முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இதயத்தை பிழியும் சோகம்.. ரசிகர்களை கவர்ந்து வெற்றிவாகை சூடிய 'கண்ணின் மணிகள்'.!

இதயத்தை பிழியும் சோகம்.. ரசிகர்களை கவர்ந்து வெற்றிவாகை சூடிய 'கண்ணின் மணிகள்'.!

கண்ணின் மணிகள்

கண்ணின் மணிகள்

ஒரு மரணத்திற்கும், ஒருவரது கண்பார்வை பறி போனதற்கும் காரணமான ராதா கிருஷ்ணன், கண் தெரியாத அபலைப் பெண் பத்மினியை தனது பெண் போல பாவித்து  அடைக்கலம் தருவார். அவரது குற்றவுணர்விலிருந்து தப்பிக்க பத்மினி பயன்படுவாள். அவளுக்கு அறுவை சிகிச்சை  மூலம் கண் பார்வை கிடைக்க, ராதா கிருஷ்ணன் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரையலகில் சென்னையைச் சேர்ந்த நடிகர்கள் குறைவு. திருச்சி, மதுரை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் முன்னணி நாயகர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த பிரதான நட்சத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் சினிமாவின் ஆரம்பகாலம்தொட்டே இதுதான் நிலை. விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் இருக்கலாம். அதில் ஒருவர் எம்.கே.ராதா. எம்.ஆர்.ராதா அல்ல.

முப்பதுகளின் ஆரம்பத்தில் தகுதியும், திறமையும் வாய்ந்த நாடக நடிகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். எம்.கே.ராதா அதில் ஒருவர். அவரது முழுப்பெயர் மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். பெயரிலேயே மெட்ராஸை கொண்டிருந்தவர். இதன் சுருக்கமே எம்.கே.ராதா.

ராதாவின் தகப்பானார் ஒரு நாடக ஆசிரியர். அதனால் சிறுவனாக இருக்கும் போதே நாடகப்பரிட்சயம் ஏற்பட்டது. நாடக நடிகராக மக்களிடம் பிரபலமடைந்தவேளை 1936 இல் ராதாவின் தந்தையின் முயற்சியால் சதிலீலாவதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். எம்ஜி ராமச்சந்திரன் இந்தப் படத்தில் சின்ன வேடம் ஒன்றில் நடித்தார். இருவருக்குமே அதுதான் முதல் படம். அதன் பிறகு சந்திரமோகன், மாயா மச்சிந்திரா, சதி முரளி, பிரேம பந்தன், வன மோகினி, தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி உள்பட பல படங்களில் நடித்தார். 1948 இல் வாசன் எடுத்த சந்திரலேகா திரைப்படத்தில் எம்.கே.ராதா நாயகனாக நடித்தார். அப்படம் இந்தியா முழுவதும் வெற்றிவாகைசூடி ராதாவுக்கு தனித்த புகழைப் பெற்றுத் தந்தது.

ஐம்பதுகளின் இறுதிவரை சினிமாவில் நடித்த எம்.கே.ராதா 1956 இல் கண்ணின் மணிகள் என்ற படத்தில் நடித்தார். ராதாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. இதில் ராதா கிருஷ்ணன் என்ற போலீஸ் சூப்ரென்டாக ராதா நடித்தார். அவரது மனைவி ராஜம். அவர்களின் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு சுந்தரம் என்ற மருத்துவர் வைத்தியம் பார்ப்பார். நல்லவர், கைராசிக்காரர். தனது குழந்தைக்கு மருத்துவர் பார்ப்பவர் என்பதால் ராஜம் சுந்தரிடம் மரியாதை வைத்திருப்பாள். அதனை ராதா கிருஷ்ணன் தவறாக எடுத்துக் கொள்வார். தனது மனைவிக்கும், மருத்துவர் சுந்தருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அவரது சந்தேகப்பேய் வளர வளர, வீட்டில் நிம்மதி குலையும், இறுதியில் தனது கற்பை நிரூபிக்க சீதை காட்டிய வழியில் ராஜம் தீக்குளிப்பாள். புராண கதையில் சீதை தீயினால் தீண்டப்பட மாட்டாள். ஆனால், அது யதார்த்தம் அல்லவே. ராஜம் மாண்டு போவாள். அவளை காப்பாற்ற முயலும் சுந்தரின் கண் பார்வை பறிபோகும்.

ஒரு மரணத்திற்கும், ஒருவரது கண்பார்வை பறி போனதற்கும் காரணமான ராதா கிருஷ்ணன், கண் தெரியாத அபலைப் பெண் பத்மினியை தனது பெண் போல பாவித்து  அடைக்கலம் தருவார். அவரது குற்றவுணர்விலிருந்து தப்பிக்க பத்மினி பயன்படுவாள். அவளுக்கு அறுவை சிகிச்சை  மூலம் கண் பார்வை கிடைக்க, ராதா கிருஷ்ணன் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பிறகுதான், பத்மினிக்கு ஒரு காதலன் இருப்பதும், அது ஒருகாலத்தில் தன்னால் வெறுக்கப்பட்ட மருத்துவர் சுந்தர் என்பதும் ராதா கிருஷ்ணனுக்கு தெரிய வரும். பத்மினி, சுந்தரின் நல்வாழ்வுக்காக ராதா கிருஷ்ணன் செய்யும் பரிகாரம்தான் கிளைமாக்ஸ்.

Also read... பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்.. நடிகையின் வாழ்க்கையையே தலைகீழாய் திருப்பிய திரைப்படம்!

டி.ஜானகிராமன் கண்ணின் மணிகள் படத்தின் கதையை எழுதி, இயக்கினார். அவரது கதையும், அதற்கு கணபதியப்பன் எழுதி திரைக்கதையும் கச்சிதமாக அமைந்து, சோகக் கதையிலும் ரசிகர்களுக்கு ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. இதில் எம்.கே.ராதா ராதா கிருஷ்ணனாகவும், எம்.வி.ராஜம்மா ராஜமாகவும், சுந்தர் மருத்துவர் சுந்தராகவும், பத்மினி அபலைப் பெண் பத்மினியாவும் நடித்தனர். இவர்கள் மட்டுமின்றி என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோருக்கும் அவர்களது பெயர்களே கதாபாத்திரப் பெயர்களாக தரப்பட்டிருந்தது.

கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தும் பொருந்திப் போனதால் சோகத்தை மீறி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று கண்ணின் மணிகள் வெற்றிப்படமானது. 1956 மே 5 வெளியான கண்ணின் மணிகள் இன்று 67 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema