1955 இல் ஏழையின் ஆஸ்தி திரைப்படம் வெளியானது. தமிழ்ப் படம்தான், ஆனால், பணியாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்குப் பேசும் கலைஞர்கள். தெலுங்கிலும் படம் வெளியானது ஒரு காரணம்.
ஏழையின் ஆஸ்தி ஒரு நாயகி மையப் படம். 1952 இல் வளையாபதி படத்தில் அறிமுகமான சௌகார் ஜானகி அதற்கு முன்பே தெலுங்கில் நடிக்க ஆரம்பித்திருந்தார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட அவர் தமிழில் அறிமுகமான பின்பும் அதிகளவில் தெலுங்குப் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தார். அவரை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு ஏழையின் ஆஸ்தி எடுக்கப்பட்டது. டி.எல்.ராமச்சந்தர் படத்தை இயக்க, கும்மடி என்கிற கும்மடி வெங்கடேஸ்வர ராவ் சௌகார் ஜானகியுடன் நடித்தார். ராஜநல காளீஸ்வர ராவ், ஜக்கைய்யா என உடன் நடித்தவர்களும் தெலுங்குக் கலைஞர்களே.
ஏழையின் ஆஸ்தியை தயாரித்த ஹெச்.எம்.ரெட்டி இன்னொரு தெலுங்கு பிரபலம். தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். 1931 இல் காளிதாஸ் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாரித்து, இயக்கினார். இதுவே இந்தியாவின் முதல் பன்மொழித் திரைப்படமாக (மல்டிலிங்குவல்) கருதப்படுகிறது. தெலுங்கின் முதல் பேசும் படமான பக்த பிரகலாதாவை (1932) தயாரித்து, இயக்கியவரும் இவரே.
இப்படி பல முக்கியமான கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ஏழையின் ஆஸ்திக்கு டி.ஏ.கல்யாணம், ஜி.நடராஜன் இணைந்து இசையமைத்தனர். படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவரான குகன் பாடல்கள் எழுதினார். மொத்தம் இடம்பெற்ற எட்டு பாடல்களில் ஏ.எம்.ராஜா பாடிய அன்னையை போலே முன்னறி தெய்வம் பாடலும், ஏ.பி.கோமளா பாடிய சுப மங்களம் பொங்கிடும் நாளே பாடலும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டது. முக்கியமாக ஏ.பி.கோமளாவின் குரலுக்கு அப்போது ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் தனது 11 வது வயதில் திரைப்படங்களுக்கு பின்னணி பாட ஆரம்பித்தார். 1949 வெளியான அண்ணாவின் வேலைக்காரி படத்தில் இடம்பெற்ற, உலகம் பலவிதம் பாடலே இவரது முதல் முழுப்பாடல் எனக் கூறப்படுகிறது. அதை பாடியபோது கோமளாவின் வயது 13. இந்தப் பாடலின் பிரபலம் கோமளாவையும் சிறந்த பின்னணிப் பாடகி வரிசையில் சேர்த்தது.
தமிழில் சினிமா பேச ஆரம்பித்து 20 - 25 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்தப் படங்களின் பிரதிகளும்கூட இப்போது பார்க்கக் கிடைப்பதில்லை. பலநூறு படங்கள் பிரதிகள் இல்லாமல் அழிந்துவிட்டன. அப்படி பிரதிகள் இல்லாமல் வெறும் ஆவணத்தில் மட்டுமே இடம்பெற்ற படங்களில் ஏழையின் ஆஸ்தியும் ஒன்று. இதன் பாடல்களில் சில ஒலிவடிவில் கேட்கக் கிடைக்கின்றன.
ஏழையின் ஆஸ்தி 1955 மார்ச் 28 திரைக்கு வந்தது என்றும் இல்லை ஏப்ரல் 14 வெளியானது என்றும் இருவேறு தகவல்கள் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema