ராஜேந்திர பிரசாத் நடிப்பில் தெலுங்கில் 1996 இல் பேமிலி என்ற படம் வெளியானது. இது வி.சேகர் இயக்கத்தில் தமிழில் வெளியான காலம் மாறிப் போச்சு படத்தின் தெலுங்கு ரீமேக். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், குடும்பம், குடும்ப உறவுகளை பின்னணியாகக் கொண்டு தொடர்ச்சியாக படங்கள் வந்துள்ளன. சாமானிய மக்களின் குடும்ப மற்றும் சமூகப் பிரச்சனைகளை நாடகீயமான முறையில் காட்சிப்படுத்தியவர் விசு என்றால், அதனை இன்னும் யதார்த்தமாக பாமர மக்களின் மொழியில் சொன்னவர் வி.சேகர். நகைச்சுவை கலந்து அவர் எடுத்த அனைத்துப் படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்றன. அதில் முக்கியமானது காலம் மாறிப்போச்சு.
ஆண் பிள்ளையை தனது சொத்தாகப் பாவிக்கும் ஒரு குடும்பத் தலைவன், தனது மூன்று பெண்களை அவர்களுக்கு தகுதியில்லாத மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார். பெண்களுக்கு சொத்திலும் பங்கில்லை, அவர்களது திருமணத்தையும் செலவில்லாமல் நடத்த வேண்டும் என்ற கஞ்சத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தின் விளைவாக அந்தப் பெண்கள் படும் துயரங்களும், அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றும் மகன் தாய், தந்தையை கைவிடுவதும், இறுதியில் பெண்கள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றுவதும் கதை.
முழுக்க நகைச்சுவையில் தோய்த்து இந்தப் படத்தை வி.சேகர் எடுத்திருந்தார். இந்தப் படம் வெளியாவதற்கு சரியாக 40 வருடங்களுக்கு முன் இதே காலம் மாறிப் போச்சு பெயரில் தமிழில் ஒரு படம் வெளியானது. வி.சேகரின் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்றால், இந்தப் படம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டது.
1956 இல் வெளிவந்த பழைய காலம் மாறிப் போச்சு திரைப்படத்தை டி.பி.சாணக்யா இயக்கியிருந்தார். ஆந்திராவில் தப்பி சாணக்யா என்றால்தான் தெரியும். ஐம்பதுகளின் ஆரம்பத்திலிருந்து எழுபதுகளின் ஆரம்பம்வரை தெலுங்கு, தமிழில் முக்கியமான படங்களை இவர் இயக்கினார். தெலுங்கில் ஒரு படம் இயக்கி, அது வெற்றி பெற்றதும் அது தமிழில் ரீமேக் செய்யப்படும். அப்படித்தான் தெலுங்கில் வெற்றி பெற்ற, ரோஜுலு மாராயி படத்தை அவரே காலம் மாறிப் போச்சு என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
கிராமத்தில் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், அவர்களை ஏமாற்றும் ஒரு பணக்காரரையும் பற்றியது காலம் மாறிப் போச்சு படம். விவசாயிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுக்கு கடன் கொடுத்து, கடைசியில் அவர்களின் சொத்தை அபகரித்துக் கொள்வது அந்த ஊர் பெரிய மனிதரின் வாடிக்கை. அவரை ஒரு ஏழை விவசாயியின் மகன் எப்படி அம்பலப்படுத்தி, அரசின் உதவியுடன் விவசாயிகளின் நிலங்களை மீட்டுத் தருகிறான் என்பதை அவனது காதல் கதையுடன் இணைந்து சொல்லியிருந்தார்கள். ஜெமினி கணேசன் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் இதில் நடித்திருந்தனர். அவர்களுடன் பாலையா, கிரிஜா, தங்கவேலு, எம்.ஆர்.சந்தானலக்ஷ்மி, எஸ்..வி.சுப்பையா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தியின் முன்னணி நடிகையான வஹிதா ரஹ்மான் முதன்முதலில் காலம் மாறிப் போச்சு படத்தின் ஒரிஜினலான தெலுங்குப் படம் ரோஜுலு மாராயி படத்தில்தான் அறிமுகமானார். அதில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியிருந்தார். அப்படத்தை தமிழில் எடுத்த போது, அவரையே அந்த நடனத்தை ஆட வைத்தனர். அதன் பிறகே குருதத் போன்றவர்களின் படங்களில் நடித்து வஹிதா ரஹ்மான் முன்னணி நாயகியானார்.
Also read... விஜய்யின் 68வது படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர்!? லேட்டஸ்ட் தகவல்!
காலம் மாறிப்போச்சு படத்தில் இடம்பெற்ற கள்ளம் கபடம் தெரியாதவனே பாடல் படம் வெளியாகும் முன்பே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல், மதுரை வீரன் படத்தில், பட்டுக்கோட்டை எழுதிய, சும்மா கிடந்தா சோத்துக்கு கஷ்டம் பாடலின் டியூனை அப்படியே கொண்டிருந்தது. மதுரை வீரன் காலம் மாறிப் போச்சு படத்தைவிட ஒரு மாதம் முன்னதாக வெளியானது. எனினும், காலம் மாறிப் போச்சு பாடல் இசைத்தட்டாக முன்பே வெளியானதால், அப்படத்தின் விநியோகஸ்தரான ஏவி மெய்யப்ப செட்டியார் மதுரை வீரன் படத்தயாரிப்பாளர் லேனா செட்டியார் மீது வழக்குத் தொடுத்தார். மதுரை வீரன் பாடலுக்கு ஜி.ராமனாதனும், காலம் மாறிப் போச்சு படத்துக்கு மாஸ்டர் வேணுவும் இசையமைத்திருந்தனர். நீதிபதி இரண்டு பாடல்களையும் கேட்டார். விசாரணையில் இரண்டுமே ஒரிஜினல் இல்லை, நாட்டுப்புற பாடலிலிருந்து இன்ஸ்பையர் ஆகி போடப்பட்ட மெட்டுகள் அவை என்பது தெரிய வந்தது. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
1956 மே 4 ஆம் தேதி வெளியான காலம் மாறிப் போச்சு நேற்று 67 வது வருடத்தை நிறைவு செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema