சம்பூர்ண ராமாயணம், நவராத்திரி, திருவிளையாடல், திருவருட் செல்வர், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை என்று இந்திய புராண, இதிகாசங்களில் பாதியை திரைப்படமாக்கியவர் ஏ.பி.நாகராஜன். பக்தி, கலாச்சாரம், பண்பாடு என ஊறிப்போன பெரியவர். அவர் குடும்பப் படம் எடுத்தாலும் பக்தியும், பண்பாடும் படம் எடுத்து ஆடும். அவர் இந்திய கலாச்சாரத்தை மேன்மைப்படுத்தி ஒரு படத்தை 1975 இல் எடுத்தார். படம் பார்க்க வந்தவர்களை கலாச்சார சாட்டையால் சொடுக்கி உட்கார வைத்தார் என்றே சொல்லலாம். படத்தின் பெயர் மேல்நாட்டு மருமகள்.
பூர்ணம் விஸ்வநாதன் - காந்திமதி தம்பதியின் மூத்த மகன் சிவகுமார், இளைய மகன் கமலஹாசன் (அப்போது அவர் பெயரில் 'ல்' கிடையாது 'ல' தான்). வெளிநாட்டில் படிக்கச் சென்ற சிவகுமாருக்கு, தனது நண்பரின் மகள் ஜெயசுதாவை திருமணம் செய்ய பூர்ணம் விஸ்நாதன் முடிவு செய்திருப்பார். சிவகுமாருக்காக ஜெயசுதாவும் காத்திருப்பார். வெளிநாட்டிலிருந்து வரும் சிவகுமார் கையோடு ஒரு பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவார். தனது வெளிநாட்டு மனைவியுடன் நடுக்கூடத்தில் நின்று, அப்பா, உங்க மருமகளை வான்னு கூப்பிடுங்கப்பா என்பார். அவர் கடுப்பில் போ என்று சொல்ல, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி தனிக்குடித்தனம் நடத்துவார்கள்.
அண்ணன் எப்போ திருமணம் செய்வான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருக்கும் கமலஹாசன் ஜெயசுதாவுக்கு ரூட் போட்டு, யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இவர்கள் இருவருமே மாடர்ன் டைப். அதனால் இயக்குனர் படத்தில் ஜெயசுதாவுக்கு பாதி தொடை தெரியும் உடையே அதிகம் தந்திருந்தார். ஐரணியாக வெளிநாட்டு மருமகள் இந்திய கலாச்சாரம், பண்பாடு என்று உருகுவதோடு, பிரேமில் வருகிறவர்களிடம் எல்லாம் அது குறித்து பாடம் நடத்துவார். பட்டுச்சேலை, தலைநிறைய மல்லிகைப் பூ என்று ஒரே அமர்க்களம்தான். வெளிநாட்டு மருமகள் வீணை வாசிக்க, உள்நாட்டு மருமகள் கிதார் இசைக்க ஒரு பாடலும் உண்டு.
கலாச்சாரம், பண்பாடை காப்பாற்றும் வெளிநாட்டு மருமகள் மாமனார், மாமியாரின் மனம் கவர்ந்து வீட்டிற்குள் நுழைய, உள்நாட்டு கலாச்சார விரோதிகள் கமலும், ஜெயசுதாவும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். அடக்கமா இருந்தாதான் மதிப்பு என்று வெளிநாட்டு மருமகளும் மற்றவர்களும் உபதேசிக்க, இறுதியில் தொடை தெரியும் உடையை கடாச்சிவிட்டு ஜெயசுதாவும் பட்டுச்சேலை கட்டுவதோடு சுபம்.
Also read... வாலி அஜித் முதல் விஜய் சேதுபதி வரை.. அச்சு அசலாக குரல் மாற்றி பேசிய ஜெய்பீம் பட நடிகர்!
நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி, காதலைப் பற்றிய படத்திலும், பக்தி, பண்பாடு, கடவுள், புராணம் என கலக்குகிறவர் ஏ.பி.நாகராஜன். இது கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிற படம். காது வலிக்க, கதாகாலேட்சபமே செய்திருந்தார். அவருக்குப் போட்டியாக குன்னக்குடி வைத்தியநாதன் இசையும், பாடல்களும் போட்டு அவர் பங்குக்கு இம்சித்திருப்பார். ஜெயசுதாவின் சகோதரராக வரும் ஜுனியர் பாலையா நடிப்பைவிட அப்பாவை இமிடேட் செய்வதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருந்தார். ஒரேயொரு காட்சியில் சோவும், மனோரமாவும் நடித்திருந்தனர்.
மாடர்ன் இளைஞனாக கமல் சிறப்பு.. சிவகுமார் வழக்கம் போல. ஜெயசுதாவின் கவர்ச்சியே அவரை காப்பாற்றியது. படத்தில் கலர்ஃபுல் அம்சம் என்றால் அவரது கவர்ச்சி மட்டுமே. கமலின் முன்னாள் மனைவி வாணி கணபதி ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். படம் இங்கு சுமாராகப் போனாலும், தெலுங்கில் அமெரிக்க அம்மாயி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
1975 மே 10 ஆம் தேதி வெளியான வெளிநாட்டு மருமகள் தற்போது 48 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema