முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பெண் சூப்பர் ஸ்டார்.. வரதட்சணைக்கு எதிரான கதை.. 83 வருடங்களுக்கு முன்பே பட்டையைக் கிளப்பிய திரைப்படம்!

பெண் சூப்பர் ஸ்டார்.. வரதட்சணைக்கு எதிரான கதை.. 83 வருடங்களுக்கு முன்பே பட்டையைக் கிளப்பிய திரைப்படம்!

ஜயக்கொடி

ஜயக்கொடி

வரதட்சணைக்கு எதிரான கருத்து, கதையில் ஓரமாகவோ இல்லை கிளைக்கதையாகவோ ஜயக்கொடியில் இடம்பெறவில்லை. படத்தின் மெயின் கதையே அதுதான்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பெண்களின் திருமண கனவை சிதைப்பதில் வரதட்சணை முதலிடத்தில் உள்ளது. வரதட்சணை கொடுக்க இயலாமல் திருமணம் நடைபெறாமல் இருக்கும் முதிர்கன்னிகளுக்கு இன்றும் இந்தியாவில் பஞ்சமில்லை. வரதட்சணை கொலைகள் வாரம் ஒன்றாவது பத்திரிகைகளில் வந்துவிடுகின்றன. இப்போதே இப்படி என்றால் 80 வருடங்களுக்கு முன் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை. வரதட்சணைக்கு எதிராக பேசிய திரைப்படங்களில் ஜயக்கொடி முக்கியமானது.

வரதட்சணைக்கு எதிரான கருத்து, கதையில் ஓரமாகவோ இல்லை கிளைக்கதையாகவோ ஜயக்கொடியில் இடம்பெறவில்லை. படத்தின் மெயின் கதையே அதுதான். நாயகி ராஜம் ஒர பிராமணப் பெண். ஏழை. அன்றாடத்துக்கே வழியில்லை. அருகில் உள்ள ஒரு குடும்பம்தான் அவர்களுக்கு உதவி செய்யும். கடன் வாங்கியதில் தகராறாகி, ராஜத்தின் தந்தையை ஒரு வட்டிக்காரன் கொன்று, வீட்டையும் தீ வைத்து கொளுத்திவிடுவான். இதனைத் தொடர்ந்து ராஜம் ஒரு போராளியாக மாறி, வரதட்சணைக் கொடுமைகளை தட்டிக் கேட்க ஆரம்பிப்பாள். வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளைகள் காணாமல் போவார்கள். அனைத்திற்குப் பின்னாலும் ராஜத்தின் கைவரிசை இருக்கும். இறுதியில் தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவனை ராஜம் திருமணம் செய்து கொள்வாள். பிறகு கணவன், மனைவி இருவரும் வரதட்சணைக்கு எதிராக போராடுவதாக படம் முடியும்.

இந்தக் கதையை எழுதி, திரைக்கதை அமைத்து, இயக்கியவர் பகவான் தாதா. மும்பையைச் சேர்ந்த பகவான் தாதா ஒரு நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சிக்கனமாகப் படத்தை முடிப்பதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர். இவர் இந்திப் படங்களுடன் சில தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார். அதில் ஜயக்கொடி முக்கியமானது. இதையடுத்து அவர் இயக்கிய வன மோகினி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஜயக்கொடி ஒரு நாயகி மையப்படம். நாயகி ராஜமாக கே.டி.ருக்மணி நடித்தார். இவர் மௌனப்படக் காலத்திலிருந்தே படங்களில் நடித்து வந்தவர். குதிரையேற்றம், வாள் சண்டை, துப்பாக்கிச் சுடுதல் என்று வீரசாசக் காட்சிகளில் நடிப்பதில் நிபுணர். பேண்டும், முழுக்கை சட்டையும் அணிந்து இவர் போடும் சண்டைக்கு அன்று ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மின்னல் கொடி படப்பிடிப்பில் குதிரையிலிருந்து விழுந்து, பல மாதங்கள் படுக்கையில் கிடந்து, உடல்தேறி வந்து மின்னல் கொடியை முடித்துத் தந்தார். ஜயக்கொடி படம் அவரை முன்னணி நடிகையாக்கியது. பிறகு திருமணம் செய்து, சினிமாவிலிருந்து ஒதுங்கினார். ஜயக்கொடியில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

படத்தில் ராஜத்தின் கணவராக கே.நடராஜன் நடித்தார். சி.ராமச்சந்திரன் இசையமைக்க, சி.முருகேசன் பாடல்கள் எழுதினார். எண்பது வருடங்களுக்கு முன் வரதட்சணை என்ற சமூகப் பிரச்சனையை முதன்மைப்படுத்தி நாயகிமையப்படம் எடுப்பது ஒரு சவாலான விஷயம். பகவான் தாதா அதில் வெற்றி பெற்றார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

1940 மார்ச் 17 வெளியான ஜயக்கொடி இன்று 83 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema