா உள்பட பலர் அறிமுகமானார்கள். திரைப்படம் பேசத் தொடங்கி அப்போது சில வருடங்களே ஆகியிருந்தது. திரைப்படங்களில் அன்று நடித்தவர்கள் அனைவரும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள்.
சதிலீலாவதியில் அறிமுகமான இவர்கள் மெட்ராஸ் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பதி பக்தி நாடகத்தை சினிமாவாக்கும் நோக்கத்தில், திரைக்கதை அமைக்கும் பொறுப்பை மெட்ராஸ் கந்தசாமி முதலியாரிடம் ஒப்படைத்தனர். அவரும் எழுதித் தந்தார். இதே நாடகத்தை படமாக்கும் விருப்பத்துடன் இருந்தவர் ஏ.என்..மருதாச்சலம் செட்டியார். பதி பக்தி உரிமை கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்த அவருக்கு கந்தசாமி செட்டியார் ஒரு வழியை காட்டினார். பதி பக்தியைப் போன்ற கதையைக் கொண்ட எஸ்எஸ் வாசனின் சதிலீலாவதி நாவலை படமாக்கலாம் என அவர் செட்டியாருக்கு ஐடியா தந்தார். வாசனுக்கு கதைக்காக 200 ரூபாய் தந்து, சதிலீலாவதி கதையை எல்லீஸ் ஆர்.டங்கள் இயக்கத்தில் படமாக்கினார் மருதாச்சலம் செட்டியார்.
பதி பக்தி நாடகத்தை சினிமாவுக்கேற்ப எழுதித் தந்த கந்தசாமி முதலியாருக்கு, தனது மகன் எம்.கே.ராதாவை (எம்.ஆர்.ராதா அல்ல, இவர் வேறு) அதில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், அது நடக்கவில்லை. அதனால், அவரது பரிந்துரையில மருதாச்சலம் செட்டியார் எடுத்து வந்த சதிலீலாவதியில் ஹீரோவாக்க முயன்றார். செட்டியாரும் ஒத்துக் கொண்டு எம்.கே.ராதாவை ஹீரோவாக்கினார். மெட்ராஸ் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்து வந்த பலர் சதிலீலாவதியில் அறிமுகமானார்கள்.
படத்தில் நடித்த பெரும்பாலானவர்களுக்கு முதல் சினிமா அனுபவம் என்பதால் எப்படி நடிப்பது என்பதில் குழம்பிப் போயினர். அந்தக் காலத்தில் முறையான மைக்கோ, ஒலிபெருக்கியோ இல்லை. மேடையில் நடிப்பவர்கள் சொல்வது கடைசி வரிசையில் இருப்பவர்வரை கேட்க வேண்டும். அதனால், அடுத்தவரிடம் கூறும் ரகசியத்தைக்கூட, மிகையான முகபாவத்துடன் கத்தியே பேச வேண்டும். எம்ஜிஆர் உள்பட பலரும் நாடகத்தில் நடிப்பது போன்றே கத்தி பேசியுள்ளனர். சினிமாவுக்கு அப்படி பேசி நடிக்கத் தேவையில்லை, இயல்பாக நடித்தால் போதும் என்று அவர்களுக்கு பேசி புரிய வைக்கவே இயக்குனருக்கு நாக்கு தள்ளிப் போயிருக்கிறது. ஒரு சிலர், கேமராவுக்கு முன்னே நின்றதும், நடிப்பு மறந்து போய் அப்படியே அசையாமல் நின்றுள்ளனர். இந்த சிரமங்களையெல்லாம் கடந்தே படத்தை டங்கள் இயக்கியுள்ளார்.
எம்ஜிஆர் சைக்கிள் ஓட்டுவது போல் படத்தில் ஒரு காட்சி. ஷாட் வைத்த பிறகுதான் எம்ஜிஆருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பது தெரிந்திருக்கிறது. பிறகு அவரை சைக்கிளில் உட்கார வைத்து, இரண்டு பேர் சைக்கிளைப் பிடித்து பேலன்ஸ் செய்ய, இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும், சைக்கிளை எம்ஜிஆருடன் சேர்த்து வேகமாக தள்ளி ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார்கள்.
சதிலீலாவதியில் என்.எஸ்.கிருஷ்ணன் பாலு என்ற நகைச்சுவை வேடத்திலும், பாலையா ராமநாதன் என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தனர். இவர்கள் பதி பக்தி நாடகத்தில் நடித்து வந்தவர்கள். அதில் வில்லனின் அடியாளாக வீரமுத்து என்ற கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்து வந்தார். பதி பக்தி சினிமாவான போது, அந்த வேடம் தனக்குக் கிடைக்கும் என நினைத்தார். ஆனால், தயாரிப்புத் தரப்பு அவருக்கு எந்த வேடத்தையும் தரவில்லை. அதன் காரணமாக அவர் சதிலீலாவதி படக்குழுவை அணுக, போலீஸ்காரர் வேடம் அவருக்கு கிடைத்தது.
சதிலீலாவதி தயாராகிக் கொண்டிருக்கும் போதே பதி பக்தி தயாரிப்பாளர் கதையை காப்பி அடித்துவிட்டார்கள் என வழக்குத் தொடுத்தார். இதனால், படம் தயாராகியும் பல மாதங்கள் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுக்காக பதியப்பட்ட முதல் வழக்கு இதுதான். இறுதியில், ஆங்கில நாவலை தழுவி சதிலீலாவதி கதை எழுதியதை எஸ்எஸ் வாசன் கோர்ட்டில் ஒப்புக் கொண்டார். அந்த நாவலைத் தழுவியே பதி பக்தி நாடகமும் எழுதப்பட்டிருந்தது. இரண்டுப் படங்களுமே ஒரே நாவலின் காப்பி என்ற காரணத்தால் வழக்கு கைவிடப்பட்டு, சதிலீலாவதி 1936 வெளியானது.
இப்படி பல சுவாரஸியங்களை கொண்ட சதிலீலாவதி 1936 மார்ச் 28 திரைக்கு வந்தது. தற்போது இப்படம் தனது 87 வது வருடத்தை நிறைவு செய்கிறது. அதாவது பாலையா, எம்ஜி ராமச்சந்திரன் ஆகியோர் திரைக்கு அறிமுகமாகி இன்றுடன் 87 வருடங்கள் நிறைவு பெறுகிறது. என்.எஸ்.கிருஷ்ணன் சதிலீலாவதிக்கு ஒரு வருடம் முன்பு மேனகா என்ற படத்தில் நடித்திருந்தார். சதிலீலாவதி அவருக்கு இரண்டாவது படம் என்பது முக்கியமானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, MGR