முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவாஜி, எம்ஜிஆர் மட்டுமல்ல.. ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்த ஜெய்சங்கர் படம் - அப்படி என்ன படம்?

சிவாஜி, எம்ஜிஆர் மட்டுமல்ல.. ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்த ஜெய்சங்கர் படம் - அப்படி என்ன படம்?

சினிமா

சினிமா

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களுக்கு இடையே வெளியாகி ஜெய்சங்கரின் பாலாபிஷேகம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவாஜி, எம்ஜி ராமச்சந்திரன் ஒருபக்கம் மெகா ஹிட்கள் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ஜெய்சங்கர் தொடர்ச்சியாக படங்கள் நடித்து நலிந்த, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருந்தார். எத்தனை பிரமாண்ட வெற்றிப் படங்களுக்கு நடுவில் வந்தாலும் மினிமம் வசூலை ஜெய்சங்கரின் படங்கள் பெற்றுவிடும். அப்படி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பாலாபிஷேகம்.

கௌபாய், ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்களில் நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர் கணிசமான கிராமத்துப் படங்களிலும் தோன்றியிருக்கிறார். பாலாபிஷேகம் அப்படியான ஒரு படம். இயக்கியவர் குடும்ப இயக்குநர் என பெயரெடுத்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பாலாபிஷேகத்தில் ஜெய்சங்கர் குமரன் என்ற விவசாயியாக நடித்தார். அவரது அம்மா மீனாட்சி அந்த ஊர் பண்ணையார் தாலிகட்டிய மனைவி. குமரன் பிறந்த பிறகு வீட்டு வேலைக்காரியாக வரும் செங்கமலம் பண்ணையாரின் ஆசைநாயகியாக, மீனாட்சி குமரனுடன் வீட்டைவிட்டு வெளியேறுவார்.

குமரன் வளர்ந்து அப்பாவின் நிழல்கூட தன் மேல் படாமல் விவசாயம் செய்து அம்மாவை காப்பாற்றி வருவான். பண்ணையார் - செங்கமலத்துக்குப் பிறந்த முத்தையா குமரனுக்கு நேரெதிர் குணம் கொண்டவன். படத்தின் ஆரம்பத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் குமரனின் மீது வில் வண்டியில் வரும் முத்தையா துப்பும் எச்சில்படும். குமரன் முத்தையாவை புரட்டியெடுப்பான். இந்த சண்டைப் பின்னணியில் அவர்கள் இருவருக்குமான உறவை இயக்குநர் விவரித்திருப்பார்.

அந்த ஊரின் கிரிமினல் ஆத்மாக்களில் ஒன்று பொய்சாட்சி பூதலிங்கம். அவரது மகள் சிவகாமி. வெளியூரில் வளர்ந்துவரும் அவள் ஊருக்குத் திரும்பும் முதல்நாளே குமரனுடன் ஒரண்டை இழுப்பது போல் ஆகிவிடும். தாவணி கட்டி, தலைநிறைய மல்லிகைப் பூவுடன் ஏரியில் சிவகாமி நீச்சலடிப்பதை தொலைவிலிருந்துப் பார்க்கும் குமரன், நீச்சல் தெரியாமல் தத்தளிக்கிறாள் என நினைத்து, தண்ணியில் பாய்ந்து சிவகாமியை கரைக்கு அள்ளிக் கொண்டு வருவான். பருந்து கோழிகுஞ்சை தூக்கிட்டுப் போற மாதிரி என்ன மேன் பண்ற என்று சிவகாமி கேட்க, வழக்கம் போல் நாயகன் - நாயகி அறிமுகம் மோதலில் தொடங்கும்.

இதையும் படிக்க | மதவெறியை விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி- பிரகாஷ் ராஜ்

செங்கமலம் பண்ணையாரை தனது தலையாட்டி பொம்மையாக மாற்றி வைத்திருப்பாள். உள்ளூர் விவசாயிகளுக்கு தர வேண்டிய ஒரு ரூபாய் பாக்கியை கூலியுடன் சேர்த்து தராமல், வெளியூரிலிருந்து வேலைக்கு ஆள் கொண்டு வருவாள். குமரன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அந்தம்மாவுக்கும் இந்த வயலுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்க, அவங்க பண்ணையாரோட வப்பாட்டி என்று சிவகாமி செங்கமலத்தின் மானத்தை நடுரோட்டில் போட்டுடைப்பாள். அப்படி குமரன், சிவகாமி மோதல் நெருக்கமாகி காதலாகும்.

சிவகாமியை செங்கமலத்தின் மகன் முத்தையாவும் காதலிப்பான் சிவகாமியின் தந்தை பொய்சாட்சி பூதலிங்கம் குமரனுடனான மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அவள் வீட்டைவிட்டு வெளியேறி குமரனுடன் சேர்ந்து கொள்வாள். இதனிடையில் பண்ணையாரை பாலில் விஷம் வைத்து கொன்று சொத்துக்களை அபகரிக்க பொய்சாட்சி பூதலிங்கத்துடன் சேர்ந்து செங்கமலம் திட்டமிட, முத்தையாவே இந்தத் தகவலை குமரனிடம் போட்டுக் கொடுப்பான். குமரன் அவர்களின் சதியை முறியடித்து, அம்மாவின் கௌரவத்தை மீட்பது கதை.

படத்தில் சிவகாமியாக ஸ்ரீப்ரியாவும், அவரது தந்தை பொய்சாட்சி பூதலிங்கமாக தேங்காய் சீனிவாசனும், பண்ணையாராக அசோகனும், செங்கமலமாக ராஜசுலோசனாவும், முத்தையாவாக ஸ்ரீகாந்தும், மீனாட்சியாக பண்டரிபாயும் நடித்திருந்தனர். முருகனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பாலாபிஷேகம் செய்கிறவர் மீனாட்சி. அதனால் படத்துக்கு பாலாபிஷேகம் என பெயர் வைத்தார்களா இல்லை அப்படி பெயர் வைத்ததால் மீனாட்சி பாலாபிஷேகம் செய்வதாக காட்சி வைத்தார்களா தெரியாது.

பாலாபிஷேகம் வெளிவந்த அதே 1977 இல்தான் சிவாஜியின் மெகாஹிட் அண்ணன் ஒரு கோயில், எம்ஜி ராமச்சந்திரனின் மீனவ நண்பன், கமல், ரஜினியின் 16 வயதினிலே, சிவகுமாரின் துணையிருப்பாள் மீனாட்சி போன்ற வெற்றிப் படங்கள் வெளியாகின. இவற்றையெல்லாம்விட தேவரின் ஆட்டுக்கார அலமேலு 1977 இல் வெளியாகி உலக ஓட்டம் ஓடியது. அதிலும் ஸ்ரீப்ரியாதான் நாயகி. நாயகன் சிவகுமார். இவர்கள் இருவரையும்விட படத்தில் நடித்த ஆடுதான் ரசிகர்களிடம் பிரபலமானது.

இத்தனை வெற்றிப் படங்களுக்கு நடுவில் வெளியான பாலாபிஷேகமும் நன்றாக ஓடி தயாரித்தவர், வாங்கியவர், வெளியிட்டவர் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துத் தந்தது.

1977 மே 14 வெளியான பாலாபிஷேகம் நாளை (மே 14) 46 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

First published:

Tags: Classic Tamil Cinema, Kamal Haasan, Rajinikanth