சிலர் மறைந்தாலும் அவர்களைக் குறித்த மாயக் கதைகள் சாகாமல் சுற்றிக் கொண்டிருக்கும். வருடங்கள் ஓடினாலும் இந்தக் கதைகளும் வளர்ந்து கொண்டே செல்லும். அப்படியொரு மாயக் கதைகளின் மன்னனாக திகழ்கிறவர் நடிகர், பாடகர் சந்திரபாபு. அவரது வாழ்க்கையே மாபெரும் புனைவைப் போன்றது, கற்பனைக்கு எட்டாதது.
ஜோசப் பனிமயதாஸ் சந்திரபாபு ரோட்ரிக்ஸ் என்ற சந்திரபாபு தூத்துக்குடியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சுதந்திரப்போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர். சுதந்திரப் போராட்டம் காரணமாக அவரது குடும்பம் இலங்கைக்கு இடம்பெயர்க்கப்பட்டது. அங்குதான் சந்திரபாபு கல்வி கற்றார். 1943 இல் அவர்களது குடும்பம் சென்னையில் குடியேறியது.
பாடகன் ஆக வேண்டும் என்பதே சந்திரபாபுவின் விருப்பமாக இருந்தது. எம்.எஸ்.வி.யிடம் ஒருமுறை வாய்ப்பு கேட்டுப் போய், என்னடா இவன் பாடச் சொன்னா கூவுறான் என்று திருப்பி அனுப்பியுள்ளார். பிறகு அவர்கள் சந்தித்துக் கொண்டபோது சந்திரபாபு பெரிய நடிகனாகியிருந்தார். பழைய நிகழ்வை மனதில் வைத்து, இந்த டியூனுக்கு எப்படி ஆட முடியும் என்று அவர் எம்.எஸ்.வி.யை வெறுப்பேற்ற, எம்.எஸ்.வி. டியூனை வாசிக்கச் சொல்லி, அவரே ஆடிக்காட்ட, அதிலிருந்து இருவரும் நெருக்கமான நண்பர்களாயினர்.
1947 இல் ஒரு படத்தில் சின்ன வேடத்தில் தோன்றினார் சந்திரபாபு. அதன் பிறகு எந்த வாய்ப்பும் அமையவில்லை. ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசனைப் பார்த்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரைப் பார்க்க பலமுறை முயற்சி செய்தும் முடியாமல், காப்பர் சல்பேட்டை உடலில் செலுத்தி, தற்கொலைக்கு முயன்றார். சரியான நேரத்தில் கவனித்து, மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர். தற்கொலை குற்றம் என்பதால் போலீசார் அவரை கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினர். சந்திரபாபு தனது கதையைச் சொல்ல, எங்கே நடிச்சுக்காட்டு என்று நீதிபதி கேட்க, ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து ஒரு பகுதியை நீதிமன்றத்தில் சந்திரபாபு நடித்துக் காட்ட, மகிழ்ந்து போன நீதிபதி, நீ திறமைசாலிதான் என்று தண்டனை அளிக்காமல் அவரை விடுதலை செய்தார்.
இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ்.வாசன் தனது மூன்று பிள்ளைகள் படத்தில் நடிக்க சந்திரபாபுக்கு வாய்ப்பளித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்கள் கிடைத்து, படிப்படியாக முன்னேறினார். 1958 இல் சிவாஜியுடன் நடித்த சபாஷ் மீனா மாபெரும் வெற்றியைப் பெற்று சந்திரபாபுவை தவிர்க்க முடியாத நடிகனாக்கியது.
அந்தக் காலத்தில் படம் வெற்றி பெற வேண்டுமென்றால் சந்திரபாபு படத்தில் இருந்தால் போதும் என்ற எண்ணம் இருந்தது. பல படங்கள் எடுக்கப்பட்ட பின் வெற்றிக்காக சந்திரபாபு நடித்தக் காட்சிகள் சேர்க்கப்பட்டன. உதாரணமாக ஏவி மெய்யப்ப செட்டியார் 1959 இல் சகோதரி என்ற படத்தை கே.பாலாஜி, பிரேம் நசீர், ராஜசுலோசனா ஆகியோரை வைத்து எடுத்தார். படம் ஓடுவது சந்தேகம் என்று தோன்ற, படத்தை சந்திரபாபுக்கு போட்டு காண்பித்தார். சந்திரபாபு ஒரு தனிட்ராக்கை எழுத, அதனை அவரை வைத்தே படமாக்கி படத்தில் சேர்த்துக் கொண்டார் செட்டியார். அதில் சந்திரபாபு ஒரு பாடலும் பாடியிருந்தார். நானொரு முட்டாளுங்க என்ற அந்தப் பாடல் இன்றுவரை ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.
ஐம்பதுகளின் இறுதியில் எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோர் அதிகபட்சம் அறுபதாயிரம் சம்பளம் வாங்கிய போது, சந்திரபாபு சில படங்களுக்கு ஒரு லட்சம் சம்பளமாகப் பெற்றார். அந்தளவு அவருக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு இருந்தது. 1961 இல் அவரை நாயகனாக்கி குமாரராஜா என்ற படத்தை எடுத்தனர். அதில் அசட்டு ராஜாவாக பாலையாவும், அவரது மகனாக சந்திரபாபுவும் நடித்தனர்.
பெண்கள் சகவாசம் இல்லாமல் வளரும் சந்திரபாபு ஒருகட்டத்தில் நடனமே கதியென்று ஆகிப்போவார். ஒரு நடனக்காரி மீது அவருக்கு காதல் தோன்றும். தந்தை பாலையாவோ வேறொரு பெண்ணை அவருக்கு மணமுடிக்க நினைப்பார். இந்த குழப்பம் எப்படி சுபமாக முடிந்தது என்பது கதை. சந்திரபாபு படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருப்பார். நடனமும் உண்டு.
Also read... ஜான் - பூஜா தம்பதிக்கு ஆண் குழந்தை: அஜித் பட வில்லனை வாழ்த்தும் ரசிகர்கள்!
அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும் உள்ள ராசி சந்திரபாபுவையும் தாக்கியது. குமாரராஜா ஓடவில்லை. எனினும் அதன் பாடல்களும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. ஜி.கே.ராமு இயக்கிய இந்தப் படத்துக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்திருந்தார்.
சகலகலாவல்லவனாக திகழ்ந்த சந்திரபாபு படத்தயாரிப்பில் இறங்கி கடனாளியாகி ஏழ்மையில் இறந்துபோனது யாருக்குமே நடக்கக் கூடாதா துன்பியல் நிகழ்வு. 1961 ஏப்ரல் 21 வெளியான குமாரராஜா சமீபத்தில் 62 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema