இந்திய இசைத்துறையில் தனது இனிமையான குரலால் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் எஸ்.ஜானகி. அவரது பிறந்த நாளான இன்று அவர் தனது வழக்கமான குரலில் இருந்து மாறுபட்டு பாடிய பாடல்கள் சிலவற்றை தெரிந்துகொள்ளலாம்.
16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகி தான், ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலின் இடையே பாட்டி குரலில் பழைய நினைப்பு தான் பேராண்டி என்று மாற்றி பாடியிருப்பார். இதே போன்று தனது இளம் வயதிலேயே பாட்டி குரலில், உதிரிப்பூக்கள் படத்திற்காக இவரை இளையராஜா பாட வைத்திருப்பார். போடா போடா பொக்க என்ற அந்த பாடல் மிகவும் ஹிட்டானது.
இது மட்டுமா ஆண் குரலிலுல் பல பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் வரும், வளர் இளம் சிறுவனின் குரலில், மம்மி பேரு மாரி பாடலை பாடி, சபாஷ் பெற்றார் ஜானகி. அப்படித்தான் பாட்டுக் கச்சேரி ஒன்றில், சுசிலாவுடன் இணைந்து, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை, டி.எம்.சவுந்திரராஜன் குரலில் பாடி கைத்தட்டை பெற்றார். இப்படி வெவ்வேறு குரல்களில் பாடினாலும், குழந்தை அல்லது மழலை குரலில் பாடுவது ஜானகிக்கு கை வந்த கலை. சிறு வயது சிம்புவுக்காக ஐ ஏம் ஏ லிட்டில் ஸ்டார் பாடல் இவரது திறமையை வெளிப்படுத்தியது.
இதே போல, சபா ஒன்றில் கண்ணனை அழைக்கும் பாட்டை குழந்தை குரலில் பாடுவதற்காக இவரே ஒரு பாடலை எழுதி பாடியிருந்தார். இதை கேட்ட இளையராஜா, இசையில் சில மாற்றங்களை செய்து ருசி கண்ட பூனை படத்திற்காக இந்த பாடலை பாட வைத்திருப்பார். டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு என்ற குழந்தை குரலிலான இவரது பாடல் மிகவும் ரசிக்கப்பட்டது.
அதே போல, மவுன கீதங்கள் படத்திற்காக, இவர் பாடிய டாடி டாடி பாடல் இவரது குரலில் வித்தியாசத்தை வெளிப்படுத்தியது. இப்படி இவர் பாடிய குழந்தை குரலிலான பாடல்களின் எண்ணிக்கை அதிகம். இதே போல், நிறைய பாடல்களை மழலை மொழியில் அவர் பாடியுள்ளார்.
பல பாடல்களில் இரண்டு கதாநாயகிகள் பாடுவது போல் இருந்தாலும், ஜானகி என்ற ஒருவர் தான் இருவருக்கும் குரல் கொடுத்திருப்பார். உதாரணமாக, மகளிர் மட்டும் படத்தில் மூன்று கதாநாயகிகள் பாடும் பாடலை ஜானகி மட்டுமே பாடியிருப்பார்.
மிகவும் படித்த வேலை பார்க்கும் பெண்ணான ரேவதிக்கு அவர் பாடுவது போலவும், குடும்ப தலைவியான அய்யர் மாமி பாத்திரத்தில் நடித்திருந்த ஊர்வசிக்கு அவர் பாத்திரத்திற்கு ஏற்பவும், துப்புரவு பணியாளரான ரோகினிக்கு ஏற்பவும் ஜானகி பாடியிருப்பார். இப்படி பல விதமான குரல்களில் தமிழில் மட்டும் எஸ்.ஜானகி பாடவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Singer Janaki