முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாரதிராஜா படத்தின் க்ளைமேக்ஸையே மாற்ற வைத்தவர்... மனோபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்..!

பாரதிராஜா படத்தின் க்ளைமேக்ஸையே மாற்ற வைத்தவர்... மனோபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்..!

மனோபாலா

மனோபாலா

Actor manobala death | முதல் பட தோல்விக்கு பிறகு இயக்குநராகவும் நடிகராகவும் மனோபாலா வென்ற கதை

  • Last Updated :
  • Tamil Nadu, India

தஞ்சை மாவட்டம் மருங்கூர் என்ற ஊரில் பிறந்தவர் மனோபாலா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பாலசந்தர். ஓவியம் சார்ந்த படிப்பை படித்த மனோபாலா மிகச் சிறந்த ஓவியரும் கூட. சினிமா மீதான தனது காதலால் சென்னை வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் மூலம் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிக்கு சேர்ந்தார். பாரதிராஜாவின் வெற்றிப்படமான புதிய வார்ப்புகளில் உதவி இயக்குநராக தடம் பதித்த மனோபாலா, பாலசந்தர் என்ற தனது பெயரையும் மாற்றிக்கொண்டார்.

நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக் போன்ற பாரதிராஜாவின் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளம் காதலர்கள் இறந்து போவதாக முதலில் வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை, இருவரும் மதத்தை துறப்பது போல அமைக்க மனோபாலா உள்ளிட்ட உதவி இயக்குநர்களே காரணம் என கூறப்படுவதும் உண்டு.

கார்த்திக் மற்றும் சுஹாசினியின் நடிப்பில் 1982- ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் மனோபாலா. முதல் படம் சற்று சறுக்கிய நிலையில், மோகன்- ராதிகா நடிப்பில் மனோபாலா இயக்கிய பிள்ளை நிலா அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் விஜயகாந்தை கதாநாயகனாக கொண்ட சிறைப்பறவை படத்தை இயக்கினார். மீண்டும் விஜயகாந்த் நடிப்பில் சுஹாசினி, ரேகா என இரு கதாநாயகிகளுடன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்ற படத்தை இயக்கினார். இப்படம் பின்னர் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

இதையும் படிக்க  |  Video: மனோபாலா மறைவு... நடிகர் விஜய் நேரில் அஞ்சலி... மகன் கையைப் பிடித்து ஆறுதல்..!

ரஜினிகாந்த் நாயகனாக நடித்த ஊர்க்காவலன், சத்யராஜ் நடிப்பில் மல்லு வேட்டி மைனர் என முன்னணி கதாநாயகர்களை வைத்து மனோபாலா இயக்கிய பல படங்கள் பெரும் வெற்றிபெற்றன. பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் சிறு வேடத்தில் திரையிலும் தோன்றிய மனோபாலா, முழு நேர நடிகனானது கே.எஸ். ரவிக்குமாரின் நட்புக்காக திரைப்படத்தில் தான். அப்படத்தில் மன்சூர் அலிகானின் கணக்கு பிள்ளையாக மதுரை என்ற கதாபாத்திரத்தில் மனோபாலா கலக்கியிருப்பார்.

தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக கோலிவுட்டில் வலம் வந்தார். மனோபாலாவின் முத்திரை பதித்த பரிமாணம் என்றால், அவரின் காமெடி கதாபாத்திரங்கள் தான். விவேக், வடிவேலு, சந்தானம், மயில்சாமி என டாப் காமெடி ஸ்டார்களுடன் அவர் அடித்த காமெடி லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அதேபோல், சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் மனோபாலா. மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்... என்று செய்திகளில் கடந்துபோன மோசடி சம்பவங்களை கதை களமாக கொண்ட இப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது

பின்னர் பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை -2 படங்களையும் மனோபாலா தயாரித்தார். சில பிரச்னைகள் காரணமாக சதுரங்க வேட்டை -2 படம் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. கமல் ஹாசனின் இந்தியன்- 2, விஜயின் லியோ உள்ளிட்ட வெளிவராத படங்களிலும் மனோபாலா நடித்து வந்தார்.

top videos

    நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என நின்றுவிடாமல் ஸ்க்ரிப்ட் எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பல அரிய சினிமா தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் . வேஸ்ட் பேப்பர் என்ற தனது யூ டியுப் சேனல் மூலம் பல அரிய சினிமா தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். சமுக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்தவர் மனோபாலா, அவர் கடைசியாக மார்ச் 16ஆம் தேதி பதிவிட்ட படம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    First published:

    Tags: Actor