முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 1950ல் வெளியான காஞ்சனா.. அப்போதே இப்படி ஒரு கதையா?

1950ல் வெளியான காஞ்சனா.. அப்போதே இப்படி ஒரு கதையா?

காஞ்சனா

காஞ்சனா

1950ல் வெளியாகி காஞ்சனா படம் வெளியாகி 71 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காஞ்சனா என்றால் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா ஹாரர் சீரிஸ் படங்கள் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்குவரும். அந்தளவு அந்த சீரிஸ் தமிழில் பிரபலம். தனது மற்ற படங்கள் தோல்வியடையும் போது, காஞ்சனா சீரிஸின் புதிய படத்தை எடுப்பது லாரன்ஸின் வழக்கம். இப்போதும் அடுத்த காஞ்சனா சீரிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழில் 1952 இல் காஞ்சனா என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. குடும்பக்கதையான இதனை எஸ்.எம்..ஸ்ரீராமுலு நாயுடு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மலையாளத்தில் தயாரித்து, இயக்கினார். பிரதான வேடங்களில் பத்மினி, லலிதா நடித்தனர். இந்தப் படத்தின் கதைக்கும், கதாபாத்திரத் தேர்வுக்கும் பின்னே ஒரு நெடுங்கதையே உள்ளது.

காஞ்சனா படத்தின் கதை எழுத்தாளர் லட்சுமி எழுதியது. இவரது இயற்பெயர் திரிபுர சுந்தரி. திருச்சி தொட்டியத்தில் 1921 இல் பிறந்தவர். அப்பா ஒரு மருத்துவர். திரிபுர சுந்தரியின் குழந்தைப் பருவம் பாட்டி, தாத்தாவுடன் கழிந்தது. தொட்டியத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். பிறகு முசிறி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அப்போது பெண்களை பள்ளிக்கூடம் அனுப்பும் வழக்கம் குறைவு என்பதால் அவரது வகுப்பில் அவரைத் தவிர வேறு எந்த பெண்ணும் கல்வி பயிலவில்லை.

ஆண்கள் மத்தியில் ஒரேயொரு பெண்ணாக உயர்கல்வியை முடித்து, திருச்சி ஹோலிக்கிராஸ் கல்லூரியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.  அதன்பிறகு சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். இரண்டாம் உலகப்போரின் போது இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சனை திரிபுர சுந்தரியின் குடும்பத்தையும் முடக்கியது.

இதையும் படிக்க |"அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்" தலையால் ஓவியம் வரைந்து அசத்திய விழுப்புரம் ஓவியர்!

மருத்துவப் படிப்பை தொடர பணம் தேவைப்பட்ட நிலையில், ஆனந்த விகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசனை சந்தித்து திரிபுர சுந்தரி உதவி கேட்டார். மாதம் மூன்று சிறுகதைகள் எழுதித் தந்தால் பணம் தருவதாக அவர் கூற, திரிபுர சுந்தரியும் லட்சுமி என்ற பெயரில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடன் இதழில் அவை தொடர்ச்சியாக வெளிவந்தன.

மருத்துவப் படிப்பு முடியும் முன்பே அவர் ஆனந்த விகடனில் நெடுந்தொடர்களும் எழுத ஆரம்பித்தார். மருத்துவரான பிறகும் அவர் எழுத்தை கைவிடவில்லை. அப்படி ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்களில் ஒன்று, காஞ்சனையின் கனவு. இந்தத் தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கதையில் வரும் இரு பிரதான பெண் கதாபாத்திரங்களும் வாசகர் மனதில் ஆழப்பதிந்துப் போயின. லட்சுமியிடம் இந்தத் தொடருக்கான உரிமையை வாங்கி எடுத்தப் படம்தான் காஞ்சனா.

காஞ்சனையின் கனவு தொடராக வெளிவந்த போது, வாசகர்கள் லட்சுமியிடம் கதையில் வரும் பிரதான பெண் கதாபாத்திரத்தை பத்மினி, லலிதா இருவரில் யாரை மனதில் வைத்து எழுதினீர்கள் என கேட்டுள்ளனர். அதனால், ஸ்ரீராமுலு நாயுடு கதையின் உரிமையை வாங்கிய போது, பிரதான கதாபாத்திரங்களில் பத்மினி, லலிதா இருவரையும் நடிக்க வைக்கும்படி லட்சுமி அவரை கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்களையே படத்தில் நடிக்க வைத்தார்.

காஞ்சனா படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் லலிதா நடித்தார்.

அவரது கணவர் ஒரு ஜமீன்தார். அவர் திருமணத்துக்கு முன்பிருந்தே காதலித்து வரும் பெண் பானுமதியாக பத்மினி நடித்தார். கதைப்படி இவர் ஒரு நாட்டியக்காரர். பானுமதியை மட்டுமின்றி அந்த ஊருக்கு வரும் பெண் மருத்துவரையும் ஜமீன்தார் காதலிப்பார். ஆனால், அந்த மருத்துவர் வேறொருவரை காதலிப்பாள். ஜமீன்தாரின் தொந்தரவிலிருந்து தப்பிக்க வேறு ஊருக்கு சென்றுவிடுவாள். அதேநேரம், புதிய மில்லியின் கட்டுமானத்தால் ஜமீன்தாருக்கு பொருளாதாரப் பிரச்சனை ஏற்படும்.

அவர் இந்த கோபத்தை மனைவியுடம் காண்பிக்க, அவள் - காஞ்சனா - வீட்டைவிட்டு வெளியேறுவாள். இறுதியில் பானுமதி மரணமடைய, பெண் மருத்துவர் தனது காதலனை மணக்க, ஜமீன்தார் மீண்டும் காஞ்சனாவை தன்னுடன் அழைத்துக் கொள்வதுடன் கதை முடியும்.

இதில் ஜமீன்தார் புஷ்பநாதனாக கே.ஆர்.ராமசாமி நடித்திருந்தார். அவரை கெடுக்கும் நண்பன் கதாபாத்திரத்தில் எம்.என்.நம்பியார் நடித்தார்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த போது வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற கதை, திரைப்படமாக வெளிவந்த போது ரசிகர்களை கவரவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படம் சுமாராகவே போனது.

top videos

    வெற்றி பெற்ற தொடர்கதைகள் வெற்றிகரமான சினிமாவாக எந்த உத்தரவாதமும் இல்லை என்பதற்கு காஞ்சனா சிறந்த எடுத்துக்காட்டு. 1952 மே 1 ஆம் தேதி வெளியான காஞ்சனா இன்று 71 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

    First published:

    Tags: Classic Tamil Cinema