முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆங்கிலேயரை அலற வைத்த தமிழ் திரைப்படம்.. உடனடியாக தடை செய்து உத்தரவு.!

ஆங்கிலேயரை அலற வைத்த தமிழ் திரைப்படம்.. உடனடியாக தடை செய்து உத்தரவு.!

தியாக பூமி

தியாக பூமி

1940 இல் ராஜாஜியின் அதிகாரம் பறிக்கப்பட்டு, கவர்னர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். அப்போது ’தியாக பூமி’ திரைப்படம் 22 வாரங்கள் ஓடியிருந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் பல வெளியாகின. அந்தப் படைப்புகள் தடை செய்யப்படலாம், அதனை உருவாக்கியதற்காக சிறை செல்ல நேரிடும் என்பதை அறிந்தே இந்த துணிச்சலான செயலை செய்தனர். அப்படி உருவான படைப்புகளில் ஒன்று ’தியாக பூமி’

எழுத்தாளர் கல்கி எழுதிய தியாக பூமி நாவலைத் தழுவி இந்தப் படத்தை எஸ்எஸ் வாசன் தயாரித்தார். எஸ்எஸ் வாசன் ஜெமினி ஸ்டுடியோஸைத் தொடங்கி படங்கள் எடுப்பதற்கு முன்பு 1939 லேயே தியாக பூமியை தயாரித்தார். இந்தப் படத்தின் கதையையும், அதில் வரும் நாயகனின் கதாபாத்திரத்தையும் மகாத்மா காந்தி மற்றும் அவரது கொள்கையின் பாதிப்பில் கல்கி உருவாக்கியிருந்தார். கே.பாலசுப்பிரமணியம் தியாக பூமி நாவலை படமாக இயக்கினார்.

படம் தயாரிப்பில் இருக்கையில் தியாக பூமி கதையை எஸ்எஸ் வாசன் தனது ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடராக வெளியிட்டார். அதில் படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை பிரசுரித்தார். ஒரு படம் தயாரிப்பில் இருக்கையில் அதன் கதையை, படத்தில் இடம்பெறும் புகைப்படத்துடன் வெளியிட்டது, உலக அளவில் அதுவே முதல்முறை எனலாம். இது தமிழகம் மட்டுமின்றி தமிழ்நாடுக்கு வெளியே வாழ்ந்து வந்த தமிழர்களையும் - குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் வாழ்ந்து வந்த தமிழர்களையும் சென்றடைந்தது. இதனால் படம் வெளியான போது தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தியாக பூமியில் சாம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவனும், அவரது மகள் சாவித்ரியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும் நடித்தனர். சாவித்ரியை திருமணம் செய்யும் ஸ்ரீதரன் என்ற வேடத்தில் கே.ஜே.மகாதேவன் நடித்தார். படத்தில் இடம்பெற்ற 17 பாடல்களில் 12 பாடல்களை பாபநாசம் சிவனும், எஸ்.டிசுப்புலட்சுமியும், பேபி சரோஜாவும் பாடினர். படத்தில் நடிக்காத டி.கே.பட்டம்மாள் 3 பாடல்களையும், வத்சலா இரு பாடல்களையும் பாடினர்.

1937 இல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சியை தோற்கடித்து, இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. மதராஸ் பிரசிடென்சியின் முதலமைச்சராக ராஜாஜி  பதவியேற்றார். அந்த நேரத்தில் சென்சார் விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சுதந்திரத்துக்கு ஆதரவான படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில் தியாக பூமியையும் படமாக்கினர். 1939 மே 20 தியாக பூமி திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. டி.கே.பட்டம்மாள் பாடிய, பாரத புண்ணிய பூமி... ஜெய பாரத புண்ணிய பூமி... பாடலும், தேச சேவை செய்ய வாரீர் பாடலும் நேரடியாக சுதந்திரத்துக்கு மக்களை அறைகூவல் விடுத்தது.

Also read... வீட்டுக்கு வந்த தபால்காரரை பாடல் தேர்வு செய்ய வைத்த கண்ணதாசன்.. ’தங்கை’ பட சுவாரஸ்ய சம்பவம்!

1940 இல் ராஜாஜியின் அதிகாரம் பறிக்கப்பட்டு, கவர்னர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். அப்போது தியாக பூமி 22 வாரங்கள் ஓடியிருந்தது. படம் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாக ஆங்கில அரசு கருதியதால் படம் வெளியாகி 22 வாரங்கள் கடந்த பிறகு 1940 இல் படத்துக்கு தடை விதித்தனர். இந்தத் தடை அமலுக்கு வருவம்வரை சென்னை கெயிட்டி திரையரங்கில் இலவசமாக தியாக பூமியை ஜனங்கள் பார்க்கலாம் என எஸ்எஸ் வாசன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கெயிட்டி திரையரங்கை முற்றுகையிட்டனர். கடைசியில் திரையரங்குக்குள் போலீசார் தடியடி நடத்தி ஜனங்களை கலைத்ததோடு, படமும் முழுமையாக தடை செய்யப்பட்டது.

சுதந்திரத்துக்கு முன், திரைக்கு வந்தபின் ஒரு திரைப்படம் தடை செய்யப்பட்டது இந்திய அளவில் தியாக பூமி என்பது முக்கியமானது. இப்போது இந்தப் படத்தின் பிரதிகள் எதுவும் ஜெமினி ஸ்டியோஸில் இல்லை. ஒரேயொரு பிரதி மட்டும் புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் உள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த சனிக்கிழமை - மே 20 - இப்படம் 84 வது வருடத்தை நிறைவு செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema