தமிழ் சினிமாவை செதுக்கிய ஆரம்பகால சிற்பிகளில் ஒருவர் கே.சுப்பிரமணியம். 1934 வெளியாகி வெற்றி பெற்ற பவளக்கொடி தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு ஸேவாஸதனம், தியாக பூமி, பாலயோகினி போன்ற படங்களை எடுத்தார். நாற்பதுகளின் இறுதியில் அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம் கீத காந்தி.
சுப்பையரின் பேத்தி கிரிஜா அண்ணாமலை யூனிவர்சிட்டியில் பயிலும் மாணவி. அவள் புகைவண்டியில் ஊருக்கு வரும் போது, எக்மோர் புகைவண்டி நிலையத்தில் கைக்குழந்தையுடன் வரும் பெண்ணொருத்தி சற்று நேரம் தனது குழந்தையை வைத்துக் கொள்ளும்படி கேட்பாள். குழந்தை என்றால் யாருக்குப் பிடிக்காது? தவிர ஒரு தாய்க்கு உதவுவது கடமையல்லவா? கிரிஜா அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வாள்.
அந்த தாய்க்கு என்ன கஷ்டமோ, குழந்தையை கிரிஜாவிடம் தந்துவிட்டு, புகைவண்டி முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வாள். பிறகுதான் கிரிஜாவுக்கு புரியும், அந்தப் பெண் தனது கைகளில் தந்தது, குழந்தை வடிவிலான அவளது பிரச்சனையை என்று.
கிரிஜா குழந்தையுடன் காவல் நிலையத்துக்கு செல்வாள். அவர்கள், இவளை கேலி செய்து அனுப்பிவிடுவார்கள். அவள் சொல்லும் கதையை யாரும் நம்பத் தயாராக இல்லை. வேறு வழியின்றி குழந்தையுடன் சொந்த ஊர் திரும்புவாள். பட்டணத்திலேயே நம்பவில்லை, கிராமத்தில் சொல்ல வேண்டாம். படிக்கப் போன இடத்தில் குழந்தைப் பெற்றுக் கொண்டாள் என்றே நினைப்பார்கள். இது ஒருபுறம் இருக்க, மருத்துவர் சந்தர் என்பவரும், கோபு என்பவனும் ஒன்றாக புகைவண்டியில் பயணம் செய்வார்கள்.
தன்னை அவமதித்த மருத்துவர் சந்தரை பழிவாங்க, அவரது அடையாளத்தை கோபு எடுத்துக் கொள்வான். உண்மையான மருத்துவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவான். புதிதாக ஒரு மருந்து கண்டுபிடித்து கோபு பணக்காரனாகிவிடுவான்.
இங்கே கிரிஜா குழந்தையை தண்ணியில் மூழ்கடித்து கொலை செய்ய, அவளையும் மனநல மருத்துவமனையில் அனுமதிப்பார்கள்.
பெரியவர் சுப்பையர் எப்படி இந்தப் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார் என்பது கதை. இந்தப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் சுப்பையராகவும், எம்.ஆர்.எஸ்.மணி மருத்துவர் சந்தராகவும், வி.குமார் கோபுவாகவும் நடித்திருந்தனர். பி.ஏ.பெரியநாயகி கோபுவின் சகோதரி சாரதாவாக வேடமேற்றிருந்தார். பி.எஸ்.சரோஜா கிரிஜாவாக சிறப்பான நடிப்பை அளித்திருந்தார்.
இந்தப் படத்தில் பரதநாட்டிய தாரகை பத்மா சுப்பிரமணியம் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். படத்தில் அவருக்கு பத்மா என்றே பெயர் வைத்திருந்தனர். இவர் இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீத காந்தி படத்தின் கதை, திரைக்கதை எழுதி கே.சுப்பிரமணியம் படத்தை இயக்கினார். அவரது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்தது. பாண்டுரங்கனும், லக்ஷ்மணனும் படத்துக்கு இசையமைத்திருந்தனர். படம் வெளியான போது படத்தில் இடம்பெற்ற லலிதா, பத்மினியின் நடனம் பேசப்பட்டது.
படத்தில் காந்தியை புகழ்ந்தும், அவரது கொள்கையை விளக்கியும் பாடல்கள் வைத்திருந்தனர். கே.சுப்பிரமணியத்தின் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் கீத காந்தி சுமாராகவே போனது.
1949 மார்ச் 16 வெளியான கீத காந்தி நேற்று 74 வது வருடத்தை நிறைவு செய்து இன்று 75 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema