முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினியை இயக்க காரணமான படம்... இயக்குநர் மனோபாலா காமெடி நடிகராக மாறியதன் பின்னணி - சுவாரசியத் தகவல்கள்..!

ரஜினியை இயக்க காரணமான படம்... இயக்குநர் மனோபாலா காமெடி நடிகராக மாறியதன் பின்னணி - சுவாரசியத் தகவல்கள்..!

மனோபாலா

மனோபாலா

Actor Manobala Death | இயக்குநராக, நடிகராக மட்டுமல்லாமல் மனிதராகவும் ஜெயித்தவர் மனோபாலா.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல்ஹாசன், சந்தானபாரதி, பி.சி.ஸ்ரீராம், சுஹாசினி போல  ஆழ்வார்பேட்டை சினிமாவைச் சேர்ந்தவர் மனோபாலா. இவரது இயற்பெயர் பாலசந்தர். சினிமாவில் நுழைவதற்கு முன்னால் வெள்ளோட்டமாக பத்திரிகைகளில் மனோபாலா என்ற பெண் பெயரில் எழுதி வந்தார். சினிமாவுக்கு வந்தபோது ஏற்கனவே கே.பாலசந்தர், எஸ்.பாலசந்தர் (வீணை பாலசந்தர்) என இரு ஜாம்பவான்கள் இருந்ததால், எதற்கு போட்டி என்று தனது பத்திரிகை புனைப்பெயரான மனோபாலாவையே சொந்தப் பெயராக்கிக் கொண்டார்.

சூரியகாந்தி படப்பிடிப்பை காணச் சென்ற போது தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளராக வேலை பார்த்து வந்த கமலுடன் மனோபாலாவுக்கு அறிமுகம்  ஏற்படுகிறது. சந்தித்த முதல்நாளே, ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு வாங்க என்று கமல் அழைக்க, ஆழ்வார்பேட்டை சினிமாக்காரர்களுடன் ஐக்கியமானார்.

சிகப்பு ரோஜாக்கள் படப்பிடிப்பின்போது கமல்தான் பாரதிராஜாவிடம் மனோபாலாவை உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். படிக்கிற காலத்திலேயே மனோபாலாவுக்கு சினிமா மோகம் பிடித்துவிட்டது. சினிமாவில் என்னவாக வேண்டும் என்றுதான் தெரியவில்லை. கடைசியில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஐந்து வருடங்களை ஓட்டிவிட்டு, கலை இயக்குநராகலாம் என்று திட்டம். ஓவியம் வரைஞ்சா வயித்துக்கு பட்டினிதான் என்று அறிவுறுத்தியவர் முன்னாள் ஓவியக் கல்லூரி மாணவரும் அப்போதைய முன்னணி நடிகருமான சிவகுமார். அதன் பிறகுதான் கமலுடன் சந்திப்பு, பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர் என பாதை மாறியது.

அசிஸ்டென்டாக பணிபுரிந்த முதல் படம் புதிய வார்ப்புகளில் ஒரு சின்ன வேடத்தில் மனோபாலா தலைகாட்டினார். பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்தார். 1982 இல் மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கிய போது அதிலும் நடித்தார். அதே வருடம் மணிவண்ணன் எழுதிய கதையை ஆகாய கங்கை என்ற பெயரில் இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். மோகனை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கினார். அதில் ஒன்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஹாரர் படம் பிள்ளை நிலா.

இதையும் படிக்க | எனக்காக கோடம்பாக்கம் பாலத்தில் மனோபாலா காத்திருப்பார்... இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோ...!

ராதிகாவும், சுஹாசினியும் மனோபாலாவின் நெருக்கமான தோழிகள். அவர்கள் இருவரையும் வைத்து அதிக படங்கள் இயக்கினார். அதேபோல் விஜயகாந்தை வைத்து சிறைப் பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என மூன்று படங்கள். இதில் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் நல்ல வெற்றி. அதனை இந்தியிலும் ரீமேக் செய்தார். இதன் மூலம் ரஜினியை இயக்கும் வாய்ப்பு வந்தது.  சுமாராகப் போனாலும் இயக்குநர் மனோபாலாவை பலருக்கும் அறிமுகப்படுத்தியது ரஜினி, ராதிகா நடித்த ஊர்க்காவலன் திரைப்படம். சிவாஜியை வைத்து பாரம்பரியம் என்ற படத்தையும் இயக்கினார்.

நடிகராக அவரை பிரபலப்படுத்தியது, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று விவேக்கை அலறவிட்ட வசனம்.  வடிவேலு காமெடி இன்னொரு மாஸ்டர் ஸ்ட்ரோக். பில்லு பயங்கர கருப்பா இருப்பான், நீ கருப்பா பயங்கரமா இருக்கே என்று மனோபாலா சொல்கையில் சிரிக்காமல் யாரும் இருக்க முடியாது. ஒல்லியாக இருக்கும் அவருக்கு போலீஸ் ட்ரெஸ் மாட்டி விட்டாலே பார்வையாளர்கள் சிரித்துவிடுவார்கள் என்பதால் நிறைய படங்களில் அவரை போலீசாகவே காட்டினார்கள். கலகலப்பு 2 படத்தில் சந்தானத்துக்கும் அவருக்குமான சேஸிங் இன்னொரு அல்டிமேட் காமெடி.

top videos

    என்னதான் தகுதி, திறமை இருந்தாலும் ஒரு மனிதன் சக நபர்களால் அறியப்படுவது அவரது குணத்தால் மட்டுமே. மனோபாலா என்றால் மகிழ்ச்சி, உற்சாகம், பாராட்டு என இருக்குமே தவிர பொய், பொறாமை, குரோதம் அண்டியதேயில்லை. அனைவரிடத்திலும் எளிமையாக மரியாதையாக, உற்சாகமூட்டக்கூடியவராக பழகியவர் மனோபாலா. இயக்குனராக, நடிகராக மட்டுமின்றி மனிதராகவும் ஜெயித்தவர். அவருக்கு நம் ஆழ்ந்த அஞ்சலிகள்.

    First published:

    Tags: Actor