முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சரோஜாதேவியை அறிமுகப்படுத்திய ஹொன்னப்ப பாகவதர்

சரோஜாதேவியை அறிமுகப்படுத்திய ஹொன்னப்ப பாகவதர்

ஹொன்னப்ப பாகவதர்

ஹொன்னப்ப பாகவதர்

ஹொன்னப்ப பாகவதர் கன்னடத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்தார். தனது இரு மகள்களின் பெயரில் லலித கலா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தை தயாரித்து, நடித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹொன்னப்ப பாகவதர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். ஹொன்னப்ப என்ற பெயரே, அவர் யார் என்பதை காட்டிவிடும். ஆரம்பகால திரைநட்சத்திரங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட திறமைகளை கொண்டிருந்தனர். ஹொன்னப்ப பாகவதரும் பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்துறை வித்தகராக இருந்தார்.

குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடக சபா கன்னடத்தின் முக்கியமான நாடக சபாக்களில் ஒன்று. 1930 இல் இந்த நாடக சபாவில் ஹொன்னப்ப பாகவதர் தன்னை இணைத்துக் கொண்டு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். சினிமா பிரபலமான போது, நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்.

அந்தக் காலத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்கள் மதராஸ் பிரசிடென்ஸியை மையப்படுத்தியே இயங்கின. அதனால், இந்த மூன்று மொழிகளில் நடித்தவர்களுக்கும் தமிழ் அணுக்க மொழியாக இருந்தது. தெலுங்கிலிருந்து நாகேஸ்வரராவும், மலையாளத்திலிருந்து பிரேம் நசீரும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே ஹொன்னப்ப பாகவதர் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

ஹொன்னப்ப பாகவதருக்கு பாகவதர் பட்டத்தை சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்த, சேலம் சங்கீத ரசிகர்கள் சபா அளித்தது. இதிலிருந்தே அவருக்கும் தமிழ்நாட்டிற்குமான பந்தத்தை அறிந்து கொள்ளலாம். தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி படத்தில் ஹொன்னப்ப பாகவதரும் நடித்தார். கிருஷ்ணகுமார், ரதி சுகன்யா, அருந்ததி, வால்மீகி, ஸ்ரீமுருகன், குணசாகரி, பர்மா ராணி, பக்தகும்பாரா, மகாகவி காளிதாசா, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ஆகியவை இவர் நடித்த தமிழ்ப் படங்களில் சில. இதில் பல படங்களில் அவர் நாயகனாக நடித்திருந்தார்.

கன்னட பைங்கிளி என்ற பட்டப்பெயருடன் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த சரோஜாதேவியை இவர்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். சரோஜாதேவியின் பூர்வீகம் பெங்களூரு. அவரது தந்தை பைரப்பா ஒரு காவல்துறை அதிகாரி. தனது மகளுக்கு ராதாதேவி கவுடா என பெயர் வைத்து, இளம் வயதிலேயே அவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தார். ராதாதேவி கவுடாவின் 17 வது வயதில் ஹொன்னப்ப பாகவதர் தனது மாகாகவி காளிதாசா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்தார். அதுதான்  அவர்  சரோஜாதேவியாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறக்க காரணமாக அமைந்தது. இதேபோல் தமிழில் பிரபல நட்சத்திரமாக உயர்ந்த பண்டரிபாயையும் ஹொன்னப்ப பாகவதர்தான் அறிமுகப்படுத்தினார்.

1955 இல் வெளியான ஹொன்னப்ப பாகவதரின் மகாகவி காளிதாசா மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த வருடத்தின் சிறந்த கன்னடத் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. பிறகு இந்தப் படம் தெலுங்கில் நாகேஸ்வரராவ் நடிப்பிலும், தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பிலும் ரீமேக் செய்யப்பட்டது.

ஹொன்னப்ப பாகவதர் கன்னடத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்தார். தனது இரு மகள்களின் பெயரில் லலித கலா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தை தயாரித்து, நடித்தார். இதனைத் தொடர்ந்து நீங்க நல்லாஇருக்கணும் என்ற படத்தை அறிவித்தார். படத்தின் போஸ்டரும் வெளியானது. ஆனால், படம் திரைக்கு வரவில்லை.

Also read... எப்படி இருக்கிறது கஸ்டடி படம்? ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் புகழ்பெற்ற போதிலும் நாடகம் மீதான ஹொன்னப்ப பாகவதரின் தாகம் தீரவில்லை. சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டபின், 1960 இல் உமா மகேஸ்வரா என்ற நாடகக் குழுவைத் தொடங்கி பல நாடகங்களை அரங்கேற்றினார். 1992 அக்டோபர் 2 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.

ஆரம்பகால தமிழ் சினிமாவில் வேற்று மொழியினரும் சிறப்பான பங்களிப்பு செலுத்தினர். அவர்களில் கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட ஹொன்னப்ப பாகவதர் முக்கியமானவர் . நீங்க நல்லா இருக்கணும் படம் திட்டமிட்டபடி வெளிவந்திருந்தால், மேலும் பல தமிழ்ப் படங்களை அவர் தயாரித்திருக்க வாய்ப்பு இருந்தது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema