ஜீத் என்ற தொலைக்காட்சி தொடர் 2003 அக்டோபர் 10 ஆம் தேதி ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அங்கூர் நய்யார் நடித்த இந்தத் தொடர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற போது, சர்ச்சையிலும் சிக்கியது. 1974 இல் வெளியான இம்திகன் இந்திப் படத்தின் காப்பி இந்தத் தொடர் என குற்றம்சாட்டினர். இந்தப் படத்தில் வினோத் கன்னாவும், தனுஜாவும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் குடும்பத் தொழிலைவிட்டு, கல்லூரி ஒன்றில் புரபஸராக பணிபுரிய முன்வருவான். அந்தக் கல்லூரி பொறுக்கி மாணவர்களால் நிறைந்திருக்கும். அவர்களை இவன் திருத்த முனைகையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரும். முக்கியமாக மூன்று பெண்களுடன் அவன் பாலியல்ரீதியாக தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழும். அது உண்மையா, அந்தப் பிரச்சனையிலிருந்து அவன் எப்படி மீண்டான் என்பது இம்திகன் படத்தின் கதை.
இதே கதையைத்தான் கொஞ்சம் வெட்டி, ஒட்டி ஜீத் என்ற தொலைக்காட்சி தொடராக எடுத்தனர். இந்தத் தொடர் 2004 ஏப்ரல்வரை ஒளிபரப்பாகியது. இந்திப் படத்தை காப்பியடித்துவிட்டார்கள் என்று உரிமைக்குரல் எழுந்த போது, அந்த இந்திப் படமே ஒரு காப்பிதான் என்று பதிலடி கொடுத்தனர். இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.
1971 இல் பாலசந்தர் ஜெய்சங்கர், லட்சுமியை வைத்து நூற்றுக்கு நூறு படத்தை எடுத்தார். இதில் ஜெய்சங்கர் கல்லூரி பேராசிரியர். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கையில், அவருக்கும் மூன்று பெண்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வரும். இந்தக் குழப்பம் எதனால், இதன் உண்மைத்தன்மை என்ன என்பது கதை. கொஞ்சம் த்ரில்லர் சாயலில் பாலசந்தர் இதனை எடுத்திருந்தார். அடிதடி படங்களில் நடித்து வந்த ஜெய்சங்கரை முற்றிலும் வேறுமாதிரி காட்டிய படம் இது.
இந்தப் படத்தைதான் 1974 இல் இந்தியில் வினோத் கன்னா நடிப்பில் இம்திகன் என்ற பெயரில் எடுத்தனர். ஆனால், பாலசந்தரின் படமும்கூட ஒரிஜினல் இல்லை ஹாலிவுட் படம் டூ சார், வித் லவ் படத்தின் இன்ஸ்பிரேஷனில், அதன் ஒரு பகுதியை விரித்து எடுத்ததுதான் என்போரும் உண்டு. உங்க இந்திப் படமே ஹாலிவுட் படத்தின் காப்பிதான். அதை நாங்க காப்பி அடிக்கக் கூடாதா என ஜீத் தயாரிப்புத் தரப்பு பதிலடிதர, உரிமைக்குரல் கொடுத்தவர்கள் கப்சிப்பானார்கள்.
டூ சார், வித் லவ் மற்றும் கிளாஸ் ஆஃப் 1984 படங்களை உலகம் முழுவதும் பல மொழிகளில் கதறக்கதற காப்பியடித்துள்ளார்கள். மலையாளத்தில் 1987 இல் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் செப்பு என்ற படம் வெளியானது. இதில் மோகன்லால் பொறுக்கிகள் நிறைந்த கல்லூரியின் பேராசிரியராக வருவார். இதன் பெரும்பாலானக் காட்சிகள் கிளாஸ் ஆஃப் 1984 படத்தைக் கொண்டிருக்கும். கொஞ்சம் டூ சார், வித் லவ். இதில் ரவுடி மாணவனாக கணேஷ் குமார் நடித்திருப்பார். 1994 இல் வெளிவந்த கமலின் நம்மவர் படம் அப்படியே செப்பு படத்தை கொண்டிருக்கும். அதில் கணேஷ் குமார் செய்த வேடத்தை நம்மவரில் கரண் செய்திருப்பார்.
அப்படி 1967 இல் வெளியான ஹாலிவுட் படம் 1971 இல் தமிழிலும், 1974 இல் இந்தியிலும், 1987 இல் மலையாளத்திலும், 1994 இல் மறுபடியும் தமிழிலும், 2003 இல் இந்தியில் தொலைக்காட்சி தொடராகவும் மறுஅவதாரம் பெற்றது. இதில் பாலசந்தர் பாலியல் குற்றச்சாட்டுக்கும், அது தொடர்புடைய உளவியல் நெருக்கடிகளுக்கும் பிரதான இடம்கொடுத்து படத்தை எடுத்திருந்தார். மற்றவர்கள் கமர்ஷியலான ஹீரோயிசத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருந்தனர்.
நமது கலாச்சாரத்தையும், நமது திறமையையும் வெளிப்படுத்துவதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் பல படங்களின் நதி மூலம் ஹாலிட் என்பது அதிர்ச்சிதரும் உண்மை. 1971 மார்ச் 19 வெளியான நூற்றுக்கு நூறு படம் தற்போது 52 வது வருடத்தை நிறைவு செய்து 53 வது வருடத்தில் நுழைகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema