1951 வெளியான பாதாள பைரவியை தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்திருந்தனர். என்.டி.ராமராவ், எஸ்.வி.ரங்காராவ் பிரதான வேடங்களில் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டி, சக்ரபாணி படத்தை தயாரித்தனர். படம் இரு மொழிகளிலும் பட்டையை கிளப்பி, நாகி ரெட்டி, சக்ரபாணியின் கல்லாக்களை நிரப்பியது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தவர்கள் அடுத்தும் அதைத் தொடர்ந்தார்கள். பாதாள பைரவிக்குப் பிறகு அதே என்.டி.ராமராவை நாயகனாகப் போட்டு அடுத்தப் படத்தை எடுத்தனர். இதுவும் தெலுங்கு, தமிழ் என இரு மொழிப்படமாக தயாரானது. தெலுங்கில் பெல்லி சேஸி சூடு என்றும் தமிழில் கல்யாணம் பண்ணிப்பார் என்றும் பெயர் வைத்தனர். பெயரைக் கேட்டால், முடிஞ்சா கல்யாணம் பண்ணிப் பாரு என்று சவால்விடும் தொனி இருக்கும். படத்தின் கதையும் அதுதான். தமிழில் ஒரு பழமொழி உண்டல்லவா, வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார். இந்த இரண்டுமே ஒரு மனிதனின் அதிகபட்ச உழைப்பையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் உறிஞ்சிவிடுபவை.
பெல்லி சேஸி சூடு படத்தில் என்டி ராமராவ் பண்ணையார் எஸ்வி ரங்காராவின் மகள் சாவித்ரியை காதலிப்பார். என்டி ராமராவின் தாய்மாமாவுக்கு, தனது மகளை என்டி ராமராவ் திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ராமாராவ், சாவித்ரி காதல் அவரது ஆசையில் மண்ணள்ளிப்போடும். ராமராவுக்கு அவரது தங்கை ஜி.வரலட்சுமியை திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு இருக்கும். அதற்கு நிறைய வரதட்சணை தேவைப்படும். எஸ்வி ரங்காராவ் அதற்கு உதவி செய்வதாக வாக்குத்தர, சென்னையைச் சேர்ந்த வரனுக்கு வரலட்சுமியை பேசி முடிப்பார்கள். கல்யாணத்தன்று வரதட்சணை பணத்தை தாலிகட்டுவதற்கு முன்பே தந்தாக வேண்டும் என அடம்பிடிப்பார் பைனின் அப்பா. அதற்கு காரணமாக இருப்பவர் என்டி ராமராவின் தாய்மாமன். தனது ஆசையில் என்டி ராமராவ் மண்ணள்ளிப் போட்டதால், பழிதீர்க்கக் காத்திருப்பவர், சமயம் வந்ததும் தனது வேலையைக் காட்டுவார். வரலட்சுமியின் திருமணம் என்னானது... என்டி ராமராவ், சாவித்ரி திருமணம் நடந்ததா என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தனர்.
கல்யாணம் பண்ணிப்பார் படத்தில் வரதட்சணை கொடுமையை நகைச்சுவையாகச் சொன்னது எடுபட்டது. அழுதுவடியவும் இந்தக் கதையை சொல்லியிருந்திருக்கலாம். ஒரு முழுநீள என்டர்டெயின்மெண்டில் எதற்கு கண்ணீரின் பாரம் என்று முடிவெடுத்தது தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனம். பிரபல இயக்குனர் எல்.வி.பிரசாத் இயக்கிய முதல் தமிழ்ப் படம் இது. தெலுங்கு பெல்லி சேஸி சூடு முழுக்க கறுப்பு, வெள்ளையில் எடுக்கப்பட, தமிழ் கல்யாணம் பண்ணிப்பாரின் சில காட்சிகள் கேவா கலரில் எடுக்கப்பட்டன. அப்படி தென்னிந்தியாவில் முதலில் கேவா கலரில் படமாக்கப்பட்ட படம் என்ற பெருமையை கல்யாணம் பண்ணிப்பார் சொந்தமாக்கிக் கொண்டது.
Also read... கே.சங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பக்திப் படம் வருவான் வடிவேலன்
இந்தப் படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில் சின்னச் சின்னப் பிரச்சனைகளை எதிர்கொண்டது. படத்தில் அண்ணன், தங்கையாக பாசத்தை பொழியும் என்டி ராமராவும், வரலட்சுமியும் நிஜத்தில் சண்டைக் கோழிகளாக சிலுப்பிக் கொண்டிருந்தனர். வரலட்சுமியின் திருமண காட்சியில் அவர் என்டி ராமராவின் காலைத் தொட்டு கும்பிடுவது போல் ஒரு காட்சி எழுதப்பட்டிருந்தது. அந்தாள் காலை என்னால பிடிக்க முடியாது என்று அந்தக் காட்சியில் நடிக்க வரலட்சுமி மறுத்தார். இது மேலும் பிரச்சனையை கிளறிவிட்டது.
தயாரிப்பாளர்களில் நாகிரெட்டியைவிட சக்ரபாணி கோவக்காரர். அவருக்குப் பயந்தே வேலைகள் காலநேரம் தவறாமல் நடக்கும். அப்படி கல்யாணம் பண்ணிப்பார் படமும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையில் சுமூகமாக முடிந்து திரைக்கு வந்தது.
தெலுங்குப் படத்தில் நடித்த சில நடிகர்கள் தமிழில் மாற்றப்பட்டனர். குறிப்பாக வரலட்சுமியை திருமணம் செய்யும் நபரின் தந்தையாக தெலுங்கில் சிவராம கிருஷ்ணய்யா நடிக்க, தமிழில் அந்த வேடத்தில் சி.வி.வி.பந்துலு நடித்தார்.
தமிழ், தெலுங்கு இரு படங்களுக்கும் கண்டசாலா இசையமைத்தார். தமிழ்ப் படத்தின் வசனம் மற்றும் 17 பாடல்களை தஞ்சை என்.ராமையாதாஸ் எழுதினார். 1952 பிப்ரவரியில் தெலுங்குப் பதிப்பு வெளியாகி 11 சென்டர்களில் 100 நாள்கள் ஓடியது. அதிகபட்சமாக விஜயவாடா துர்கா கலா மந்திரம் திரையரங்கில் 182 தினங்கள் ஓடியது. தமிழ்ப் பதிப்பு கல்யாணம் பண்ணிப்பார் 1952 மே 15 ஆம் தேதி வெளியாகி மகத்தான வரவேற்பைப் பெற்றது. தெலுங்குக்கு இணையாக இங்கேயும் பல திரையரங்குகளில் படம் 100 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது.
1952 வெளியான கல்யாணம் பண்ணிப்பார். தற்போது - மே 15 - 71 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema