இலக்கியம், அரசியல், சினிமா என மூன்றிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்தவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். கம்யூனிஸ்ட் கட்சியில் வளர்ந்தவர் அவர். இடதுசாரிகளுக்காக மேடையேறி வாக்குக் கேட்டவர். காமராஜர் மீது பேரன்பும், திராவிட அரசியல் மீது பெருங்கோபமும் கொண்டவர். இறுதிநாளில் கலைஞர் கருணாநிதியின் கையால் விருது வாங்கி, திராவிட அரசியலின்பாற் சாய்ந்தவர்.
ஜெயகாந்தனின் கதைகளில் சமூக யதார்த்தம் ஒரு வழக்கறிஞருக்குரிய வாதங்களுடன் துவங்கும். அதனால், சாமானிய வாசகர்களையும் சட்டென்று ஈர்க்கக் கூடியது. எம்ஜிஆர் திரைப்பட நடிகராக முன்னணியில் இருந்த போது, கடவுளுக்குரிய மரியாதையுடன் கொண்டாடப்பட்டார். இந்த தனிமனித வழிபாட்டை சினந்து அவர் எழுதிய சிறுகதை சினிமாவுக்குப் போன சித்தாளு. சினிமா மோகத்தில், அதுவும் குறிப்பிட்ட நடிகர் மீதான விருப்பத்தில், அவரது படத்தை முதல்நாளே பார்த்தால்தான் ஆயிற்று என்று கிளம்பிச் செல்லும் பெண்ணிற்கு ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை.
சினிமாவுக்குப்போன சித்தாளு கதை வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற போது, ஜெயகாந்தனுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த இளவேனில் அதனை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது. சினிமாவுக்குப்போன சித்தாளு கதையை வ.கௌதமன் குறும்படமாக எடுத்தார். அவலை நினைத்து உரலை இடித்த முயற்சி.
முகம் தெரியாத ஆடவனால் வன்புணர்வுக்கு உள்ளான மகளின் தலையில் தண்ணி ஊற்றி, நடந்த சம்பவத்தை வெறும் தீட்டாக தண்ணி தெளித்து கடந்து செல்வதை ஜெயகாந்தனின் அக்னிபிரவேசம் கதை பேசியது. ஆனந்தவிகடனில் வெளியான அக்கதை அன்று தமிழகத்தின் பேசுபொருளானது. எவனோ ஒருவன் செய்த தவறுக்கு ஒரு பெண் காலமெல்லாம் கண் கலங்கிக் கொண்டிருக்க வேண்டுமா என்பதுதான் அக்கதையின் அடிப்படை.
அந்தக் கதைக்கு எதிர்வினையாக ஜி.நாகராஜன் ஒரு கதை எழுதினார். அதாவது வன்புணர்வுக்கு உள்ளான பெண் கர்ப்பம் தரித்து விடுகிறாள். இப்போது, தண்ணி தெளித்து தீட்டு கழித்து, பிரச்சனையை முடித்துவிட முடியாதில்லையா? வன்புணர்வின் தீர்வு வெறும் தண்ணி தெளித்து சுயசமாதானம் அடைவதல்ல என்ற பொருளில் இந்தக் கதையை அவர் எழுதியிருந்தார்.
இப்படி கருத்தும் எதிர்கருத்துமாகவே இலக்கிய உலகம் எப்போதும் இயங்கி வந்திருக்கிறது. அக்னிபிரவேசம் கதையின் தொடர்ச்சியாக தினமணி கதிரில் ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் கதையை எழுதினார். இக்கதை தொடராக வெளிவந்து, பிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா, நடக்கக் கூடாதது நடந்ததாக பதறி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் விஷயத்தை தெரிய வைத்து விடுவார். அதனால், அப்பெண்ணின் மாமனாரின் கஸ்டடியில் சென்னையில் தங்கி படிக்க வைப்பார்.
அவளும் படித்து ஒரு வேலையில் சேருவாள். இதனிடையில் வயதான அந்த மாமனாரின் பாலியல் சீண்டல்களையும் அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், தன்னை கெடுத்த நபரை அவள் தேடிச் செல்வாள். அவனுக்கு திருமணமாகி வளர்ந்த பெண் குழந்தையும் இருக்கும். ஏதோ தெரியாம நடந்திச்சி என்று சிகரெட் புகைத்தபடி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் சொல்லும் அவனை இந்தப் பெண் காதலிக்க ஆரம்பிப்பாள்.
இறுதியில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பெண்ணுக்கு, அவளிடம் தவறாக மட்டுமே நடந்து கொண்ட மாமனார், பாலியல் பலாத்காரம் செய்த ஆண் என அனைவரும், திருமணம் செய்து கொள் என அறிவுரை கூறுவார்கள். ஆனால், அவள் அதனை மறுத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனின் நினைவில் மீதி வாழ்க்கையை ஓட்ட தீர்மானிப்பதாக கதை முடியும்.
விதவையான ஒரு பெண் மறுமணம் செய்வது அவளது விருப்பம். ஆனால், அப்படி செய்யாமல் விதவையாகவே வாழும் பெண்கள் மீது எனக்கு மரியாதை உண்டு என்று ஜெயகாந்தன் ஒருமுறை கூறியிருப்பார். ஒருமுறை திருமணமானவள் - அதாவது ஒரு ஆணுடன் கூடியவள் இன்னொரு ஆடவனை ஒருபோதும் தனது வாழ்வில் அனுமதிக்கக் கூடாது. அப்படி நடந்து கொண்டால் அவர்கள் மீது ஜெயகாந்தனுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.
இந்தக்கதையில் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் ஒருவகை திருமணம்தான் என்ற நோக்கில், அவனைத் தவிர வேறு ஆடவரை தனது வாழ்வில் அனுமதிக்காமல் மீதி வாழ்வை தனியாக கழிக்க, அப்பெண் தீர்மானித்ததாக முடித்திருப்பார். இந்தக் காலத்தில் இப்படியொரு கதையுடன் ஒரு படம் வெளிவந்தால் அடித்துத் துவைத்திருப்பார்கள். ஆனால், அன்று இதுவே ஒரு புரட்சிகரமான கருத்தாகப் பார்க்கப்பட்டது. பீம்சிங் மிகச்சிறப்பாக படத்தை இயக்கியிருந்தார். முக்கியமாக விட்டல் ராவின் ஒளிப்பதிவு படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது. படம் 100 நாள்கள் ஓடியதுடன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமிக்கு சிறந்த நடிப்புக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்தக் கதையில் ஜெயலலிதாவையும், முத்துராமனையும் நடிக்க வைக்க பீம்சிங் திட்டமிட்டிருந்தார். அவர்களிடம் கால்ஷீட்டும் பெறப்பட்டது. ஆனால், பிரதான கதாபாத்திரங்களுக்கு இவர்கள் இருவருமே சரிவர மாட்டார்கள் என்று ஜெயகாந்தன் பிடிவாதமாக மறுத்ததுடன் லட்சுமி, ஸ்ரீகாந்தை பரிந்துரை செய்தார். அவர் விருப்பம் போல்தான் கடைசியில் நடந்தது. அது எவ்வளவு நல்ல முடிவு என்பது படம் பார்க்கும் போது புரியும்.
படத்தின் இறுதிக்கட்டத்தில் லட்சுமி சரியான ஒத்துழைப்பு தரவில்லை. பல காட்சிகளுக்கு அவர் டப்பிங்கும் பேசவில்லை. பிறகு வேறொருவரை வைத்து டப்பிங்கை பூர்த்தி செய்தனர். நல்லவேளை இந்த விவரம் விருது கமிட்டிக்கு தெரியாது.தெரிந்திருந்தால் விருது கிடைத்திருக்காது.
படத்தின் கருத்து ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் இப்படியொரு கதை வந்ததும், அதனை படமாக்கிவிதமும் இன்றும் பார்க்கும்விதத்தில் உள்ளது இதன் சிறப்பு. 1977 ஏப்ரல் 1 வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் இன்று 46 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, Jayalalitha